உயிருமில்லை மெய்யுமில்லை
உயிருமில்லை மெய்யுமில்லை.
=============================================ருத்ரா
அந்த தென்றல் உன்னை
என்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது.
பட்டாம்ப்பூச்சிகள்
தங்கள் "வாட் அப்" சித்திரங்களால்
உன்னை எனக்குள்
மெஹந்தி பூசியது.
தேன் சிட்டுகள் ஊசி அலகுகளால்
என் இதயத்தை
உனக்காக பூத்தையல் போட்ட
ஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது.
இந்த உலகில் நான் நடக்கும் பாதை கூட
ஒத்தையடிப்பாதை ஆகிப்போனது.
என் தெரியுமா?
நீ நடந்த காலடித்தடங்களை மட்டுமே
நான்
ஒற்றி ஒற்றி நடந்துகொண்டிருக்கிறேன்
"போதும் நிறுத்துடா !
இதையெல்லாம்
உன் பேனாவுக்குள்ளேயே
திரும்ப ஊற்றிக்கொள்
யாருக்கு வேண்டும் இந்த
எழுத்துக்கூளங்கள்.?
அன்றொரு நாள்
உதடு துடிக்க என் உதடுகள்
அருகே
"அனிச்சமே ,,"என்று
ஏதேதோ சொன்னாய்
அதற்குப்பதில்
இச்சென்று
தமிழ் இலக்கணத்துக்கு
அடங்காத
அந்த இன்னிசை அளபடையோ
உயிரிசை அளபடையோ
நீ முத்திரையாக்கி
என் மூச்சில் இனிப்பை
ஊற்ற மறந்தாயே!
ஒரு பெண்ணின் ஆழத்துள்
நங்கூரம் பாய்ச்ச இயலாத
உன் எழுத்துக்களில்
"உயிரும் இல்லை.மெய்யும் இல்லை"
====================================================