சிபாரிசு

இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.
அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.
பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.
இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.
எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.
தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.
இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’
இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.
அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.
அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.
ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.
பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.
பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.
’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’
அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’
’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.
அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.
திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’
நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.
‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’
எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?
அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.
எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?
‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’
இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’
‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’
திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?
காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’
அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.
திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.
இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!
ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.
மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’
இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’
மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.
எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?
‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’
அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.
அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.
கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’
அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.
அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.
பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?
திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.
ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட, இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!
துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.
இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.
அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.
அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.
சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.
நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
அன்புள்ள திரு. திவாகரன்,
நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.
இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்
இப்படிக்கு,
பெரிய பெருமாள்
சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.
திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.
ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.
உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.
அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?
உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.
அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.
அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.
மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.
அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.
ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!
***
என். சொக்கன் …

எழுதியவர் : என். சொக்கன் (2-Sep-15, 12:57 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : sibaarisu
பார்வை : 283

மேலே