மகளே நீ
மதில் மேல் பூனையாய் மனதை அலையவிட்டு
மணித்துளியை மாதமாய் நகர்த்திட்ட வேளையிலே
எண்ணவோட்ட எல்லையில் கேட்டதொரு மாக்குரல்
மகள் வந்துவிட்டேன் சொல்லிவிடு அம்மா என்று
அன்பின் ஆழ்கடலில் பண்பாய் வளர்த்திட்ட
அன்னை மடிதன்னில் என் அன்னையின் பிம்பம் நீ
உயிர் கொடியின் நடுவினிலே உன்னத பூவாக
சந்ததி சங்கிலியின் வந்ததொரு வளையம் நீ
பஞ்சு மெத்தையிலே கருவண்டு கண்ணூடே
பிஞ்சு விரல் கொண்டு பிடித்துவிட்ட என் மகளே
வருங்காலம் காத்திருக்கு வாய் முட்டும் சவாலோடு
சவாலெல்லாம் சாம்பலாக்கி சாதனையாய் மாற்றிவிடு
காலத்தின் மாற்றத்தால் பருவங்கள் சில மாறும்
பருவத்தின் மாற்றத்தால் உருவங்கள் பல மாறும்
மாறாது பார்த்திருப்பேன் பாசத்தை உன் உருவில்
சேராது காத்திருப்பேன் துன்பத்தை உன் அருகில்