கொய்யா

நேற்றிரவு சேலம் பேருந்து நிலையத்தில் கொய்யாக்காய் வாங்கினேன்.

எந்த முக்கியத்துவமும் இல்லாத அற்ப விஷயம்தான் இது. ஆனாலும், மறக்க இயலாத அனுபவமாகிவிட்டது.

கொய்யா விற்றுக்கொண்டிருந்த மூதாட்டி பேருந்து நிலையத்தின் உள்விதானமொன்றில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

அவருக்குமுன் ஒருபக்கம் கொய்யாக்கள், இன்னொருபக்கம் நெல்லிக்காய்கள். அவரது கை எட்டாத தூரம்வரை அவை நன்கு பரந்திருந்தன.

நள்ளிரவு நேரம் என்பதால் அவருக்கு இடப் போட்டி இல்லை. பச்சைக் காய்கள், மஞ்சள் பழங்களை நன்கு பரப்பிவைத்திருந்தார். அந்தக் காட்சி பார்க்க அத்துணை அழகாக இருந்தது.

என்னுடைய பேருந்து புறப்பட 20 நிமிடங்கள் இருந்தன. ஆகவே, கொய்யாக்காய் விலை விசாரித்தேன். ‘கிலோ அம்பது ரூவா’ என்றார்.

எ(பெ)ங்களூரில் கிலோ ‘நூறு ரூவா’. ஆகவே, ரெண்டு கிலோ வாங்கிச் செல்வோம் என்று யோசித்தேன்.

பொதுவாக இதுபோல் மூட்டை சுமப்பது எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்தமுறை பேருந்து நிலையத்திலேயே வாங்குகிறேன் என்பதால், தூக்கிச்செல்ல அதிகச் சிரமமிராது. ஆகவே, குனிந்து காய்களைப் பொறுக்கி நீட்டினேன்.

‘என்னய்யா, வெறும் காயா எடுத்திருக்கே?’ என்று சிரித்தார் அந்த மூதாட்டி, ‘பொம்பளப்பிள்ளைங்கன்னா பார்த்து நல்ல பழமா எடுக்கும்.’

‘இல்லைம்மா, காரணமாதான் எடுத்தேன். எனக்குக் கொய்யாக்காய்தான் பிடிக்கும்’ என்றேன். ’எடை போடுங்க!’

‘வெறும் காயா? துவர்க்கும்ய்யா’ என்றார் அவர்.

‘பரவாயில்லைங்க, எனக்கு இதான் வேணும்.’

அவர் என்னை நம்பாமல் பார்த்துவிட்டு, ‘மொத்தமும் காய்ன்னா நாப்பது ரூவாய்க்குத் தர்றேன்’ என்றார். ‘ஒரே ஒரு பழம்கூட வேணாமா? வெட்டி மொளகாத்தூள் போட்டுத் தர்றேனே.’

‘வேணாம், காய்தான் வேணும், எடை போடுங்க’ என்றேன் பிடிவாதமாக.

அவர் மனமே இல்லாமல் எடை போட்டார். இரண்டு கிலோவுக்கு இரண்டரை கிலோவரை காய்கள் நின்றபிறகும், இன்னும் நான்கைந்து காய்களை எடுத்துப் போட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு சில்லறை கொடுத்தபோதும், அவர் முகத்தில் திருப்தியில்லை. காய்களை விற்பது தன் தொழில் தர்மத்தில் வராது என்று அவர் எண்ணியிருந்தாரோ என்னவோ.

சில நிமிடங்கள்முன் அந்தக் காயொன்றைச் சாப்பிட்டேன். மேல்பகுதி துவர்ப்பு, உள்ளே மிக இனிப்பு!

***

என். சொக்கன் …
12 08 2015

எழுதியவர் : செல்வமணி - இணையம் (19-Sep-15, 11:05 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : koiyaa
பார்வை : 128

மேலே