வீடு

தண்ணீர் கோட்பாடுகள்..
புதிய முகங்கள்..
பொதுக்கழிவறை..
புதிய விதிமுறை..
என அனைத்தையும்..
மெல்ல விழுங்கிக்கொண்டிருந்தது மனது..!

வெளிக்கேட்டை பூட்டும் நேரம்..
உள்ளே தண்ணீர் வரும் நேரம்..
என வேறு வேறு நிகழ்வுகள் சொல்ல..
தயாரானது..
என்வீட்டுக்கடிகாரம்.!

குட்டி யானையில்
அள்ளிவந்ததை எல்லாம்..
அடுக்கிமுடித்திருக்க..
பெரிய யானையாய் இருந்தது..
சொந்தவீட்டுக்கனவு..!

உள்ளே பெற்றதுபோக..
பெருஞ்சுமை ஒன்றை..
தலையில் வைத்து..
நிற்கலானது என் வீட்டுப்பீரோ..
ஆனால் இந்த..
கட்டில் மட்டும்
காலை அகட்டியே
வைத்துக்கொண்டிருந்தது.!

பழைய வீடுகளுக்கே..
பத்துமுறைக்கு மேல் காய்ச்சியிருந்தாலும்..
பார்த்துக்கொண்டிருக்கும்
எங்களுக்காகவே..
வழக்கம் போல் பொங்கிவிடுகிறது..
அண்ணாச்சி கடையில்..
அக்கவுண்டில் வாங்கிய..
திருமலா பாலும்.!

பழக்கமில்லாத பிள்ளைகள்..
விளையாடுவதையே..
வெறித்துக்கொண்டிருந்த..
என் பிள்ளைகளுக்கு..
அது பழக்கமாகி இருந்தது.!

தண்ணீர் ஊற்றி..
தவறவிட்டுவந்த
மணிப்பிளாண்ட்டுக்காக..
என் குழந்தைகளும்..
தினேஷ் அம்மாட்ட
சொல்லாமே வந்துட்டேன்
என மனைவியும்..
என் மீதான தீராத கோபத்தை..
உச்சுக்கொட்டி முடித்திருக்க..
நான் ஈரமான ஆடையை..
காயப்போட கொடிகட்டிக்கொண்டிருந்தேன்.
யாரும் என்னிடம்
கேட்காத கேள்விக்கு..
பதில் சொல்லிக்கொண்டே..!

"சீக்கிரமா வீடு வாங்கணும்.."

எழுதியவர் : நிலாகண்ணன் (7-Sep-15, 9:38 am)
Tanglish : veedu
பார்வை : 2254

மேலே