சடை
சிநேகிதத்தின் எல்லை சில காலங்களுக்கு பின் முடிந்துவிடுகிறது. அவன் அன்று பேசாமல் போனது வருத்தம் அளித்தாலும், அவன் நிலையில் நான் இருந்தால் ஒருவேளை இதையே செய்திருக்கலாம்.அவமானம் தான் இருந்தாலும் புதிதல்ல.அவன் எங்கள் பால்யத்தில் நான் கடித்து கொடுத்த அரை புளிப்பு மிட்டாயின் சுவையை மறந்திருக்க கூடாதுதான் ஆனால் பூக்காரனை நண்பன் என்று சொல்ல அவன் அந்தஸ்து இடன் கொடுக்காது.பகட்டான உடையில் சொகுசு காரில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தவனுக்கு என் நிலை ஒருவேளை அதிர்ச்சி அளித்திருக்கலாம்.அவன் மனைவி என்னிடம் மாலை வாங்கும்போது கூட ஏதோ அவன் முகத்தை மொபைல் போனில் உலவ விட்டிருந்தான் . நஞ்ச பனியனும் கறை படிந்த வேஷ்டியும் அவன் முகம் சுளிக்க செய்திருக்க வேண்டும்.பேசியிருந்தால் என்ன பேசியிருப்பான்,நல விசாரிபோடு தொடங்கியிருக்கும் எங்கள் பேச்சு,
மனைவி மக்கள் பற்றிய ஓரிரு வார்த்தை,வியாபாரத்தில் லாபம் நஷ்டம்.இதை தாண்டி ஒருவேளை பேசியிருந்தால் பால்ய நாட்களின் நினைவுகூறல்.இதைத்தாண்டி நாங்கள் பேசியிருக்க எதுவும் இருந்திருக்காது. ஏனோ இன்று கோவிலுக்குள் அடிக்கும் ஒவ்வொரு மணியும் கொஞ்சம் ஏதோ சத்தமாக ஒலிக்கிறது.வருத்தப்படகூட நேரம் இல்லாமல் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருக்கிறது,கள்ளா நிறைய காகிதப்பணம்.இதுதான் என்னை அவனுக்கு வேறு ஒரு ரூபத்தில் காட்டியது.கிழிந்த டவுசருடன் தான் வருவான், ஓரமாக வெறிக்க வகுப்பறை ஜன்னலையே பாத்துக்கொண்டு இருப்பன்,பின் மண்டை முடி சடைபிடித்து அருவருப்பாக இருக்கும்,வாத்தியார் அவனுடன் யாரையும் அமர விட மாட்டார்.எப்போதாவது பாத்து பைசா கொண்டு வருவான்,ஐந்தைந்தாக இருவேளை செலவு செய்வான்.மற்ற நாட்கள் எல்லாம் நன்கொடுக்கும் புளிப்பு மிட்டாய் மட்டும்,வேறு யாரிடமும் எதையும் வாங்கி சாப்பிடாத நினைவில் இல்லை.அவனுக்கு என் நட்பு பிடித்திருந்தது. கல் உடைக்க கர்நாடக செல்ல அவர்கள் குடும்பம் எங்கள் ஊரை விட்டு கிளம்பியது. செல்லும் முன் என்னை ஒரு முறையாவது பார்த்திருக்கலாம். அவன் சென்று ஒருவாரம் கழித்துதான் எனக்கு செய்தி தெரியும்.தந்தையின் மறைவிற்கு பின் ,நான் என் குடும்ப தொழிலை தொடர ஆரம்பித்தேன். அவன் எங்கள் ஊர் திருவிழாவிற்கு ஒருமுறை வந்தான் , அதன் பின் நீண்ட வருடங்களுக்கு பின் இன்றுதான் சடையின் தரிசனம் கிடைத்தது.பின் மண்டையை ஓரிரு முறை உற்று பார்த்தேன்,சடை இல்லை,பளபளத்த சங்கிலி கண்ணில் தென்பட்டது. மீண்டும் கோவிலில் மணி அடித்தது.