399 ரூபாகாரன் -- சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
நிச்சயமாக சொல்கிறேன்
விலைக்கொடுத்துதான் வாங்கியிருப்பாய்
விலைமகளை விட
நானுன்னை சுத்தமாக வைத்திருந்தேன்.
ஆழ்மன வக்கிரங்களை
உன் பாதங்களில் கடத்தி
தேய்த்து தேய்த்து சூடேற்றி
எனை வன்கொடுமையும் செய்திருப்பாய்.
நீ செல்வந்தன் என்றால்
என்னை குப்பைத்தொட்டிக்கு
ஒர் உறவு ஆக்கியிருப்பாய்.
நல்லவேளை நீ
கொஞ்சம் ஏழை
நிறைய நடுத்தரமானவன்
ஆதலால்,
எனக்கு சிகிச்சையளித்து
மீண்டும் சீரழிக்க
அந்தப் பெரியவரிடம்
என்னை தூக்கிக்கொடுக்காமல்
உன் பாவி கால்களால்
தள்ளிவிட்டாய்..!
அட அற்பனே....!
ச்சீ இவ்வளவுதானா நீ !
என நானே நொந்தப்போது
என் மருத்துவ பெரியவரை
ஏதோ ஒரு தீண்டாமையில்
பார்வை வீசி
உன்னிடமுள்ள நாணயத்தையும்
விட்டெறிந்தாய்...
ஓ....! ஜாதி தீ எரிகிறதோ
உன் மானங்கெட்ட இருதயத்தில்...?
மன்னிக்கவும் எஜமானே...
எனக்கு சூடு சொரணை வந்துவிட்டது..!
இதோ நீ தடுக்கிவிழ வைக்கப்பட்டாய்.
தடுத்தது யாருமில்லை
நான் தான் உனது
399 ரூபாய் செருப்பு. !
ஒரு சந்தேகம் மனிதா..
உன் ஜாதியின்
இரத்த நிறமும்
சிவப்பு தானே ..?
***
-இரா.சந்தோஷ் குமார்