தமிழும் தமிழனும்
உலகில்பிறந்த மொழிகளிலே மூத்தமொழி தமிழே!
உயிரும்மெய்யும் கலந்துமானம் காத்ததுவும் தமிழே!
காற்றுதரும் ஒலியில்கூட கலந்திருப்பது தமிழே!
கத்தும்கன்றின் குரலினிலும் கரைந்திருப்பது தமிழே!
யாதும்ஊரே யாவரும்கேளிர் என்றுசொன்னது தமிழன்
ஓதும்உலகப் பொதுமறைதந்து உயர்ந்தவனும் தமிழன்
எட்டாஇமய புகழ்எட்டுத் தொகைநூலும் தந்தே
எட்டுத்திக்கும் இசைபடவே வாழ்ந்தவனும் தமிழன்
பத்துப்பாட்டு தேவாரம் திருவாசகம் அனைத்தும்
கத்தும்கடலைக் கடக்கவைத்து பெயர்பெற்றவன் தமிழன்
அகவாழ்க்கை புறவாழ்க்கை என்றுஇரண்டு வாழ்வை
அகிலமுணர சொன்னதுவும் ஆதிஇனத் தமிழன்
தோன்றிவளர்ந்த மொழிகளுக்கு அன்னைமொழி தமிழே!
தூரதேச அறிஞர்பலர் விரும்பிக்கற்றதும் தமிழே!
முக்கனியின் முதிர்ந்தசுவை முத்தழில் உண்டு
முற்கால நூல்கள்கூறும் படித்திடுவாய் கண்டு
இன்பத்தமிழ் என்றுசொல்ல இனித்திடுமே நாக்கு
இளமைஎன்றும் குன்றாமல் இருப்பதுஅதன் போக்கு
தமிழுக்காக உழைத்தோர்கதை படித்திடுவாய் ஏட்டில்
தமிழோடு தமிழன்பெருமை நிலைத்திருக்கும் நாட்டில்
எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்