குமாபாலசுப்ரமணியன் - பாடலாசிரியர் தகவல்கள்

எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்த தகவல் ஒன்றைச் சரிபார்க்க கூகுள் ஆண்டவனிடம் கையேந்தினேன்.அவனோ செல்வ ராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவனைப் பற்றிய தகவல்களைக் கொட்டுகிறான்.

தமிழ்த் திரையுலகின் தற்போதைய ட்ரெண்ட், பழைய படத் தலைப்புகளில் புதுப்படம் எடுப்பது தான்.

படிக்காதவன் , நான் மகான் அல்ல , பாயும் புலி, சகலகலா வல்லவன் , சவாலே சமாளி இப்படிப் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் , சிவாஜி காலத்திலும் கூட இந்தப் போக்கு நிலவி வந்தது. சில படங்கள் வெற்றி கண்டன. சில படங்கள் தோல்வி கண்டன.

சில உதாரணங்கள்
குலேபகவாலி, அம்பிகாபதி

முதலில் வந்த குலேபகவாலி படத்தில் வி.ஏ.செல்லப்பா, டி.பி.சந்தான லட்சுமி நடித்தனர். அடுத்து வந்த குலேபகவாலி படத்தில் (1955) எம்.ஜி.ஆரும் டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தனர்.

முதலில் வந்த அம்பிகாபதி(1937) படத்தில் தியாகராஜ பாகவதரும் எம்.ஆர்.சந்தான லட்சுமியும் நடித்தனர்,

மானே உனையடைய நான்
என்ன தவம் செய்தேன் சுந்தரி மனோகரி என்று பாகவதர் பாடுவார்.

அடுத்து வந்த அம்பிகாபதியில்(1957) சிவாஜியும் பானுமதியும் நடித்தனர்

உண்மையில் பானுமதி சிவாஜியை விட மூன்று வயது மூத்தவர் , அப்படியிருக்க சிவாஜி பானுமதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சர்யமான விசயம் தான் !

இந்தப் படத்தில் இடம் பெற்ற

மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே

என்ற பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்ரமணியன்

கு.மா.பா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் நிலவைப் பாடுபொருளாகக் கொண்டு பல பாடல்கள் புனைந்திருக்கிறார்.

கோமதியின் காதலன் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன்
சாவித்ரியைப் பார்த்துப் பாடும்...

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
நீ தான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே
நானும் உன்னைப் பார்த்து விட்டால் பெண்ணிலாவே
முகம் நாணியே மறைவதேனோ பெண்ணிலாவே

என்ற பாடல் கு.மா.பா எழுதியது தான்

சித்ராங்கி படத்தில்

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசை முகம்

தங்கமலை ரகசியம் படத்தில்
அமுதைப் பொழியும் நிலவே

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில்
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

0

பாடலாசிரியர் கு.மா.பாலசுப்ரமணியன் திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடி என்ற ஊரில் மாரிமுத்துப் பிள்ளை - கோவிந்தம்மாள் தம்பதிக்கு 1920 இல் மகனாகப் பிறந்தார்

தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்த கு.மா.பா, தாயார் பாடும் தேவார திருவாசகப் பாடல்களைக் கேட்டு தமிழ்ப் பாடல்களின் மேல் காதல் கொண்டார்.

வளர்ந்த பின் , கவி.காமு.ஷெரீப் , மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் நட்பு கிடைத்தது.

சண்முகசுந்தரம் தான் பொறுப்பாசிரியராக இருந்த தமிழன் வாரப் பத்திரிகையில் கு.மா.பாவை உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார்.

தமிழன் பத்திரிகை சென்னைக்கு மாறியதும் சென்னை வந்த கு.மா.பா, பின் இலங்கை சென்று அங்கே வீரகேசரி இதழில் பணிபுரிந்தார்.

பின் தமிழகம் திரும்பி தமிழ்க் குரல் என்ற பத்திரிகை ஆரம்பித்தார். ம.பொ.சி யுடன் சினேகம் கொண்டார்.

திரைப்பட இயக்குனர் ப. நீலகண்டன் உதவியால் கு.மா.பா, ஏ.வி.எம். தயாரித்த ஓர் இரவு என்ற படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

புவிமேல் மானமுடன் உயிர் வாழ
வழியேதும் இல்லையே

பெண்ணாகப் பிறந்து விட்டால்

என்ற இரு பாடல்களை கு.மா.பா எழுதிநார்

1975 இல் தமிழக அரசு கு.மா.பாவிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.

கு.மா.பா எழுதிய பாடல்கள்
________________________________

கனவின் மாயாலோகத்திலே - அன்னையின் ஆணை
சிங்காரவேலனே தேவா - கொஞ்சும் சலங்கை
சித்திரம் பேசுதடி - சபாஷ் மீனா
காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
சிங்கார கண்ணே உன் - வீரபாண்டிய கட்டபொம்மன்
போகாதே போகாதே என் கணவா - வீரபாண்டிய கட்டபொம்மன்
வேலோடு விளையாடும் முருகய்யா
என் வாழ்வோடு விளையாட வந்தானய்யா - சித்ராங்கி
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை
மாலையின் லீலை - நாடோடி மன்னன்
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே -மரகதம்
நெனைச்சத முடிச்சிடுவா பொம்பளத் தங்கம்
இப்போ நின்னுக்கிட்டு முழிக்குறாரு ஆம்பளச் சிங்கம் - புதுமைப் பெண்
மாறாத காதலாலே மனம் ஒன்றாய் ஆனதினாலே- புதுமைப் பெண்
அமுதே ஓடிவா - குழந்தைகள் கண்ட குடியரசு
யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
காதலெனும் சோலையிலே ராதே ராதே - சக்கரவர்த்தி திருமகள்
உன்னைக் கண் தேடுதே - கணவனே கண்கண்ட தெய்வம்
ஆடாத மனமும் ஆடுதே - களத்தூர் கண்ணம்மா
மலரும் வான் நிலவும் - மகாகவி காளிதாஸ்
உள்ளமெல்லாம் தள்ளாடுதே - தூரத்து இடிமுழக்கம்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்கள் - கனவுகள் கற்பனைகள்
கண்ட கனவும் இன்று பலித்ததே - அம்பிகாபதி
ஆட வாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்
எல்லை இல்லாத இன்பத்திலே - சக்கரவர்த்தி திருமகள்
எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள - சக்கரவர்த்தி திருமகள்
காதல் உள்ளம் கவர்ந்த - சங்கிலித் தேவன்
பிரம்மன் தாளம் போட - கொஞ்சும் சலங்கை
கண்ணாளனே வாருங்க - சக்கரவர்த்தி திருமகள்
மண்ணுலகமெல்லாம் - உத்தமபுத்திரன்
யாரடி நீ மோகினி - உத்தமபுத்திரன்
தாரா அவர் வருவாரா - அரசிளங்குமரி
இன்று வந்த சொந்தமா - சித்ராங்கி
தென்றல் ஒரு தாளம் சொன்னது - கனவுகள் கற்பனைகள்
சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், தூரத்து இடி முழக்கம் - எல்லாப் பாடல்களும்

எழுதியவர் : செல்வமணி - இணையம் - கணேஷ் கு (28-Sep-15, 12:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 370

மேலே