எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், டீஸல், கேசோலின் என்று அமெரிக்காவில் அழைக்கப்படும் பெட்ரோல், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG), அல்லது ப்ரோபேன் போன்ற எதாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தாம் - வேறு வேறு மூலக்கூறுகளாக. (Molecules), என்ன, ஒவ்வொரு எரிபொருளுக்கும் வேண்டத்தகாத ஆனால் தவிர்க்கமுடியாத சில கசண்டுகளும் கூடவே இருக்கும். டீஸலுக்கு சல்பர் (கந்தகம்), பெட்ரோலுக்கு ஈயம் (lead), வாயுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு. இவற்றின் விளைவுகளையும் பார்ப்போம்.

எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்.

எனவே, எஞ்சினுக்குள் எரியும் பொருள்கள் இரண்டு - எரிபொருள் மற்றும் காற்று.

எரிபொருளில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3 சதம் வரை கசண்டு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S)

காற்றில் உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்களை இப்போது கணக்கில் சேர்க்கத் தேவையில்லை - மிகக்குறைந்த அளவில்தான் அவை உள்ளன)

எனவே, எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன. இங்கே டீஸல் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற எளிய ப்ளாஷ் இருக்கிறது.

1. கார்பன், ஆக்ஸிஜனுடன் முழுமையாக எரிந்தால் - கார்பன் டையாக்ஸைடு (CO2)
2. பாதியளவு மட்டுமே எரிந்தால் - கார்பன் மோனாக்ஸைடு (CO)
3. முழுக்கவே எரியாமல் இருந்தால் - ஹைட்ரோ கார்பன் (HC)

4. தண்ணீர் (ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து) (H2O)
5. கந்தக அமிலம் - டீஸல் மற்றும் வாயு எஞ்சின்களில் கந்தகக் கசண்டு இருப்பதால். (H2SO4)
6. நைட்ரிக் அமிலம் (HNO3)

7. நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (பல விதங்களில் இணைய வாய்ப்பிருக்கிறது) (NO, N2O, NO2, NO3)
8. சல்பர் ஆக்ஸைடுகள் (SO, SO2, SO3)
9. பாதி எரிந்த எரிபொருள் (கார்பன் மோனாக்ஸைடு) (இரண்டாவது முறை கணக்குக்காட்ட ஏற்றவில்லை, கீழே படியுங்கள்) (CO)

இன்னும் நிறைய இருக்கிறது - ஆனால் போரடித்துவிட வாய்ப்பிருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

எழுதியவர் : (8-Sep-15, 12:25 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 27153

மேலே