எதாவது செய்யுங்கள்- சந்தோஷ்
கருப்புத் தாடியுடைய
பாரதியும்
வெள்ளைத் தாடியுடைய
பெரியாரும்
சொல்லாததையா
சின்னப் பொடியன்
நான் சொல்லிவிடப்போகிறேன்?
சொன்னாலும்
என்ன பயன் என
கொக்கிரிக்கிறது ஒரு வார்த்தையான
”ஆணாதிக்கம் ”
காலங்காலமாய்
கவியெழுதவும்
கர்ஜனை செய்யவும் தானா
இருக்கிறது
பெண்மையை தன் கட்டுக்குள்
வைத்திருக்கும் இந்த
ஆணாதிக்கம்.. ?
--
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா மரணம்..
கேள்வியை எழுப்பிச்சென்றிருக்கிறது.
அய்யகோ.. தமிழகமே..
பெண்ணினமே..
என கதறப்போவதில்லை.
கதறினாலும் காறியுமிழும்
ஆணாதிக்கப்பிசாசு.. ?
இனி..
என்ன செய்யப்போகிறது
கண்ணகிக்கு சிலையெடுத்த
இந்த தமிழகம்.. ?
என்ன செய்யப்போகிறது
பெண் முதலமைச்சரை
தலைமைக்கொண்ட
தமிழக காவல்படை..?
என்ன செய்யப்போகிறது
பாரதியை இன்று
கொண்டாடும்
தமிழிலக்கியம் ?
என்ன செய்யப்போகிறீர்கள்
கவிஞர்களே.. ?
எழுத்தாளர்களே?
மீண்டும் பாரதியின்
வரியை எடுத்து பாடாதீர்கள்
பெண்களே...
தொழில்நுட்பத்தில்
வளர்ந்துவிட்டால் மட்டுமே
பெண்ணியம் என்று
கங்கனம் கட்டாதீர்கள்..
யோனி என்றும்
முலை என்றும்
வெளிப்படையாய்
கவிதையினை
எழுதினால் மட்டும்
பெண்ணியம் என்று
கூப்பாடு போடாதீர்கள்.
எதாவது செய்யுங்கள்
எதையாவது செய்யுங்கள்.
கொஞ்சமேனும்
ஆணாதிக்கம் முன்
துணிந்து எதிர்த்துநில்லுங்கள்.
ஆணாதிக்கம் ஒழிக்க
பெண்ணாதிக்கம் ஒன்றும்
செய்யுங்கள்..
தப்பில்லை..
தவறே இல்லை.
தாய்மையுடைய பெண்ணினம்
ஆண் உரிமையை காத்திடும்
நம்புகிறேன்..
பெண்ணாதிக்கம் செலுத்துங்கள்..
துணிந்து நில்லுங்கள்
துணிந்து நிற்க
எதையாவது செய்யுங்கள்
எதாவது செய்யுங்கள்
**
-இரா.சந்தோஷ் குமார்.