காலைச் சாரல் 16 - ஊர்

6-9-2015
அதிகாலை எண்ணங்கள் "ஊர்"

கடந்த டிசம்பரில் காலில் அடிபட்டபின் வெளியே வெகு தூரம் வாகனத்தில் எங்கும் சென்றதில்லை... சென்ற அக்டோபரில் மகாபலிபுரத்திலிருந்து வரும் பொழுது அப்படியே ஊருக்கு வண்டியைத் திருப்ப, பேத்தியும் உடன் இருந்தாள்..

அந்த சின்ன கிராமத்தை அவளுடன் வலம் வந்தபோதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தபோதும் மேலும் அழகானாள். நாலைந்து ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டாள் - அவள் ஆட்டுக்குட்டிகளை அதுவரைப் பார்த்ததில்லை - ஆனால் பள்ளிக்கூடத்தில் 'goat' பற்றி பேசியிருக்கிறாள். அன்று ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தவுடன் அவைமுன் நின்று திடீரென "The goat is a domesticated animal... It gives us....." என்று முழுவதுமாக ஒப்பித்தாள். ஆட்டுக் குட்டிகளுக்கு புரிந்திருக்கும் ம்..ம்..மே..மே.... என்றன...

ஆட்டிடமிருந்து பிரித்து பேத்தியை வீட்டிற்குள் அழைத்து வர அங்கே சித்தி மங்கலான TV-ல் SVV சானலில் தெரிந்த வெங்கடாசலபதிமுன் தரையில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தாள்.... அன்றே நினைத்தேன் இதற்கு ஒரு மாற்று செய்ய வேண்டுமென... இரண்டு நாள்முன் ஒரு LED TV வாங்க, கிளம்பிவிட்டேன் நேற்றுவரை நல்ல நிலையில் இருந்த பழய Sony- ஐ எடுத்துக் கொண்டு...

ஊர் எல்லைக்குள் நுழையும்போதே என்னை என்றும் கவர்வது அந்த அல்லிக் குளம்...(படம்) நான் பதினான்கு வயதில் தாத்தா கைப்பிடித்து முதன் முதலில் கடந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே இன்றும்...அல்லி மலர் இன்றி.. 'அல்லிக் குளம்' என்றேன் மனைவியிடம். காரிலிருந்து எட்டிப் பார்த்தவள் 'துணி துவைக்கிறார்கள்' என்றாள்... நான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனோ...?

வழிநெடுக குடியிருப்புகள் அருகில் சின்டெக்ஸ் தொட்டிகளில் அரசாங்க தண்ணீர் வினியோகம்...

வீடு வந்து சேர சித்தி சித்தப்பா வரவேற்க டீவியுடன் நுழைந்து பொருத்தி படம் தெரிகிறதா என்று பார்த்தவுடன்தான் சற்று நிம்மதி ஆயிற்று... வழியில் குலுக்கலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லவா....? அதன் பிறகுதான் என் தலையில் ஓங்கி அடித்துக் கொண்டேன்.... ரிமோட் கொண்டுவர மறந்ததை... நல்ல வேளை DTH என்பதால் தப்பித்தேன்... on/offக்கு மட்டும் நடக்க வேண்டும்... அடுத்தமுறை செல்லும் பொழுது மறக்காமல் கொடுக்க வேண்டும்,...

சித்திக்கு மகிழ்ச்சி. ஏனெனில் சமீபத்தில் அந்தப் பழய டீவி பழுதாகியிருந்தது.. சிரிக்கையில் முன்னம் பல் ஒன்று விழுந்திருந்ததைக் கவனித்தேன்.., சித்தப்பா அதிகமாக உணர்ச்சிகள் காட்டுவதில்லை....!
*****

அந்த ஐந்து ஏக்கர் கொல்ல மேட்டு நிலத்தில் பயிர் செய்யும் ஆசை சித்தப்பாவுக்கு இன்னும் இருக்கிறது. 70-ஐ தாண்டியவர் உற்சாகமாக "வரியா பார்க்கலாம்" என்றார்... கரடு முரடான நிலத்தில் ஒரு பகுதி மினி புல்டோசரால் சமன் செய்யப்பட ஒன்றிரண்டு போல்டுகள் உடைய பராமரிப்புக்காக பரிதாபமாக ஒரு ஓரம் நின்றுகொண்டிருந்தது அந்த புல்டோசர், புதிதாக போட்ட ஆழ் துளை கிணறைக் காட்டினர்... இன்னும் மோட்டார் பொருத்த வில்லை. ஏரிக்கரை ஓரம் ஆழ் துளை கிணறு என்றால் ஏரியின் நிலை என்ன என்று பார்த்துக் கொள்ளுங்களேன்....

'மின்சாரம்...?' என்றதற்கு அருகில் உள்ள மின்கம்பத்தைக் காட்டினார்... மின்கம்பிகள் திருடு போயின என்றார்... விரைவில் வந்துவிடும் என்று நம்பினார்... கம்பிகள் திருடுபோனதற்கு அருகிலேயே தழைக்கும் TASMAC-கின் விஸ்வாசிகளைக் குறை கூறினார்... விவசாயம் செய்ய NABARD கொடுத்த கடன் தேவையைவிடக் கம்மி என்றார்....

அந்தக் பொட்டல் காட்டில் இந்த வயதில் எப்படி எல்லாவற்றையும் கட்டிக் காக்கப் போகிறார் என்று தெரியவில்லை.....
****

என் நினைவலைகள் பின் நோக்கின... இதே கொல்ல மேட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன் தாத்தாஅந்த குட்டைக் கிணறும் பம்புசெட்டுடன் அவரது பத்து ஏக்கர் நிலத்தை உழுது பயிரிடும் கனவை என்னிடம் கூறியுள்ளார்... இன்று எங்களுக்கு அதில் இரண்டு ஏக்கர்.... அவர் கனவை நிறைவேற்றவேனும் அந்த நிலத்தில் பயிரிட வேண்டும். சித்தப்பாவிடம் தாத்தாவின் அந்தக் கிணற்றையும் பம்பு செட்டையும் காண்பிக்கச் சொன்னேன். 'அதோ....' என்று காட்டிய திசையில் ஒரு ஒற்றை மின்கம்பம் நின்று கொண்டிருந்தது (கம்பி இன்றி)...
****

ஏரிக்கரையில் அமைந்த அந்த நிலங்களில் பயிர் விளைந்தால் தாத்தாவின் ஆன்மா சாந்தி அடையலாம்.... அந்த இரண்டு ஏக்கரில் நான் மரங்கள் நடுவதாக இருக்கிறேன்....காடு இருந்தால் மழை வரலாம் அல்லவா... பார்க்கலாம்....
****

என் கவலை என்னவென்றால் நிலம் சமனாகிவிட்டால்.... "சென்னைக்கு மிக அருகில்..." ஆட்கள் வந்துவிடுவார்களோ என்று... மூன்று கி.மீ. தூரத்தில் ஏற்கனவே கொடி நட்டு விட்டார்கள்... நிலத்தில் கொடி நட்டால் பின் ஏரியையும் விட்டு வைக்கவா போகிறார்கள்..

என் ஆசை, இன்னும் இரண்டு தலைமுறை யாரையும் அங்கு கொடி நட அனுமதிக்கக் கூடாது.... அதன் பிறகு அவர்கள் விருப்பம்..
****

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் பாலாற்றைக் கடக்கவேண்டும்., ஒவ்வொரு முறையும் யார் இதற்கு 'பாலாறு' என்று பெயரிட்டது., யாரோ ஒரு சொம்பு பாலை தவறவிட்டதால் வந்த பெயர்க் காரணமோ...? ஆனால் எனக்குத் தெரிந்து பாலையும் பார்த்ததில்லை, தண்ணீரையும் பார்த்ததில்லை...! மணல் மட்டும்தான்....

'மணலாறு' மிகப் பொருத்தமான பெயர்...! அள்ளுவதும் தவறாகாது....!

------முரளி

எழுதியவர் : முரளி (6-Sep-15, 1:33 pm)
பார்வை : 317

சிறந்த கட்டுரைகள்

மேலே