பொறாமை - கற்குவேல் பா

பொறாமை
```````````````
இவன் எப்படித்தான்
இத்தனை மாடிகள்
கட்டினானோ என்று
எரிச்சலுடன் - தினம்
எதிர்வீட்டைப் பார்த்து
சிறிது முறைத்தவாரே ,
அலுவலகம் செல்லும்
அப்பா .. !!
* * *
இவளுக்கு மட்டும்
எங்கிருந்துதான் பணம்
கொட்டுதோ - வரும்
புது சேலையெல்லாம்
தவறாம கணக்கா
வாங்கிடுறா என்றவாறே
பக்கத்துக்கு வீட்டாளிடம்
போலிப் புன்முறுவலுடன்
அம்மா .. !!
* * *
வெளிவரப்போகும்
தேர்வு முடிவில்
நான் முதலிடம்
பெறாமல் போனாலும்
என்தோழி ரோஜா
முதல் மதிப்பெண்
வரக்கூடாது என்று
கடவுள்முன் ஆழ்ந்த
பிராத்தனையிலிருக்கும்
அக்கா .. !!
* * *
நமக்கு கிடைக்காத
ஒன்று - அவனுக்கும்
இருக்கக்கூடாது
என்றவாறே - சக
வேலையாளன் ஒருவனின்
இருசக்கர வாகன
பிரேக் கம்பியை
துண்டிக்க முயலும்
அண்ணன் .. !!
* * *
வீட்டில் ஏதோ
ஒருமூலையில்
அமர்ந்துகொண்டு
" அழுக்காறு என்பது
தீயுழி உய்த்து விடும் "
என்று திருக்குறள்
படித்தவாறே சிறிது
உறக்கத்திற்கு செல்லும்
தம்பி .. !!
-- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (4-Sep-15, 12:35 pm)
பார்வை : 954

மேலே