மலை ராணி

ஓரிரு நாள் பயணமாக முசௌரி (’மலைகளின் அரசி’ என்கிறார்கள் ஹிந்தியில், நம் ஊரில் ஊட்டிக்குத் தரும் அதே பெயர்) வந்துள்ளேன். டெல்லிக்குமேலே நான் எட்டிப்பார்ப்பது முதன்முறை. கொஞ்சம் திகைப்பான தரிசனம்தான்.

நான் (2 மணி நேரம்) பார்த்தவரை உத்தராகண்ட் சாலைகள் மிகச் சுமார். தலைநகரமே தமிழக 3ம் நிலை நகரத்தைவிடச் சற்றே மேல்தான் உள்ளது.

சாலைகளின் இருமருங்கிலும் சுடச்சுட(?) விற்பனையாகிறவை: இளநீர், கருப்புக் கண்ணாடிகள் (ஒரே விலை: ரூ 99), சுட்ட சோளம், பள்ளி, கல்லூரிகள்.

ஆங்காங்கே ‘மேகி பாயின்ட்” என்ற பெயரில் சிற்றுண்டிக் கடைகள். அது இந்த ஊர் மேகியாம், அதாவது இந்த ஊர் நூடுல்ஸாம், முயற்சி செய்யலாமா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

முசௌரி (ஹிந்தியில் மசூரி என்று எழுதுகிறார்கள்) ஓர் அற்புதம், குறிப்பாக, பள்ளத்தாக்குகளும் சுவர்களில் அழகுறப் படர்ந்துள்ள பசுந்தாவரங்களும்.

விநாடிக்கொருமுறை பனி படர்ந்து விலகுவதால், ரெண்டு மணியிலிருந்து ஏழு மணிக்கு லாங்க் ஜம்ப் செய்து மறுகணம் ரெண்டே காலுக்குத் திரும்பி வந்தாற்போல் டைம் மெஷின் உணர்வு.

மக்கள் கேரளாபோல் கையில் குடையோடு நடக்கிறார்கள். பேருந்து நிலையம் (”நிறுத்தம்” அல்ல) என்பது பெட்டிக்கடை சைஸில் இருக்கிறது. மாணவர்களின் யூனிஃபார்ம் பேரழகு!

மலைப்பிரதேசங்களில் கல்வி, குறிப்பாக போர்டிங் ஸ்கூல் கல்வி செழித்து வளர்தலின் உளவியல் என்னவாக இருக்கும்?

ஆங்காங்கே குலாப் ஜாமுன்கள் தோணி சைஸ் பாத்திரங்களில் வேகின்றன. இன்னும் பெயர் தெரியாத பல ஸ்வீட்களுடன் கொண்டைக்கடலை குல்ச்சா என்றொன்றும் கிடைக்கிறது.

இந்த இடுக்கிலும் ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டிய கடையில் நல்ல ஃபில்டர் காஃபி கிடைத்தது. எப்பிறவியிலோ தவஞ்செய்துளேன்!

‘மெட்ராஸ் கஃபே’யில் ஃபில்டர் காஃபி தயாரித்தவர் சீக்கியர். அவர்களுடைய குருநாதர் ஒருவரைப்பற்றிய வண்ண நூலொன்றை இலவசமாகத் தந்து படிக்கச்சொன்னார். இப்புத்தகம் ஏழெட்டு மொழிகளில் (இலவசமாக) வழங்கப்படுகிறது, நூலின் பின்பகுதியில் மாணவர்களுக்குக் கேள்வியெல்லாம் கேட்டு எல்சிடி தொலைக்காட்சி பரிசு தருகிறார்கள்!

முசௌரியில் சுற்றுலாத்தலங்கள் என்று அதிகம் இல்லை. இது சீசன் அல்ல என்பதாலோ என்னவோ, சாலைகளில் சர்சர்ரென்று ஓடும் கார்களும் இல்லை, குப்பை இல்லை, பரபரப்பு இல்லை, நிதானமாகச் சில நாள் ”சும்மா” உட்கார்ந்து ரசிக்கவேண்டிய அழகு.

***

என். சொக்கன் …

29 07 2015

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன். (19-Sep-15, 11:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

மேலே