மழை

பெங்களூரில் எப்போது மழை பெய்யத் தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.
மூன்றரை மணிவரைக்கும் நன்றாக வெய்யில் கொளுத்திக்கொண்டிருக்கும், பிறகு சட்டென்று பாதரசம் இறங்கிக் குளிர் எடுக்க ஆரம்பிக்கும், ஜில்லென்று ஒரு காற்று நம்மை வருடிப்போகச் சிலிர்த்து முடிப்பதற்குள், சடசடவென்று மழை தொடங்கிவிடும்.
எங்கள் அலுவலகத்தில் எல்லா ஜன்னல்களும் இழுத்து மூடப்பட்டிருப்பதால், மழையின் சுவடுகளைக்கூட நாங்கள் தரிசிக்கமுடியாது. அலுத்துக் களைத்து வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பும்போதுதான், ‘தும்ப மழே பர்த்து சார்’ என்று அறிவிப்பார் 24X7 காவல் காரர்.
அப்போதும், எங்களுக்கு நம்பிக்கை வராது. ரிஸப்ஷன் அருகே இருக்கும் பெரிய ஜன்னலைத் திறந்து கையை நீட்டிப் பார்த்து உறுதி செய்துகொள்வோம்.
நிஜமாகவே மழை வருகிறதுதான். ஆனால் அதற்காக, அணைத்த கணினியை மீண்டும் இயக்கி வேலையைத் தொடரமுடியுமா? மனத்தளவில் வீட்டுக்குச் செல்லத் தயாராகிவிட்டபிறகு, மறுபடி அலுவலகத்துக்குள் நுழையச் சலிப்பாக இருக்கிறது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காகவே, எங்கள் அலுவலகத்தில் ஏழெட்டுக் குடைகளை வாங்கிப் போட்டிருக்கிறோம். ஜப்பானில் பார்த்த ஓர் ஏற்பாட்டை இங்கேயும் செய்தாகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து நிறைவேற்றியது அடியேன்தான்.
ஆகவே, மற்றவர்களைவிட ஒரு பங்குக் கூடுதல் பெருமிதத்துடன் குடையை எடுத்துக்கொள்கிறேன், மழையைச் சமாளித்துவிடலாம் என்கிற நம்பிக்கையுடன் படியிறங்கி நடக்கிறேன்.
சாலையில் சரேல் சரேல் என விரையும் கார்கள் என்னுடைய குடையைக் கேலி செய்கின்றன. சில நிமிட மழைக்கே ஆங்காங்கு தேங்கிவிட்ட குட்டைத் தண்ணீருக்குப் பயந்து ஒதுங்குகிறேன்.
எப்போது ரோட்டைக் கடக்கலாம் என்று நான் வேடிக்கை பார்ப்பதைத் தப்பாக நினைத்துக்கொண்டு இரண்டு ஆட்டோக்காரர்கள் பக்கம் வருகிறார்கள், ‘பேடாப்பா’ என்று அவசரமாக ஒதுக்குகிறேன்.
பெங்களூரில் சில தூறல்கள் விழுந்தாலே ஆட்டோக் கட்டணம் ஒன்றரை மடங்காகிவிடும். சிறுமழை என்றால், இரண்டு ம்டங்கு, பெருமழை என்றால் அச்சிட்ட சொத்துப் பத்திரத்துடன்தான் ஆட்டோவில் ஏறமுடியும்.
என்னைச் சுற்றிலும் மழை சுழன்றடித்துக்கொண்டிருக்கிறது. சாலையைக் கடக்கும் அளவுக்கு இன்னும் வாகன ஓட்டம் குறையவில்லை.
அந்த நேரத்தில், ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மழை, மின்னல், இடியின்போது செல்ஃபோன் பயன்படுத்தினால் ஆபத்து என்று எங்கேயோ படித்தது ஞாபக்ம் வருகிறது. நிஜமோ, வதந்தியோ தெரியவில்லை.
ஒரு கையில் குடை, இன்னொரு தோளில் லாப்டாப் பையுடன் கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து பாக்கெட்டிலிருந்த செல்ஃபோனை எடுக்கிறேன், ‘ஹலோ’
‘சார் நாங்க ….. பேங்கிலிருந்து பேசறோம், பர்ஸனல் லோன் வேணுமா சார்?’
அசிங்கமாகத் திட்டும் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘No, I Am Not Interested’ என்று பணிவாகச் சொல்கிறேன். அவர்கள் காரணம் கேட்பதற்குள் கத்தரிக்கிறேன்.
சாலையில் இப்போது போக்குவரத்து உறைந்து நின்றுவிட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் எங்கேயோ டிராஃபிக் ஜாம்.
’சந்தோஷம்’, வாகனங்களுக்கு இடையே சின்னக் குழந்தைகளின் Maze புதிர்போல நுழைந்து நுழைந்து சாலையைக் கடக்கிறேன்.
மறுமுனையில் ஒரு பிட்ஸாக் கடை, ‘வருக, வருக’ என்று அழைக்கிறது, ஷேவாகும் டெண்டுல்கரும் இங்கிலாந்தை விளாசிக்கொண்டிருக்கிறார்கள், அதை எல்சிடியில் பார்த்தபடி பிட்ஸா ருசிக்கலாம் வாருங்கள்.
நன்றாக ருசிக்கலாம்தான், பிறகு அதைக் குறைப்பதற்கு நான் பல மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க ஓடவேண்டும், No Thanks!
காற்றில் பறக்கப் பார்க்கும் குடையைச் சமாளித்துப் பிடித்தபடி தொடர்ந்து நடக்கிறேன். மெயின் ரோட்டைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மண் சாலை, அதாவது, சேறு, சகதி.
பேன்ட்டைச் சற்றே உயர்த்திப் பிடித்துக்கொண்டு நடக்க, என்னுடைய தலை, கழுத்து, இடுப்புதவிர மீதி உடல்முழுக்க நனைந்துவிட்டிருக்கிறது. ஏற்கெனவே சளி, தலைவலி, இப்போது இதுவும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான், நான் காலி.
ஆனால், மழையை என்ன செய்யமுடியும்? ‘Rain Rain Go Away’ என்று பாடினால் கேட்குமளவுக்கு மழை அப்பாவி இல்லை, ‘பெய்யாதே’ எனச் சொல்லி மழையை நிறுத்துமளவுக்கு நான் பத்தினனும் இல்லை.
மழையால் ஊருக்கெல்லாம் நல்லதுதான். ஆனால், எதிர்பாராத நேரங்களில் பெய்வதுதான் அசௌகர்யமாக இருக்கிறது.
பவர் கட்போல, மழைக்கும் கச்சிதமாக நேரம் ஒதுக்கிவிடமுடிந்தால் நன்றாக இருக்கும், அதற்கு ஏற்ப நமது தினசரி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
எப்படியோ, சிரமப்பட்டு வீடு வந்தாகிவிட்டது. தலையைத் துவட்டிக்கொண்டு, ஒரு கையில் காபி, இன்னொரு கையில் வறுத்த பொரியுடன் இளைப்பாறலாம், அதன்பிறகு பிழைத்துக்கிடந்தால் இந்த அனுபவத்தை ப்ளாக் எழுதலாம்.
குடையை மடக்காமல் வீட்டு வாசலருகே ஈரம் சொட்டவிடுகிறேன், கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், மகள் வேகமாக ஓடி வருகிறாள், ‘அப்பா, வெளிய மழை பெய்யுதுப்பா’
‘ஆமாம்மா’
‘ஏம்ப்பா வெளிச்சமே இல்லை? மழைத் தண்ணியில சூரியன் அணைஞ்சுபோச்சா?’
***

எழுதியவர் : என். சொக்கன் (2-Sep-15, 12:30 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : mazhai
பார்வை : 200

மேலே