கவலைப்படாதே சகோதரா

கவலைப்படாதே சகோதரா!

நன்றி"கூடல்.கொம்'


காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.
அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.
அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.
அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 8:36 pm)
பார்வை : 251

மேலே