‎ஒரு_சாமான்யனின்_நாட்குறிப்புகள்‬

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது இந்த வீட்டிற்கு வந்து. அப்பார்ட்மெண்ட் முழுக்க நிறைய குழந்தைகளுடன் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. பஞ்சாயத்துகளுக்கும்தான். அப்பார்ட்மெண்ட்வாசிகளின் மனநிலையை சிக்மண்ட் பிராய்டால்கூட ஆராய்ந்துவிடமுடியாதென்று தோன்றுகிறது. யார் எப்போது சிரிப்பார்கள் எப்போது முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள் என்றே கணிக்கமுடிவதில்லை.

பெரும்பாலான சமயங்களில் பலப்பத்திற்கு அடித்துக்கொள்ளும் குழந்தைகள் போலத்தான் நடந்துகொள்கிறார்கள். இருசக்கரவாகனத்தின் பாதிசக்கரம் அடுத்தபிளாக்கில் நீண்டுவிட்டால்கூட உடனே அறிவிப்புப் பலகையில் எழுதிவைத்துவிடுகிறார்கள். குழந்தைகளின் சண்டைமுதல் பெரியவர்களின் கிசுகிசுக்கள்வரை தொட்டதற்கெல்லாம் ஒரு மீட்டிங். செப்டிக் டாங்கில் ஏதேனும் அடைத்துக்கொண்டதென்றால் உடனே அதற்கொரு மீட்டிங். மொட்டைமாடியில் வடகத்தை காகம் தூக்கிச்சென்றுவிட்டால் அதற்கும் ஒரு மீட்டிங் போட்டு காக்காய்க்கு எதிரான உண்னாவிரதப்போராட்ட அறிவிப்பு. சாக்லெட் பிஸ்கட் கவர் விழுந்திருக்கிறதா போடு மீட்டிங்கை. சொந்தவீட்டு வாடகைவீட்டு ஈகோப்பிரச்சனைகளும் மனச்சிக்கல்களும் தனி டிப்பார்மெண்ட்.

கீழ்வீட்டில் ஒரு சிறுமி... நாங்கள் வந்தபோதுதான் பூப்பெய்தினாள் என்று நினைவு. துறுதுறுவென இருப்பாள். கோக்கோ ஸ்கிப்பிங் பாண்டி என்று விளையாடியப்டியே இருப்பாள். குழந்தைகள் எல்லோருக்கும் அவள்தான் தலைவி. அப்பார்ட்மெண்ட் முழுக்க அவளைப்பற்றிய அவதூறுகள்தான். எப்போதும் ஏதாவது கம்ப்ளைண்டுகள். சமீபமாக அவளை அதிகம் வெளியில் காணமுடிவதில்லை.

வெகுநாட்களுக்குப்பின் இன்று அப்பார்ட்மெண்ட் வாசலில் பள்ளிவாகனத்திற்காக காத்திருந்தாள். சற்று பெரிய பெண்ணாக, முகத்தில் பெரிதாய் கண்ணாடியொன்று அணிந்தபடி, அசப்பில் பெங்களூர்டேஸ் நஸ்ரியாபோல. பழைய துறுதுறுப்பெல்லாம் தொலைந்திருந்தது. எதையோ பறிகொடுத்ததுபோல, எங்கோ தொலைவில் வெறித்துக்கொண்டிருக்கிறாள். புன்னகைக்கக்கூட மனமின்றி கடந்துவிட்டேன். குழந்தைகளை பெரியவர்களாக மாற்றிவிட நிரம்பவே மெனக்கெடுகின்றோம்.

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (10-Sep-15, 12:17 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே