விஷமக் கண்ணனே வாடா வா

வீட்டுக்கு முதலாய் துயிலெழுந்திடும்
எங்கள் வீட்டு “சாய் திறன்” குட்டியை
சின்னக் கண்ணன் அவதாரம்
எடுக்கச் செய்ய ஆயத்தமானேன்...

குளியல் பொடியில் நீராட்டி
‘ஹிமாலயாஸ்’ பேபி பவுடர் பூசி
செல்லத் தொப்பை மறைத்திடும்
‘வெல்க்ரோ’ வெண்பட்டு கட்டிவிட்டேன்...

அவன் முட்டி தட்டிடும்
என் முத்துமாலை அணிவித்து
வெண்ணைப் பானை அருகில் வைத்து
அவன் உயர புல்லாங்குழல் கொடுத்தேன்...

அரக்கு வெள்ளை சாந்து கொண்டு
அம்சமாய்த் திருநாமம் இட்டு
கோணலாய் குட்டிக் குடும்பி போட்டு
குறும்பாய் அதிலே மயிலிறகு சூட்டினேன்...

அடிமேல் அடிவைத்து
அசைந்தாடி அவன் உள்ளே வர
பச்சரிசி மாவில் மெல்ல
அவன் சின்னப் பாதம் பதித்தேன்...

என் கண்மணி மைந்தன் மேலே
என் கண்ணே பட்டுவிடும் என்றெண்ணி
கன்னத்தில் திருஷ்டி பொட்டிட
கண்மை தேடி எடுத்துவந்த நான்
கண்ட காட்சி.....

முத்து மணிகள் சிதறிய அறையிலே
பச்சரிசி மாவில் குளித்திருந்த அவன்
இட்ட நாமத்தை நெற்றியிலே பட்டையாக்கி
சூடிய மயிலிறகை வாயிலே சப்பிக்கொண்டு...

புல்லாங்குழல் குச்சியால்
வெண்ணை கடைந்துகொண்டே
கன்னங்குழியச் சிரித்தான்
எங்கள் வீட்டு விஷமக் கண்ணன்.....!!!

"எழுத்து தள நண்பர்களுக்கு
இனிய கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்"

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (5-Sep-15, 8:54 am)
பார்வை : 606

மேலே