நன்றி உள்ள ஜென்மம்

முத்தான முத்தாக
உன் வயிற்றில் பிறக்க
என்ன தவம் செய்தேன்
அன்புக்கு குறைவில்லை
அணைப்புக்கு குறைவில்லை
கருவில் இருந்து வெளியே
வரமுன் நானிருந்த
உன் உதரம் என் சொர்க்கம் ,
உன்னை வெறும் சிப்பி
என்று உலகம் சொல்ல
என் மனம் பொறுக்கவில்லை
ஆனால் என்னை மட்டும்
வாரி எடுத்து வகை வகையாய்
தங்கமதில் பதித்து வைத்து
அழகு பார்த்து புகழும் போது
நான் என்னை நினைக்கவில்லை
என்னில் உன்னைக் காண்கின்றேன்
முத்தென்றால் முத்தோ
முதுகடலின் ஆணி முத்தோ
என்று வாயாரப் புகழும் போது
எனக்கல்ல அப்புகழ்ச்சி
என்னை ஈன்ற சிப்பிக்கம்மா
நான் இருந்தால் தான் தங்கமே ஜொலிக்கும்
ஏன் ஏதனால் எப்படி இந்த முத்து இப்படி அழகு
என்றெல்லாம் கேள்விக்கு என் ஒரே பதில்
என்னை ஈன்ற சிப்பி நீயே
எதற்கும் தாய் உண்டு அந்தத்
தாய் எனக்கும் உண்டு
பெற்றவளை மறந்தால் செத்தவனே
தாய் இல்லாமல் நான் இல்லை
அவளின்றி என் அழகில்லை என் ஜொலிப்பில்லை
நன்றி உள்ள ஜென்மம் நான் ,

எழுதியவர் : பாத்திமா மலர் (3-Sep-15, 11:37 am)
Tanglish : nandri ulla jenmam
பார்வை : 109

மேலே