இதயம் சிதறியதே

இதயம் சிதறியதே

அட்டைப் பூச்சிகளின்
சட்டமன்றக் கூட்டத்தில்
இழுபறிப் பந்தாக
அலைக்கழிக்கப் படுவதாய்
திட்டு திட்டாக இரத்தம்
உறைந்த வட்டத்தின் நடுவே
விலுக் விலுக்கென
துடித்து உருமாறி
அர்த்த சந்திரவடிவ வாசலில்
நர்த்தனம் ஆடும் குருதி குமிழியிட
படபடவென இறக்கைகள்
கொண்ட குதிரையாய்
பறக்க முயன்று அமைதியாகி
வடிவம் மாறிய பொழுதில்
தலையைத் திருப்பி நோக்கும்
கலையெழில் புறாவாக
நினைவுப் புழுக்களைக்
கொத்தியும் கொறித்தும்
தத்திப் பறந்து போவதும்
தலையெது வாலெது
எனப் புரியாத
எறும்புக் கூட்டமாய்
உறுத்திடும் வலியது
அறுத்தது தமனியை;
ரத்த ஓட்டம் தடைப்பட,
தட்டுத் தடுமாறியும்,
திட காத்திரனான என்னை
சடுதியில் தரையில் வீழ்த்திட
குண்டாய் வெடித்த இதயம்
துண்டாகி வெளியில்
தத்தளிப்பது கண்டு--
காதலில் தோல்வியோ!
குடும்ப பாரமோ!
கடன் தொல்லையோ!
குடிகார நாயோவென!
நாலு பேர் என்னை
நல்லபடி விமர்சித்த போதும்
இறக்காத என் இதயம்
அவளென்னைப் பார்த்த
அந்தப் பார்வையில்
சுக்கு நூறாய் சிதறியது.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (2-Sep-15, 1:23 pm)
பார்வை : 56

மேலே