கடவுள் வாழும் வீடு---கயல்விழி

கடவுள் வாழும் வீடு
-----------------------------
அந்தி மயங்கும் வேளை. கதிரவன் தன் கதிர்வீச்சின் தாக்கத்தினை படிப்படியாக குறைத்துக்கொண்டு சந்திர குளிர்ச்சிக்கு வழி விட்டுக்கொண்டிருந்தான்.

இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்தார் சாந்தி. வேலைக்கு சென்றிருக்கும் அவரது கணவரும் பிள்ளைகளும் வீடு திரும்பும் நேரம் என்பதால் அவர்களுக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தார். தன் பெயருக்கு ஏற்றால் போல மிகுந்த அமைதியும் சாந்தமும் கொண்டவர். எந்த ஒரு விடயத்தினையும் ஆராய்ந்து அறிவு பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர். தனது கணவன் ராஜ்குமார் மற்றும் பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசத்தினை வாரி வழங்குபவர். அவர்கள் தான் தனது உலகம் என வாழும் ஒரு சிறந்த தாய். மூத்தவள் மிதுனா. திருமணம் முடித்து கணவனுடன் அவளது சீதன வீட்டில் வாழ்கிறாள். அடுத்து பிறந்தவர்கள் தான் கதிரேசன் மற்றும் இளங்கோ.

"அம்மா... அப்பா வந்திட்டாரா...?" கதிர் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.
"இல்லைடா... இண்டைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் என்று போன் பண்ணி சொன்னவர்... ஏன் கேட்கிறாய்...?"
"இல்லை சும்மா தான். அவர் தான் ஊரில இல்லா வேலை பார்க்கிறவர் ஆச்சே..."
"கதிர் வந்திட்டானா...?" மிதுனா வந்தாள்
"ஓ... இப்பதான் வந்தவன். நீ என்னடி இந்த நேரத்தில வந்திருக்கிறாய்...?" ஆச்சரியத்தில் தாய் கேட்க
"கதிர் தான் வரச் சொன்னவன்..."
நேரே கதிரின் அறியினுள் சென்றாள். உள்ளே இளங்கோவும் கடுமையாக யோசித்தவாறு இருந்தான்.
”என்ன கதிர்... எதுக்கு அவசரமாக வர சொன்னனி...?" - மிதுனா
பின்னாலயே தாயும் உள்ளே சென்றார்.
"எல்லோரும் ஒன்று கூடி இருக்குறீங்களே... என்ன பிரச்சனை..." தாய் கேட்டார்.
அனைவரும் கதிரின் முகத்தை பார்த்தனர்.
"எல்லாம் நம்ம அப்பா பண்ணுற வேலை தான்..." கதிர் கூற
"என்னடா சொல்லுற..." தாய் கோபத்துடன் கேட்டார்.
"கோபப்படாதைமா... உணமையைதான் சொல்லுறன்... " என கூறியவன்
"இண்டைக்கு எங்க கூட வேலை செய்யிற ஒருத்தனுடைய தாயை பார்க்க புற்றுநோய் வைத்தியசாலைக்கு போனனாங்கள்... அங்கதான் பார்த்தன் அந்த கொடுமையை..."
"என்ன பார்த்தனி... தெளிவா சொல்லு..." - மிதுனா
"யாரோ ஒரு ஆன்ட்டிக்கு அப்பா சாப்பாடு கொடுக்கிறார். அதுவும் அம்மா கஷ்டப்பட்டு அப்பாவுக்கு சமைச்சு கொடுக்கிற சாப்பாட்டை அவங்களுக்கு கொடுக்கிறார். தண்ணீர் எல்லாம் வாங்கிகொடுத்து பார்த்துக்கிறார். பக்கத்தில இருக்குறவங்க கிட்ட விசாரிச்சன். ரெண்டு மாசத்துக்கு மேலாக வந்து போறாராம்...." கதிர் கூறும் போதே இளங்கோவும் மிதுனாவும் கோபத்தின் உச்சத்துக்கு சென்றனர்.
"இண்டைக்கு அப்பா வரட்டும். ரெண்டில ஒன்று பார்க்கிறன்." கர்ஜித்தாள் மிதுனா
"அம்மா... நீ ஒன்றையும் யோசிக்காதை... நாங்கள் இருக்குறோம்... பார்த்துக்குறோம்..." இளங்கோ தாயை சமாதானபடுத்தினான்.

சிறிது நேரம் யோசித்த சாந்தி,
"எனக்கு இது முதலே தெரியும். யாரும் இதைப் பற்றி அப்பாகிட்ட கேட்க வேண்டாம்..."
அனைவரும் வியப்புடன் தாயை பார்க்க
"என்னமா சொல்லுற... முதலே தெரியும்மா... அப்பவேன் அப்பாட சட்டையை பிடிச்சு கேட்க்கலை..." மிதுனா ஆச்சரியத்தோட கேட்டாள்.

"உங்களுக்கு தெரிய வேண்டாம் என்று தான் இதை பற்றி யாரு கிட்டயும் கதைக்கல... ஏன் உங்க அப்பாவுக்கு கூட தெரியாது எனக்கு தெரியும் என்பது... இனி நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேண்டிய நேரம் தான். இதுக்கு முதல் எங்க கல்யாணத்துக்கு முதல் நடந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லுறன்...

".... எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க முதல் இவர் பரிமளா என்ற ஒரு பெண்ணை காதலிச்சிருக்கிறார். அந்த பொண்ணுக்கு உறவுகள் என்று யாருமே இல்லை. இவர் தான் அவளது உலகமாக இருந்திருக்கு. எங்க அப்பா ஊருக்குள்ள பெரியவர். பணபலம், ஆட்பலம் கொண்டவர். எங்க அப்பாவுக்கு இவரது குணங்கள் பிடிச்சு போகவே எனக்கு கேட்டிருக்கிறார். இவர் முடியாதுன்னு சொல்லவும் அந்த பொண்ணை கீழ்த்தரமான முறையில மிரட்டி இவரிடம் இருந்து விலக வைச்சிருக்காங்க... மிரட்டின விஷயம் இவருக்கும் தெரியாது... அதுக்கு பிறகு தான் நம்ம கல்யாணம் நடந்தது. எனக்கு இது எதுவுமே தெரியாது. தெரிஞ்சிருந்தால் ஒரு பெண்ணோட வாழ்க்கையை மண்ணாக்கிட்டு இங்க வந்திருக்க மாட்டன். அந்த பொண்ணு தான் நீங்க பார்த்த அம்மா... இண்டைக்கு உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் எனக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடியே எண்ட அண்ணன் கண்டிருக்கிறார். என்கிட்ட வந்து சொன்னார். அப்போதான் இந்த கதையும் எனக்கு தெரிய வந்தது. எனக்குள்ள ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்திட்ட குற்ற உணர்வு இருந்திட்டே இருந்திச்சு. அதான் எதுவும் அவர்கிட்ட கேட்கவில்லை. அண்ணாகிட்டையும் இவர்கூட இது பற்றி பேச வேண்டாம் என்றுட்டன்.

அதுக்கு பிறகு இவருக்கு அவங்களுக்கும் சேர்த்து ரெண்டு பேருக்குரிய சாப்பாடு கொடுத்தனுப்புவன். ஆபீஸ் ல வேலை செய்றவங்களுக்கு கொடுத்து சாப்பிடுங்க என்று... இவருக்கு தெரியாது எனக்கு தெரியும் என்று... நானும் காட்டிக்கொண்டதில்லை...
இந்த நிமிடம் வரை உங்க அப்பா தன்னுடைய கடமையில் இருந்து தவறவில்லை. தனது மன திருப்திக்காக செய்கிறார். இதுல தப்பொன்றும் இல்லையே. அதான் நானும் கேட்கலை... அவங்க இருக்க போறதும் இன்னும் கொஞ்ச நாள் தான். அதுவரை சந்தோசமாக இருந்திட்டு போகட்டும்."

"எல்லாம் சரிம்மா... ஆனாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் ல.... அது தப்புதானே...." மிதுனா கேட்டாள்


"இதை நான் எப்பிடி ஏற்றுக்குவேன் என்று அவருக்கு பயம் இருந்திருக்கலாம் இல்லையா..."

"ஆனாலும்... நீ கிரேட் அம்மா... எல்லோராலும் இது முடியாது..." கதிர் கூறினான்.

வெளியே சத்தம் கேட்கவே,

"சரி சரி... எல்லோரும் உங்க உங்க வேலையை பாருங்க... அப்பா வார நேரமாச்சு..." கூறிக்கொண்டு சமையல் அறையினுள் நுழைந்தார் சாந்தி. அதே நேரம் ராஜ்குமார் வீட்டினுள் நுழைந்தார்.

எவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தத்தமது வேலையை பார்த்தனர்.

நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது...
தனது பாதத்தில் எதோ ஒரு வகை சூடு பரவுவதை உணர்ந்த சாந்தி திடுக்குற்று எழுந்தார். அவரது பாதங்களை இறுக்க பற்றியவாறு பாதத்தில் முகம் வைத்து அழுதிட்டு இருந்தார் ராஜ்குமார்.
"என்னங்க பண்ணுறீங்கள்... சின்ன பிள்ளை மாதிரி அழுகுறீங்கள்... என்னாச்சு உங்களுக்கு..." பதறியடித்து கேட்டார் சாந்தி

"என்னை மன்னிச்சிடு சாந்தி... நான் தப்பு பண்ணிட்டன்மா... என்னை மன்னிச்சிடுமா..."

"நீங்கள் என்னங்க பண்ணினீங்கள்... ஒன்றும் நடக்கலை... சும்மா விடுங்க..."

"இல்லை தங்கம்... இண்டைக்கு நீ பிள்ளைகள் கூட பேசியதை கேட்டன்... எல்லாமே தெரிஞ்சும் தெரியாமல் நடந்துகிட்ட.. நான் உன்கிட்ட சொல்லாமல் மறைச்சது தப்பு தானேமா... நீ எப்பிடி எடுத்துக்குவியோனு தான் பயந்தன். தப்பாக நினைச்சுக்காதைமா... ஒரு மனிதாபிமானத்தில தான் செய்தன்மா... வேறு எந்த தப்பான எண்ணமும் இல்லை தங்கம்..."

"ஐயோ... அதையே ஏன் நினைச்சிட்டு இருக்கீங்கள்... அதான் ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டன்ல... எனக்கு உங்களை நல்ல தெரியும்பா... அவங்களும் பாவம் தானே. அவங்களுக்கும் யாரு இருக்காங்க... இருக்க போறதும் கொஞ்ச காலம். சந்தோசமாக இருந்திட்டு போகட்டுமே... இதில ஒன்றும் தப்பில்லைபா... அவங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு... யார்கிட்ட சொல்லி நொந்துக்குறது"

நாட்கள் நகர்ந்தன...

ஒரு நாள் மாலை நேரம்...
"சாந்தி... சாந்தி..." பரபரப்புடன் வீட்டினுள் நுழைந்தார் ராஜ்குமார்

"வாங்க மிஸ்டர் ராஜ்குமார்... வந்து இப்பிடி அமருங்க...."

அதிர்ந்து நின்றார் ராஜ்குமார்.

ஆம்... வீட்டின் நடுவே பரிமளா வீற்றிருந்தார். அவரை சுற்றி ராஜ்குமாரின் பிள்ளைகள் மற்றும் மனைவி. அனைவரதும் முகத்தினை மாறி மாறி பார்த்தார்.

"என்னெங்க அப்பிடியே நின்றுடிங்க... இப்பிடி வந்து உக்காருங்க... " மனைவி கூறவும் சுயநினைவு வந்தவராக நடை போட்டார். முகத்தில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.


"அப்பா... ரொம்ப யோசித்து குழம்பாதீங்க... நாங்க தான் போயி ஆன்டியை கூட்டிடு வந்தோம். நீங்க தினமும் போயி பார்க்கிறது கஷ்டம் தானே. அவங்களுக்கும் எவ்வளவு நாள் தான் பார்த்த முகங்களையே பார்த்திட்டு இருப்பாங்க. இருக்குற நாளை சந்தோசமாக கழிக்கட்டுமே என்று தான் கூட்டிடு வந்தோம்..." கதிர் கூறினான்.

அவரை அறியாமலே அவரது கைகள் கூப்பியது...

"என்னப்பா... சின்னபிள்ளை மாதிரி..." என கூறியவாறு பட்டேனு எழுந்து அவரது கைகளை தட்டி விட்டான் இளங்கோ...

-முற்றும்-

எழுதியவர் : கயல்விழி (3-Sep-15, 1:52 pm)
பார்வை : 509

மேலே