கிபி மூவாயிரத்து பதினைந்து - அறிவியல் புனைவு

..................................................................................................................................................................................................
கிபி மூவாயிரத்து பதினைந்து- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...

கிபி மூவாயிரத்து பதினைந்தாம் வருடம்...

காட்டில் செடிகளுக்கு நீரூற்றி விட்டு தேவையற்ற புல்பூண்டுகளை மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் உணவாகக் கொடுத்து விட்டு உள்ளே வந்த ரோபோ அங்கு நின்று கொண்டிருந்த பெண்மணியிடம் தாவரங்களின் இப்போதைய நிலவரம் வேண்டுமா என்று ஒரு ரீங்காரத் தொனியில் கேட்டது.

பெண்மணியின் பெயர் கண்மணி என்று தொடங்கி ஒரு முன்னூற்று பதினாறு காரக்டர்களில் முடியும். பத்தடி உயரமும் எண்பது கிலோ எடையும் கொண்ட, போன வருடம்தான் அரசின் அனுமதி பெற்று திருமணம் முடித்த அறுபது வயது புது மணப்பெண்..! பெண்ணின் திருமண வயது அறுபது என்று நிச்சயித்திருந்தது அரசாங்கம்..!

கண்மணிக்கு ஒரு செம்பருத்திப் பூச்செடியை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமேற்பட்டது. “அந்த செம்பருத்திச் செடி... ” என்று இழுத்தாள்.
ரோபோவின் நெஞ்சில் அவள் தோட்டத்தின் பகுதிகள் படமாய் விரிந்தன. அவற்றை முன்னும் பின்னும்,

மேலும் கீழும் தள்ளி ஒரு செடியை வட்டமிட்டாள்.

நான்கு நிமிடம் கழித்து ரோபோ பேச ஆரம்பித்தது..

“ ஜி6 பிஎஃப் வகை செம்பருத்திச் செடி; உயரம் முப்பத்து நான்கு சென்டிமீட்டர்.. தண்டின் பருமன் அதிகபட்சம் மூன்று சென்டிமீட்டர். வேர்.. இரண்டு மில்லிமீட்டர்...” இது போன்ற இன்ன பிற தகவல்களை ஒரு முப்பத்தைந்து நிமிடம் தெரிவித்த பின், கடைசியாக செய்தியோடு செய்தியாக இந்த தகவலையும் தெரிவித்தது.... “ ஒரு பூ மலர்ந்திருக்கிறது.. (பூவின் படத்தைக் காட்டுகிறது..) பூவின் நிறம்.. அளவுகள்.. ”

கண்மணி நிறுத்து என்றாள்..!

செடி பூக்க ஆரம்பித்து விட்டது..! அவளுக்கு அந்தச் செய்திதான் வேண்டும்.! மனிதர் தோட்டக்காரராக இருந்திருந்தால் அதைத்தான் முதலில் சொல்லியிருப்பார். ஹூம்..! ஆயிரம் வருடத்துக்கு முற்பட்ட மனித சமுதாயம் கொடுத்து வைத்தது..!

ரோபோ ஒரு மூலையில் பொருந்தி நின்றது. அவள் கண்கள் நிலை கொள்ளாது யாரையோ தேடின. அவள் வீட்டுக்கு வாசல் இருந்த போதிலும் நிறைய ரிசப்ஷன் ஏரியாவும், டிரான்ஸ்மிட்டர்களும் இருந்தன.

சட்டென்று ஒரு டிரான்ஸ்மிட்டர் பச்சையாக ஒளிர்ந்து வெப்ப அலைகளை உமிழ்ந்தது. அது டிரான்ஸ்ஃபார்மர் பகுதிக்குச் சென்று லேசான சப்தத்துடன் சேர்க்கை பகுதியில் வெளிவந்தது. ரிசப்ஷனிலிருந்து களைத்து வந்தான் முருகேசன்- கண்மணியின் கணவன்.

முருகேசன் தொழிற்சாலை கட்டுமானத்தில் வேலை பார்க்கிறான். வெப்ப உலைகளுடன் வேலை பார்ப்பதெல்லாம் ஆயிரம் வருடத்துக்கு முந்தின கதை.. மனிதனே உருமாறி வெப்ப சக்தியாகி ஒரு நாளின் சில மணி நேரங்கள் வேலை செய்கிற காலம் இது..!

” டிஎன்ஏ தெரபிஸ்ட் டாக்டர் ஙூசா வரலையா? ” முருகேசன் கேட்டான்.

” வந்துடுவார்... ஜப்பான்லேர்ந்து நேரா தமிழ்நாட்டுல இருக்கிற நம்ம வீட்டுக்குத்தான் வர்றார். ”

அவள் சொல்லி முடிக்கவும் ஙூசா வரவும் சரியாக இருந்தது.

“ என்ன பிரசினை மேடம்? ” என்றார் ஙூசா, கண்மணி கொடுத்த சத்துத் திரவத்தை உறிஞ்சியபடி.

கண்மணிக்கும் முருகேசனுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி கிடைத்து விட்டது. அவர்கள் தங்கள் குழந்தையை அவர்களே வடிவமைத்துக் கொள்ளலாம், இருந்தாலும் சில நிபந்தனைகள் உண்டு. அந்த நிபந்தனைகளுள் ஒன்று.. குழந்தையின் மரபணுக் கட்டமைப்பில் ஹெச்எல்பி 137 என்ற மரபணு கண்டிப்பாக இருக்கக் கூடாது. கண்மணி ஒரு வேற்று கிரகவாசி. வேற்று கிரகவாசியால் பூமி சந்தித்த சேதங்கள் ஏராளம். கண்மணியை இவ்வுலகப் பிரஜையாக அங்கீகரித்திருந்தாலும் அதற்குப் பரிகாரமாக கண்மணியின் வாரிசு பிற்காலத்தில் இட்ட வேலையைச் செய்கிற நல்ல வேலையாளாக பரிணமிக்க வேண்டும், உலகத்துக்கு வேலையாளின் தேவை இருக்கிறது. அதற்காக குழந்தையின் சிந்தனைத் திறனோடு சம்பந்தப்பட்ட அந்த மரபணு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

கண்மணி கண்ணீர் சிந்தினாள். “நம்ம குழந்தை நம்மளை விட நல்ல நிலைக்குப் போகணும்னுதான் ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவாங்க.. நான்தானே வேற்று கிரகவாசி. என்னைத் தண்டிக்கலாமே? என் குழந்தையோட எதிர்காலத்தை இப்படி பாழாக்கலாமா? என் கணவர் பூமிவாசிதானே? இவரோட பரம்பரையும் பூமி மனிதர்கள் தானே? அப்படியிருக்க இவர் மேலே அரசாங்கத்துக்கு என்ன கோபம்? ”

ஙூசா அமைதி காத்தார். அரசாங்கம் என்பது உயிரற்ற ஒரு அமைப்பு. சட்ட திட்டங்களை மனிதர்கள் அமைத்தாலும் அதனை செயல்படுத்துவது கணிணிகள் மற்றும் ரோபோக்களின் வசம் ஒப்படைக்கப்பட்டாயிற்று. உலக அரசியலமைப்புச் சட்டம் மனித மூளைக்கு மிஞ்சிய பிரம்மாண்டத்தைக் கொண்டது. அதில் மாற்றத்தை கொண்டு வருவது சுலபமில்லை. முக்கால்வாசி சுமுகமாகப் போனாலும் சில கண்மணிகள் கண்ணீர் வடிப்பது நிகழத்தான் செய்கிறது...!

“ இந்த ஜீன் அவ்வளவு முக்கியமானதா? ” முருகேசன் கேட்டான்.

“ ஆமாம் ” ஙூசா தாடியைத் தடவிக் கொண்டார். “ விளக்கமா சொல்லணும்னா ஒரு பூனையை எடுத்துக்குவோம். அழுகின எலியை சாப்பிட்டு அது செத்துப் போயிடுது. அதோட குட்டியும் அதே போல அழுகின எலியை சாப்பிட்டதால செத்துப் போச்சு. இப்படி நாலைஞ்சு தலைமுறை நடந்த பிறகு இந்த விஷயம் ஒரு ஜீன்ல பதிவாகுது. அந்த ஜீன் கிடைச்ச பூனை அழுகின எலியை அந்த வாடையை வச்சே கண்டுபிடிச்சு சாப்பிடாம விலகிப் போகுது.. இதனால அது உயிர் பிழைக்குது. இத நாம உள்ளுணர்வு என்கிறோம். அந்த உள்ளுணர்வோட சம்பந்தப்பட்ட ஜீனைத்தான் அரசாங்கம் அழிக்க நினைக்குது. அதனால தலைமுறை தலைமுறையா அனுபவத்துல கிடைச்ச அறிவு அந்தப் பிறவிக்கு இருக்காது.! இதனால ஒரு கட்டத்துல சொன்னதை மட்டும் செஞ்சுட்டு பேசாம இருந்துடுவாங்க. உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும்- ஒரு நல்ல வேலையாளா வந்துடுவாங்க..! ”

“ ஐயையோ, இது என் குழந்தையை மட்டுமல்ல, அதோட வாரிசுகளையும் பாதிக்குமே? ”
இருவரும் கதறினர்.

ஙூசா அவர்கள் இருவரின் மரபணுவை ஆராய்ந்தார். “ உங்க விருப்பம் என்ன? உங்க குழந்தை நல்ல ஐக்யூவோட இருக்கணும்.. அதுதானே? அந்த ஜீன் போனால் போகட்டும்..! இருக்கிற ஜீன்கள்ல சில மாற்றங்களை உண்டாக்கினா நல்ல ஐக்யூவுக்கான வாய்ப்பு தெரியுது..! ஆனா வேற சில உருவ மாற்றங்கள் ஏற்படலாம்.. அதுக்கு நீங்க தயாரா? ”

தம்பதிகளின் சம்மதத்தை எழுதி வாங்கிக் கொண்டார்.

கண்மணி கருவுற்றாள். ஙூசாவும் தம் சிகிச்சையைத் தொடங்கினார். மருத்துவ சிகிச்சை பெறுவது மனிதர்களின் அடிப்படை உரிமையாக இருந்ததால் அரசாங்கம் மறுக்கவில்லை.

காலம் கடகடவென்று ஓடியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்மணிக்கு குழந்தை பிறந்தது.

டாக்டர்கள் குழாம் கண்மணியிடம் ஆச்சரியப்பட்டு கூறியதாவது:

“ மேடம், உங்க குழந்தை மாதிரி ஒரு அறிவாளிக் குழந்தையை நாங்க பார்த்ததே இல்ல. நீங்க கதிரியக்க சிகிச்சை எடுத்துகிட்டதால உங்க நஞ்சுக்கொடி கர்ப்பப் பையில நல்லா ஒட்டிட்டு வரவே இல்ல..! கருப்பையையே எடுத்துடலாமான்னு யோசிச்சிட்டு இருந்தபோது உங்க குழந்தை நிலைமையைப் புரிஞ்சிட்டு தன்னோட சின்னக் கையை உள்ளே விட்டு நஞ்சுக்கொடியை எடுத்துப் போட்டுட்டான்.. அதாவது உங்களுக்கு ஒரு வகையில பிரசவம் பார்த்திருக்கான்..! ப்ரில்லியண்ட்..! ஆனா முகம்தான்... ”

கண்மணி குழந்தையைப் பார்த்தாள். மிகப் பெரிய மூளையை வைத்துக் கொள்ள வசதியாக யானை முகத்தோடு குழந்தை சிரித்தது....!

சுபம்.
................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (19-Sep-15, 7:04 pm)
பார்வை : 561

மேலே