சேருமிடம்
‘இந்த ரயில் மைசூருக்குப் போகுமா ?’
தெளிவான கன்னடத்தில் அவர் நிறுத்தி, நிதானித்துதான் கேட்டார். என்றாலும், எனக்கு சரியாய்ப் புரியவில்லை. காரணம், ஒரு வார்த்தைக்கும், இன்னொரு வார்த்தைக்கும் இடையில் அவர் விடுத்த அதீத இடைவெளிதான் – ரயில் நன்றாக வேகம் பிடித்திருந்த காரணத்தால், அந்த இடைவெளிகளில் ஜன்னலோரக் காற்று தாராளமாய்ப் புகுந்துகொள்ள, ‘மைசூர்’ என்பதைத்தவிர, வேறேதும் எனக்கு அர்த்தமாகவில்லை.
‘என்ன கேட்டீங்க ?’, அவருடைய முகத்தை நெருங்கினாற்போல் விசாரிக்கையில், குப்பென்று மதுபான வாடை என்னைத் தாக்கியது. சட்டென விலகி, என் இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.
‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே ?’, அவர் மீண்டும் நிதானமாய்க் கேட்டார்.
‘இல்லைங்க, இது தஞ்சாவூர் போற வண்டி !’, அவசரமாய்ச் சொன்னேன் நான், ‘மைசூர் பாஸஞ்சர் ஆறே முக்காலுக்குப் போயிருக்குமே சார், நீங்க ட்ரெயின் மாறி ஏறிட்டீங்கன்னு நினைக்கறேன் !’
‘அப்படியா ? சரி சரி !’, அவர் பெரிதாய்த் தலையாட்டிவிட்டு, ஜன்னலை ஒட்டினாற்போல் சாய்ந்துகொண்டார்.
அவருடைய நிதானத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. பெங்களூரிலிருந்து, மைசூருக்குச் செல்லவேண்டியவர், வேறொரு கோடியிலிருக்கிற தஞ்சாவூருக்குப் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதுகுறித்த சிறு பதட்டமும் அவரிடம் இல்லை.
நானாக அவரருகே குனிந்து, சாராய நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டபடி கன்னடத்தில் கேட்டேன், ‘சார், நீங்க எங்கே போகணும் ?’
‘மைசூருக்கு !’
‘இந்த ரயில் மைசூர் போகாதுங்களே !’
‘சரி !’, முகத்தில் சிறு சலனமும் இல்லாமல் சொன்னார் அவர்.
அதற்குமேல் அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய தோல்வியை முகபாவத்தில் காட்டிக்கொள்ளாமல், பழையபடி சரிந்து அமர்ந்துகொண்டேன். ஆனாலும், பார்வையை அவரிடமிருந்து விலக்கமுடியவில்லை.
ஜன்னலுக்கு வெளியே அதிவேகமாய் விரையும் கட்டிடங்களை வெறித்துக்கொண்டிருந்தவருக்கு, சுமாராய் அறுபது வயது கடந்திருக்கவேண்டும், கட்டுப்பாடின்றி நடுங்கும் உடல், அழுக்கான உடை, ரப்பர் செருப்பு, முகத்தில் பல நாள் தாடி – அவருடைய கறுத்த முகத்தில், அந்த வெள்ளைத் தாடி, ஒட்டப்பட்டதுபோல் துருத்திக்கொண்டு தெரிந்தது.
நெடுந்தூரப் பயணிகள் நிறைந்திருந்த அந்த ரயிலுடன், கொஞ்சமும் பொருத்தமற்றவராய்த் தெரிந்தார் அவர். கையில் பெரிய பெட்டியோ, பையோ இல்லை, தண்ணீர் பாட்டில் இல்லை, கண்களில் முன்னிரவுத் தூக்கம் நிறைந்திருக்கவில்லை.
மோனத்தவத்தில் ஆழ்ந்திருக்கிறவர்போல் கண்மூடி அமர்ந்திருந்த அவரைப் பார்க்கப்பார்க்க, என்னுடைய பதட்டம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது – மைசூருக்குச் செல்லவேண்டியவர், இப்போது தஞ்சாவூருக்குப் போய் என்ன செய்யப்போகிறார் ? இவருக்குத் தமிழ் தெரியுமா ? அங்கிருந்து எப்போது, அல்லது எப்படி மைசூர் திரும்புவார் ? அதற்குத் தேவையான காசு இவரிடம் இருக்குமா ? பயணத்தின் இடையே, யாரேனும் டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் என்ன செய்வார் இவர் ? அவர்கள் இவரை ஒழுங்காய் விசாரித்து, சரியாகப் புரிந்துகொண்டு, மைசூர் ரயிலுக்கு மாற்றிவிடுவார்களா ? அல்லது நடுப்பாதையில் எங்கேனும் புறக்கணித்துவிடுவார்களா ?
கேள்விகளின் கனம் தாங்கமுடியாமல், மீண்டும் நானே என் தயக்கத்தை உடைக்கவேண்டியிருந்தது, ‘சார், நாம இன்னும் பெங்களூர் தாண்டலை, நீங்க இந்த ஸ்டேஷன்-ல இறங்கிடுங்க, அடுத்த மைசூர் வண்டி எப்போ வரும்-ன்னு விசாரிச்சுகிட்டு, அதிலே போயிடலாம் நீங்க !’, என்றேன் அவரிடம்.
‘சரி !’, என்றார் அவர். இதைச் சொன்னபோது, அவருடைய முகத்தின் வெறுமை, என்னை ஓங்கி அறைவதுபோலிருந்தது.
என்ன மனிதர் இவர் ? ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தையைத்தவிர, வேறேதும் பேசமாட்டேன் என்று ஏதேனும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாரா ? தான் செய்துவிட்ட தவறின் தீவீரம் புரியவில்லையா ? அல்லது, புரிந்தும் அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறாரா ?
ஆச்சரியத்தோடு அவரைக் கூர்ந்து பார்த்தேன் நான். அவரிடம் தெரிவது குடிகாரக்களையா, அல்லது சாமியார்க்களையா என்று என்னால் சரியாக ஊகிக்கமுடியவில்லை. ஆனால், அந்த முகத்தின் சலனமின்மை, ‘இந்த உலகத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை, இங்கே நடப்பவற்றுடன் எனக்கான தொடர்பு முறிந்துவிட்டது. அதிர்ச்சி, சோகம், சுகம், சந்தோஷம், நகைச்சுவை, கண்ணீர் ஆகிய உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் !’, என்று அறிவிப்பதைப்போலிருந்தது.
நான் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. நீண்ட பிளாட்ஃபாரத்தை ஒட்டினாற்போல் ஊர்ந்த ரயில், வேகம் குறைந்து நின்றதும், நான் அவரைப் பார்க்க, அவர் சட்டென்று எழுந்துகொண்டார். விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தார்.
இப்போதுதான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. எப்படியும் பெங்களூரிலிருந்து, மைசூருக்கு இன்னொரு ரயில் இருக்கும், இந்தப் பெரியவர் சரியாக ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார் என எண்ணிக்கொண்டேன்.
பெருமூச்சோடு, நான் என் கால்களை நன்றாக முன்னே நீட்டி அமர்கையில், சட்டென்று எதிலோ இடித்துக்கொண்டேன். குனிந்து பார்த்தால், ஒற்றைச் செருப்பு – அந்தப் பெரியவருடையது.
‘சார், சார் !’, நான் வாசலைப் பார்த்துக் கத்தினேன், ‘ஒரு செருப்பை விட்டுட்டீங்க, பாருங்க !’
இறங்கத் தயாராய், கதவருகே நின்றிருந்த அவர் நம்பிக்கையில்லாமல் கீழே குனிந்து பார்த்தார், வலது காலில்மட்டும் செருப்பு இருந்தது.
முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்போ, எனக்கு நன்றி சொல்லும் பாவனையோ ஏதுமில்லாமல், விறுவிறுவென்று, அவருடைய பழைய இருக்கைக்கு நடந்துவந்தார், அங்கே கிடந்த செருப்பில் இடது காலை நுழைத்துக்கொண்டார், சட்டென்று அங்கேயே துவண்டு அமர்ந்துவிட்டார்.
நான் திகைப்போடு அவரைப் பார்த்துக்கொண்டிருக்கையில், ரயில் நகரத்துவங்கிவிட்டது, ‘ஐயோ, நீங்க இங்கே இறங்கணும் சார் !’, என்று அனிச்சையாய்க் கத்தினேன் நான்.
என் படபடப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை. ஏதோ ஒரு வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் நிதானமாக என்னைக் கூர்ந்து நோக்கியவர், ‘இந்த ரயில் மைசூருக்குப் போறதுதானே ?’, என்றார்.
*******
அன்றைக்கு எங்கள் பெட்டியில் வெளிச்சம் மிகக் குறைவாய் இருந்தது. மங்கலாய் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு விளக்குகளும்கூட, மெல்லமெல்ல சுரத்துக் குறைந்துகொண்டேயிருந்தன. குழல் விளக்குகளின் வெளிச்சம் சுருங்கிச் சிறுத்து, இரவு விளக்கின் ஒளியளவு ஆகியிருந்தது.
அந்தக் குறைவெளிச்சத்தில், அவரைப் பார்க்கையில், என்னுடைய கற்பனைகளும், கவலைகளும் பலமடங்கு பெருகிவிட்டன – பெங்களூரைக் கடந்து ரொம்ப தூரம் வந்தாகிவிட்டது, அநேகமாய் வண்டி தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்திருக்கக்கூடும், இனிமேல் இந்தப் பெரியவரின் நிலைமை என்னாகுமோ ? இவர் மீண்டும் மைசூருக்குத் திரும்ப முடியுமோ, முடியாதோ !
என்னருகே அமர்ந்திருந்த ஒருவர், அந்தப் பெரியவரைச் சுட்டிக்காட்டி, கட்டைவிரலால் குடிப்பதுபோல் சைகை காட்டினார். நானும் சம்மதமாய்த் தலையாட்டினேன். இருவரும் மெலிதாய் உச்சுக்கொட்டிக்கொண்டோம்.
‘பெரிய ஸ்டேஷன்கள்ல இது ஒரு தொல்லை சார், ஒரே நேரத்தில பத்து ரயில் கிளம்புதா, யாராச்சும் இப்படித் தவறி ஏறிடறாங்க !’, என்றார் அவர். புரிதலும், அனுதாபமும் கலந்த அவரது பார்வை, என்னைப்போலவே, அந்தப் பெரியவரின்மேல், அவருக்கும் அக்கறை உள்ளதைத் தெரிவித்தது, ‘பாவம் சார், தெரியாத ஊர்ல மாட்டிகிட்டு எப்படிக் கஷ்டப்படப்போறாரோ !’
அடுத்த சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன. பின்னர், சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஹோசூர் வந்ததும், இவரைப் பிடிச்சு இழுத்து, வெளியே போட்டுடலாமா சார் ?’, பொறுக்கமாட்டாமல் கேட்டேன்.
‘ஐயோ, அதெல்லாம் தப்பு சார் !’, என்றார் அவர், ‘இது அவரோட மிஸ்டேக், அதுக்கு நாம என்ன செய்யமுடியும் ? சொல்லுங்க !’
நான் மௌனமாகிவிட்டேன். இவர் சொல்வதும் நியாயம்தான். ஆனால், அந்தப் பெரியவர் செய்தது தவறா, அல்லது அறியாமையா ? விபரம் தெரியாமல் தப்பான ரயிலில் ஏறிவிட்டவர்களைக் கீழே இறக்கிவிடுவது யாருடைய பொறுப்பு ?
ரிசர்வேஷன் பெட்டியானால், ரயில் அதிகாரிகள் யாராவது வருவார்கள், அவர்களிடம் விபரத்தை எடுத்துச்சொல்லி, ஏதேனும் உதவக் கேட்கலாம். ஆனால், இருண்டுகிடக்கும் இந்தப் பொதுப்பெட்டியை, அவர்களில் ஒருவரும் சீண்டப்போவதில்லை. இப்போது நாம் என்ன செய்யவேண்டும் ? என்னதான் செய்யமுடியும் ?
நான் அவரையே பரிதாபமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். தஞ்சாவூர்ப் பெரிய கோவில் வாசலில், ‘மைசூர் வண்டி எங்கே, எப்போ வரும் ?’, என்று அவர் கன்னடத்தில் கதறிக்கொண்டிருப்பதுபோலவும், போகிற, வருகிறவர்களெல்லாம், அவர்மேல் பிச்சைக் காசுகளை வீசி எறிவதுபோலவும் ஒரு பிம்பம் எனக்குள் தோன்றி, விடாமல் அலைக்கழித்தது.
என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர், என்னுடைய மனக் குழப்பங்களைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும், ‘இதை நினைச்சு, நீங்க ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்க சார் !’, என்று சிரித்தபடி சொன்னார் அவர், ‘இந்தப் பிரச்சனைக்கு இன்னொரு கோணமும் இருக்கு !’
‘என்னது ?’, ஆர்வமில்லாமல் கேட்டேன்.
அவர் மிகச் சாதாரணமான தொனியில், ஒரே ஒரு கேள்வி கேட்டார், ‘இந்தப் பெரியவர், மைசூருக்குப் போகவேண்டியவர், தெரியாம, தஞ்சாவூர் வண்டியில ஏறிட்டார்-ன்னு நாம எல்லாரும் நினைக்கறோம், ஆனா, உண்மையிலேயே அவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவரா இருந்தா ?’
நான் அவரை லேசான ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தேன், ‘நீங்க என்ன சொல்றீங்க சார் ? எனக்கு சரியாப் புரியலை !’
அவர் மெலிதாய்ச் சிரித்தபடி, கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார், ‘அதாவது சார், இப்போ இந்தப் பெரியவர் விஷயத்தில ஏதோ குழப்படி நடந்திருக்கு-ன்னுமட்டும் நமக்குத் தெளிவாப் புரியுது ! ஆனா, அந்தக் குழப்பம் எது-ன்னு நம்மால சரியாச் சொல்லமுடியாது – இவர் மைசூருக்குப் போகவேண்டியவர், தப்பான ரயில்ல ஏறியிருக்கார்-ங்கறது ஒரு சாத்தியம், இவர் தஞ்சாவூருக்குப் போகவேண்டியவர், சரியான ரயில்ல ஏறிட்டு, குடிபோதையில, இப்போ நம்மகிட்டே ‘மைசூர்’ன்னு தப்பான ஊர் பேரைச் சொல்லி விசாரிக்கறார்-ங்கறது இன்னொரு சாத்தியம், இல்லையா ?’
ஏதோ கொஞ்சமாய்ப் புரிவதுபோலிருந்தது, மையமாய்த் தலையாட்டிவைத்தேன்.
‘அதனாலதான் சொல்றேன், நீங்க இந்தக் கோணத்திலிருந்து கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க, இப்போ நீங்க அடுத்த ஸ்டேஷன்-ல இவரைக் கீழே இறக்கிவிட்டுடறீங்க-ன்னு வெச்சுப்போம், இவர் ஒருவேளை நிஜமாவே தஞ்சாவூர் போகவேண்டியவரா இருந்தா, நீங்க செஞ்சது தப்பு-ன்னு ஆயிடும், இல்லையா ?’
‘ஆ – ஆமாம்’, திணறலாய்ச் சொன்னேன் நான், எதிர் இருக்கையில் கவிழ்ந்து அமர்ந்திருந்த அந்த தாடிக்காரரை உன்னித்துப் பார்த்தபடி, ‘இப்போ நாம என்னதான் பண்றது ?’
‘அதான் சொன்னேனே சார், இதிலே நாம பண்ணக்கூடியதுன்னு ஒண்ணுமே இல்லை, நான் சொன்ன ரெண்டு தப்பிலே, எந்தத் தப்பு நடந்திருக்கு-ன்னு முடிவுபண்றதுக்கு நாம யாரு ? அதை அவர்கிட்டேயே விட்டுடுங்க !’
‘எவர்கிட்டே ? கடவுள்கிட்டேயா ?’
அவர் பெரிதாய்ச் சிரித்தபடி, ‘கடவுளை ஏன் சார் இதிலே இழுக்கறீங்க ?’, என்றார், பின்னர் அந்தக் குடிகாரப் பெரியவரைச் சுட்டிக்காண்பித்து, ‘இந்தக் கிழவர் ரயில் ஏறினதிலே தப்பு செஞ்சிருந்தா, அதுக்கான கஷ்டத்தை அவர் அனுபவிச்சாகணும், இல்லைன்னா, நாளைக்குக் காலையில குடிபோதை தெளிஞ்சப்புறம், சந்தோஷமா தஞ்சாவூர்ல இறங்கி, வீட்டுக்குப் போகட்டும் ! அவ்ளோதான் !’
இப்படிச் சொல்லிவிட்டு, பையிலிருந்து ஒரு காற்றுத் தலையணையை எடுத்து ஊதத்துவங்கினார் அவர். உட்காரும் இருக்கைகளுக்கு மேலே, துண்டு விரித்து ரிசர்வ் செய்திருந்த பகுதியில் ஏறிப் படுத்துக்கொண்டார்.
எனக்குத் தூக்கம் வரவில்லை, அவர் சொன்னதைத் திரும்பத்திரும்ப அசைபோட்டவாறு, ஜன்னலுக்கு வெளியே வெறித்துக்கொண்டிருந்தேன். எதிர் இருக்கையில் அந்தப் பெரியவர், உட்கார்ந்த நிலையில் கண்மூடித் தூங்கியிருந்தார்.
ரயில் ஹோசூரில் நின்று, கிளம்பியபின், யதேச்சையாய் நிமிர்ந்து பார்த்தபோது, அவருடைய தூக்க முகத்தில், குழந்தைத்தனமான ஒரு மெல்லிய புன்முறுவல் தோன்றி மறைந்தாற்போலிருந்தது.
***
பின்குறிப்புகள்:
1. 2004 மார்ச் மாதம் எழுதிய சிறுகதை இது, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘வடக்கு வாசல்’ இதழில் பிரசுரமானது.
2. இந்தப் பழைய கதையை இங்கே மீள்பதிவு செய்யக் காரணம், ஜெயமோகன் அவர்களின் இந்த அற்புதமான கட்டுரை. இதுவும் கிட்டத்தட்ட அதேபோன்ற அனுபவம் (கொஞ்சம் கற்பனை கலந்தது) என்பதால், ஒரு வாசிப்பு அனுபவத்துக்காக இங்கே பதிவு செய்து வைக்கிறேன்
3. மேற்சொன்ன ஜெயமோகனின் கட்டுரை, எனது அத்தைக் கட்டுரையின் தொடர்ச்சிபோல் அமைந்திருப்பதாக நண்பர் டைனோ சுட்டிக்காட்டினார், இல்லாவிட்டால் ஜெயமோகனின் இந்த நல்ல பதிவைத் தவறவிட்டிருப்பேன், அவருக்கு என் நன்றி
4. அதிகாலை 1:44க்குப் பதிவு எழுதினால், அதுவும் தேவையற்ற பின்குறிப்புகள் எழுதினால், இப்படிதான் குழப்பமாக அமையும், உறங்கப்போதல் உத்தமம்
***
…