கலாம் ஒரு சரித்திரம் கவிஞர் இரா இரவி

கலாம் ஒரு சரித்திரம் !

கவிஞர் இரா. இரவி!



மாமனிதர் அப்துல் கலாம் ஒரு சரித்திரம்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட்ட வரலாறு!


இராமேசுவரம் தீவில் இவ்வளவு கூட்டம்
இதுவரை கூடிய வரலாறு இல்லை!


தலைநகரிலிருந்து தலைமை அமைச்சர் வருகை
தலையாய கடமையாக இறுதி மரியாதை!


படகோட்டி மகன் பாரதத்தின் முதல் குடிமகன்!
படம் காட்டாத எளிமையின் சின்னம்!


அறிவால் உயர்ந்து அகிலத்தில் சிறந்தவர்!
அன்பால் கனிந்து இதயங்கள் வென்றவர்!


மரபுகளை உடைத்த மனிதாபிமான சிகரம்!
மாணவர்களை நேசித்த ஆசிரியர் திலகம்!


அகந்தை என்றால் என்னவென்று அறியாதவர்!
ஆணவம் என்றால் என்னவென்று அறியாதவர்!


உலகப்பொதுமறையை வாசித்து நேசித்தவர்!
உலகப்பொதுமறையின் வெற்றிக்குக் காரணமானவர்!


கேள்விகள் கேட்க வைத்து பதிலளித்தவர்!
கடுமையான சொற்களை என்றும் பயன்படுத்தாதவர்!


நூல்களை மட்டுமல்ல வீணையையும் வாசித்தவர்!
நூலகம் வீட்டில் வேண்டும் உணர்த்தியவர்!


செயற்கைக் கோள்கள் ஏவியது மட்டுமல்ல!
செயற்கைக் கால்களும் செய்து மகிழ்ந்தவர்!


இயற்கை நேசித்து இயற்கை ரசித்தவர்!
இயற்கையோடு இயற்கையான போதும் வாழ்கிறார்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி! (11-Sep-15, 10:23 pm)
பார்வை : 84

மேலே