வரமாகிய மரம்
தொட்டிலாய்த் தாலாட்டினாய் .
கட்டிலாய்த் தூங்கவைத்தாய் .
நடை வண்டியாய் நடை பழக்கினாய் .
மரப்பாச்சியாய் மகிழ்வித்தாய் .
எழுது கோலாய் எழுத்தறிவித்தாய்.
கரும்பலகையாய் கற்றுத்தந்தாய்.
விறகாய் எரிந்து சமைத்துத்தந்தாய் .
தீக்குச்சியாய் தீபம் ஏற்றினாய் .
தீப்பந்தமாய் இருள் நீக்கினாய் .
நாராய்ப் பூத்தொடுத்தாய் .
தேராய்த் திருவுலா வந்தாய் .
ஏராய் மண் காத்தாய் ..
சருகாய் நல்லுரமானாய் .
வேலியாய்ப் பயிர் காத்தாய் ..
பிராண வாயுவாய் உயிர் காத்தாய்.
பழங்களாய் சுவை தந்தாய் .
கீரையாய் சத்து தந்தாய் .
இளைப்பாற இளநீர் தந்தாய் ..
களைப்பாற பதநீர் தந்தாய்
கூட்டுவண்டியாய்க் கூட்டிச்சென்றாய்..
மாட்டுவண்டியாய்ப் பாரம் சுமந்தாய் ..
கதவு சன்னலாய் வீடு காத்தாய் .
அலமாரியாய் அலங்கரித்தாய் ..
ஊன்று கோலாய் உதவி நின்றாய் ..
சவப்பெட்டியாய்க் கூடவே வந்தாய் ..
பிறந்தபோதும் என் உடனிருந்தாய் .
இருந்தபோதும் என் உடனிருந்தாய்
இறந்தபோதும் என் உடனிருந்தாய் ..
நான் உன்னை
மறந்தபோதும் என் உடனிருந்தாய் ..
உன் தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை நீண்டது..
வீடோடு என் உறவுகள் நிற்கும் ..
வீதியோடு என் மனைவி நிற்பாள் ...
காடோடு என் பிள்ளை நிற்பான் ..
என்னை ஒருபிடி சாம்பலாக்கி புனிதமாக்கும்
கடைசி வரை நீதான் என் துணை நிற்கிறாய் . .
என் கடைசி வரை நீதான் . .
மாதா , பிதா , குரு , தெய்வம் என்ற
வரிசையில் ஐந்தாவதாய் மரத்தையும்
வகைப்படுத்தினாலும் அது மிகையன்று..
நன்றி மறந்த நாங்கள் வாழ
நீ வாழ்ந்தாக வேண்டும் ..
மரங்கள் வளர்ப்போம் .
நம் உயிர் வளர்ப்போம் ..