சோட்டா பீம் கனவுகள்

சோட்டா பீம் கனவுகள்
````````````````````````````
நாளை தன்மகன்
பள்ளிக்குச் செல்லும் முதல்நாள்
இதுவரை சம்பளப்பணம்
கைக்கு வந்தாகவில்லை
சோட்டா பீம் தோள்ப்பை
வாங்கிக்கொடுத்தால்தான்
பள்ளிக்குச் செல்வேன் என்று
அழுத அந்தக்குழந்தையின்
முகம்மட்டும் அவன் நினைவினில் !
வேலை முடியும் நேரம்
நெருங்கியபோதும் - சம்பளக்
குறுஞ்செய்தி வராத அலைபேசி
வேலைக்கு கிளம்பும்போதே
பக்கத்துவீட்டு பாலு
இல்லையென்று மறுத்துவிட்டார்
அலுவலகத் தோழர்களும்
அதே சொல்ல மனமுடைந்து
வீடு திரும்பியபோது
" அப்பா " என்று ஓடிவந்த
அந்தக் குழந்தையை
இறுகிய மனதோடு
உள்ளே அழைத்துச் செல்ல
ஊரிலிருந்து வந்திருந்த தன்
மைத்துனன் - குழந்தைக்கு
வாங்கி வந்திருந்த
சோட்டா பீம் தோள்ப்பை - அந்த
நடுத்தரவர்க்க தந்தைக்கு அன்றிரவு
நிம்மதியான தூக்கத்தை
கொடுக்க தவறவில்லை !
- கற்குவேல் . பா