பேச முடிவதில்லை
எல்லா இடங்களிலும்
ஒருவனால் பேச முடிவதில்லை.
பேச நினைக்கும் இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடைசெய்யப்பட்டோ
பேசமுடியாது போகிறது.
பேச ஆசைகொள்ளும்
நள்ளிரவில்-
நூலக அலமாரிகள் இடையே-
ஒரு கலவிக்குப் பின்னே-
சாவு வீட்டில் -
ஏதோ ஒரு ஆசிரமத்தில் -
பேசமுடியாது போகிறது.
யாருமற்ற தனிமையிலோ
புற்களைப் பிடுங்கியபடியோ
பதட்டத்தாலோ தயக்கத்தாலோ
வசீகரத்தாலோ மறதியாலோ
பேசமுடியாது போகிறது.
ஒரு தோல்விக்குப் பின்னே-
ஏதோ காரணமற்ற கோபத்தால்-
நியாயமற்ற சில பொய்களால்-
பல நேரங்களில் பேச முடிவதில்லை.
எல்லாம் அமையும்போது
பேச எதுவுமில்லாது போய்விடுகிறது.