தேவநேயப் பாவணர்
ஆய்ந்துசொன்னார் தமிழ்மொழிதான் ஆதிமொழி என்று
----------- ஆர்த்தெழுந்தார் அவணியிலே தமிழவளர நின்று
தேய்வில்லாத நிலவெனவே நிலவுகின்றார் மனதில்
------- --- தேன்தமிழை உயிர்மூச்சாய் சுவாசித்தார் நினைவில்
ஓய்வில்லா உழைப்பாலே உயர்த்திவிட்டார் தமிழை
-----------ஓர்மொழியும் இணையில்லை இசையவைத்தார் உலகை
காய்ந்திருந்த தமிழ்செழிக்க அர்ப்பணித்தார் தன்னை----
-----------காலமெல்லாம் கடுமுழைப்பால் தமிழ்காத்தார் உண்மை
அருந்தமிழில் அகரமுதலி ஆக்கித்தந்த சீமான்
----------அடைந்திட்டார் பெரும்புகழை அவணிபோற்றும் கோமான்
திருக்குறளின் தெளிவுரையை தீந்தமிழில் வார்த்தார்
-----------திருமகனார் பாவாணர் தமிழ்க்கெனவே வாழ்ந்தார்
மருவில்லாத மணித்தமிழை மண்மணக்கச் செய்தார்
---------- மதிமயங்க மேடையெங்கும் தமிழ்முழக்கம் செய்தார்
பெருமுயற்சி செய்ததனால் பலமொழிகள் கற்றார்
------------போற்றிடவே தமிழ்ஞாயிறு என்றபெயர் பெற்றார்
தித்தித்திக்கும் செந்தமிழாம் திருவமுதாம் தமிழை
------------திக்கெட்டும் திரைகடலாய் பாரெங்கும் பரப்ப
எத்திசைக்கும் சென்றுழைத்து எதிர்ப்புகளை தடுத்து
------------எட்டுத்திக்கும் புகழெடுக்க இரவுபகல் உழைத்தார்
முத்ததிழ்தான் மாநிலத்தில் முதல்மொழி எனக்காட்டி
-----------முன்னைமொழி இல்லையென முடிவுரையும் தந்தார்
எத்தனைநாள் உழைத்திருப்பார் உணவுண்ண மறந்திருப்பார்
------------என்பதையே எண்ணிட்டால் எவருடம்பும் சிலிர்த்திடுமே
உலகிலுள்ள மனிதர்களில் முதன்முதலாய் தோன்றியது
--------- உயர்ந்ததமிழ் மொழிபேசும் தமிழன்தான் எனகண்டார்
பலகலைகள் பரவியுள்ள பரவைசூழ்ந்த உலகினிலே
------------பகுத்தறியும் மனிதஇனம் உதித்தகண்டம் குமரியென்றார்
நிலவுலகம் முழுவதிலும் மூத்தமொழி தமிழென்றே
------------நிலைநிறுத்தி உலகெங்கும் உண்மைஉணர வைத்தார்
கலப்புஏதும் இல்லாதது கன்னல்தமிழ் மொழியொன்றென
------------கற்றோர்கள் மறுப்பின்றி ஏற்கசான்று தந்தார்
பெருமையுள்ள தமிழ்மொழியின் முதுமையினை கண்டார்
------------பெருமைகளை எடுத்துச்சொல்லி பெரும்புகழும் கொண்டார்
உருவத்திலே கருமைநிறம் கொண்டவர்தான் எனினும்
------------உழைப்பினிலே தங்கமென திகழ்ந்தேதினம் மிளிர்ந்தார்
குருத்துவிட்டு வளர்வதற்கே தமிழ்மொழிக்கே உழைத்தே
------------குன்றனைய உயர்மொழியாய் உயரவைத்தார் தழைத்தே
கருத்துடன்வேர் சொல்லாய்வை பொறுப்புடனே நடத்தி
------------கன்னித்தமிழ் சிறக்கஎழுத்தில் மாற்றம்செய்தார் திருத்தி
துறைமுழுதும் தாய்தமிழின் வளர்ச்சிதனை எண்ணி
----------- துணிவுடனே ஆய்ந்ததெல்லாம் தமிழ்சொத்தாய் தந்தார்
நிறைதமிழின் மேன்மைக்கே நாளெல்லாம் ஈந்தார்
------------நிற்கின்றார் தமிழறிந்தோர் இதயத்தில் அன்னார்
குறைகளைந்தார் தமிழ்மொழியில் இமயபுகழ் கொண்டார்
------------குன்றின்மேல் விளக்கெனவே தமிழ்ஒளிர செய்தார்
மறையொத்த முப்பால்போல் நிலைத்தபெயர் பெற்றார்
---------- மதித்திடுவார் தேவநேயர் தமிழுணர்வைக் கற்றார்.
இணக்கமுற வாழ்ந்திடவே இன்பத்தமிழ் மொழியினிலே
------------இசைவான பலநூல்கள் கட்டுரைகள் வடித்தார்
கணக்கற்ற வகையினிலே படைத்தநூல்கள் முழுதும்
------------கண்களாகத் தமிழ்மொழிக்கே திகழும்படி செய்தார்
பிணக்கறுக்கும் தாய்மொழியைப் பேணிநின்றார் வாழ்வில்
---------- பின்னர்வரும் தலைமுறையும் போற்றறும்படி ஆய்வில்
வணங்கிடுவோம் வாழ்த்திடுவோம் அவர்பணியைப் போற்றி
--------- வளம்சேர்ப்போம் வாழ்விப்பேம் தமிழையெங்கும் சாற்றி.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

