தான்தான்இலக்கிய சுவை க
இராமச்சந்திரக் கவிராயர் என்று ஒரு புலவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்தார்.சரியாசனம் புலவர்க்கு மன்னர் அளித்த காலம் போய் ,புலவர்கள் வறுமையில் வாடும் காலம் அது .அவர் ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கூட தமிழ் சொல்லிக் கொடுத்தார்.வேறு யாரும் ஆதரிப்பார் இல்லாததால் வறுமையில் வாடினார்.ஒரு நாள் காலையில் அவர் குழந்தைகள் அழுது கொண்டிருந்தன.
அவர் மனைவியைப் பார்த்து,''குழந்தைகளுக்கு கஞ்சி ஏதாவது வைத்து பசியாற்று,''என்றார்.அவர் மனைவி,''சமைக்க ஏதுமில்லை.''என்றார்.''நொய்யரிசி கூட இல்லையா?"'என்று புலவர் கேட்க அவர் மனைவி அழுது கொண்டே,''இனி கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சிக் கொடுக்க வேண்டும்,''என்றார்.அந்த துயர் நிலையிலும் புலவரின் கவித்துவம் மேலோங்கி நின்றது.அப்போது அவர் பாடிய பாடல்:
''கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்ச்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
எனக்குத்தான் கொடுத்துத்தான்
இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான்
ஐயோ!எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான்
பதுமத்தான் புவியில்தான்
பண்ணினானே!''
இப்பாடலில் தான் என்ற வார்த்தை பதினெட்டு முறை வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.