சமத்துவம்
#குறுங்கதை
---------------------
காலிங்பெல் சத்தம்கேட்டு கதவு திறந்தேன். கடவுள் நின்றிருந்தார். உலகின் மதங்கள் கூறும் எவ்வித அடையாளங்களும் அவரிடம் காணப்படவில்லை. ஆனால் அவர் கடவுள்தானென்று எனக்குள் ஏதோ ஒன்று உறுதியாகக்கூறியது. சரி அதை விட்டுவிடலாம். உள்ளே வரச்சொல்ல வெட்கத்துடன் மறுத்தார். கொஞ்சம் வற்புறுத்தியபின்புதான் வீட்டிற்குள் வந்தார். சோபா சற்று அழுக்காயிருப்பதால் சேர் தரவா என்று கேட்டேன். இருக்கட்டும் பரவாயில்லை என்று அதிலேயே உட்கார்ந்துகொண்டார்.
எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகத்தான் இருந்தது. முதல்நாள் தான் கடவுளை கண்டமேனிக்கு திட்டிவைத்திருந்தேன். சிபாரிசுக்கு வந்த மனைவியும் என்னிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள். ஆனால் அவரோ நேராக வீட்டிற்கே வந்து உட்கார்ந்திருக்கிறார். கிச்சனிலிருந்து வெந்நீர் கொண்டுவந்து கொடுத்தேன். வெயில் அதிகமென்று பிரிட்ஜ் இருக்கிறதே ஐஸ் வாட்டர் கொடுங்கள் என்றார். என் வீட்டில் யாரும் ஐஸ் வாட்டர் குடிப்பதில்லை. கொஞ்சம் மன்னிக்கச்சொல்லிவிட்டு அவருக்காக ஒரு பாட்டில் நிரப்பி ப்ரீஸரில் வைத்தேன்.
கடவுள் கொஞ்சம் கழிவறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டார். கடவுளுக்கு இல்லாததா ? அனுமதித்தேன். அப்படியே குளியலறை சென்று கைகால் முகமெல்லாம் வாஷ் செய்து பிரஷ்ஷாக வந்து உட்கார்ந்தார். நான் கொடுத்த ஐஸ்வாட்டரை ஆர்வத்துடன் குடித்தார். பின்பு நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
"நீ என்னை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய் தம்பி. புரியவைக்கலாம் என்றுதான் வந்தேன்" என்றார். அவர் கொண்டுவந்திருந்த தோள்பையினுள் கைவிட்டு அதை வெளியிலெடுத்தார். பழைய படுக்கைவச டேப் ரெக்கார்டர் போலிருந்தது அது. டிஜிட்டல் மானிட்டரும் ஒரு தட்டும் அதிலிருந்தன.
"என்னங்க அது" ? என்றேன்
"பயப்படாதே இது ஒரு தராசுதான். இதில் நீ விரும்பும் எல்லாவற்றையும் எடைபோடலாம்"
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. " என்னங்க நீங்க, இந்தச்சிறிய தராசில் எப்படி எல்லாவற்றையும் எடைபோட முடியும்"? என்று கேட்டேன்.
அவர் கொஞ்சம் சீரியஸான முகத்துடன் கூறினார்.
"இதிலிருக்கும் பித்தானை அழுத்தியதுமே நீ எடைபோட விரும்பும் பொருள் இந்தத்தட்டின் அளவிற்கு சிறுத்துவிடும்"
"சரி இதை எதற்காக என்னிடம் தருகிறீர்கள் ? நான் என்ன செய்யவேண்டும்"?
" மிகச்சுலபம். இதைக்கொண்டு உன் விருப்பம்போல அனைத்தையும் எடைபோட்டுவிட்டு, எது எது என்னன்ன எடையில் இருக்கிறதென்று ஒரு டைரியில் குறித்துவைத்துக்கொள். நான் அடுத்தவாரம் வருகிறேன்" என்று எழுந்துகொண்டார்.
எனக்கு புரிந்தது. நேற்று அவரை நான் திட்டியது நிரம்பக் காயப்படுத்தியிருக்கவேண்டும். எதற்காக இந்த உலகை இப்படி ஏற்ற இறக்கங்களுடன் படைத்திருக்கிறாய் ? ஒருபக்கம் மிதமிஞ்சி உணவுண்டு வியாதிகண்டு இறக்கிறார்கள். மற்றொருபக்கம் உணவிற்கே வழியின்றி பசியால் சாகிறார்கள். எதற்கிந்த பாரபட்சம் ? என்றெல்லாம் கம்யூனிசத்தனமாக நான் திட்டியதால் அவர் எனக்கு எதையோ உணர்த்த விரும்புகிறாரென்று புரிந்துகொண்டேன்.
"ஒரு மிகமுக்கியமான விஷயம். மறக்காமல் எடைபோட்டபின் தட்டிலிருந்து இறக்கிவிடு. ஐந்து நிமிடங்களுக்குமேல் தாமதித்தால் நீ எடைபோடும் விஷயம் அதே சிறிய உருவத்திலேயே நிலைத்துவிடும்" என்று எச்சரிக்கையை வைத்துவிட்டுக்கிளம்பினார்.
கடவுள் சென்றபின் தராசை எடுத்துக்கொண்டு கதவைச்சாத்திவிட்டு கிளம்பினேன். எங்கள் அப்பார்ட்மெண்ட் வாச்மேனருகே சென்று தராசிலிருந்த பித்தானை அழுத்தினேன். சட்டென்று அவர் ஒரு விளையாட்டு பொம்மைபோல சிறுத்துப்போனார். சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு அவரை எடைபோட்டேன். பாக்கெட் டைரியில் அவர் எடையைக் குறித்துக்கொண்டபின்பு வாச்மேனை வெளியில் இறக்கிவிட்டதும் பழைய உருவத்திற்கு திரும்பினார். நடந்த எதுவும் அவருக்குத்தெரியவில்லை. வழக்கம் போல ஒரு சல்யூட்டை வைத்தார். ஓ இவ்வளவுதான் விஷயமா என்றெண்ணியபடி நடகக்த்தொடங்கினேன்.
வழியில் தென்பட்டப் பலரையும் அதேவிதமாக எடைபோட்டேன். ஒரு சேல்ஸ் ரெப், கீரைக்காரப்பாட்டி, டீக்கடை மாஸ்டர், மளிகைக்கடைக்காரர், பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள், சாக்கடை அள்ளும் கார்ப்பரேஷன் ஊழியர், பென்ஸ் காரில் இறங்கி யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்த ஒருவர், மோட்டார்சைக்கிள் இளைஞன், லெக்கின்ஸ் இளைஞி என்று ஒருவர்விடாமல் எல்லோரையும் எடைபோட்டு டைரியில் குறித்துவைத்துக்கொண்டேன்.
ஆடு மாடு கோழி நாய் என்று விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. கழுதைகள்தான் அதிகம் கிடைக்கவில்லை. பிறகு நகரத்திற்கு வெளியே ஓரிடத்தில் அதையும் பிடித்து எடைபோட்டுக்கொண்ட்டேன். பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் புகுந்து அங்குள்ள அத்தனை பொருட்களையும் எடைபோட்டுக்கொண்டேன். ஓட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த டேபிள் சேர் கல்லாப்பெட்டி அடுப்பு அனைத்தையும் எடைபோட்டேன். ரோட்டில் நின்றிருந்த வாகனங்கள், தள்ளுவண்டிகள் புல் கல் மரங்கள் செடிகொடிகள் ஏன் சில கட்டிடங்களைக்கூட விட்டுவைக்கவில்லை.
டைரியில் இடம்போதாமையால் எடைபோடுவதை நிறுத்திக்கொண்டேன். அன்றிரவு முழுக்க உறக்கமில்லை. கடவுளின் வருகைக்காகக் காத்திருந்தேன். என் அதிர்ஷ்டம் கடவுள் மறுநாளே வந்துவிட்டார். இம்முறை முன் யோசனையுடன் வைத்திருந்த ஐஸ் வாட்டரை அவரிடம் நீட்ட மகிழ்ச்சியுடம் வாங்கிக்குடித்தார். பிறகு சிரித்தபடியே கேட்டார்.
"என்ன எடைபோட்டாயா என்னாயிற்று"?
" ஆங் வெய்ட் போட்டுட்டேங்க. ஆனா என்ன ஆச்சரியம்னா எல்லாமே ஒரே சமமான எடையில இருந்துச்சிங்க. மனுசன் மாடு பில்டிங்கு பொருளுங்க எல்லாமே சேம் வெய்ட்டுங்க"!!
கடவுள் குழந்தைபோல வாய்விட்டுச்சிரித்தார்.
"பார்த்தாயா அதனால்தான் உன் கையில் தராசைக்கொடுத்து நிறுக்கச்சொன்னேன். நானாக நான் படைத்தபோது சமமாகத்தான் படைத்தேன் என்றால் நீ ஒப்புக்கொண்டிருப்பாயா"?
நான் தலைகுனிந்துகொண்டேன்.
"உண்மைதாங்க. ஆனா நீங்க படைச்சப்ப எல்லாம் சரியாத்தான் இருந்திச்சுன்னா இப்ப இந்த ஏற்றத்தாழ்வெல்லாம் எப்புடிங்க வந்திச்சு"?
" அது உங்களுக்கு நீங்களே கேட்டுக்கவேண்டிய கேள்வி. இயற்கையை மாத்துறேன் ஜெயிக்கிறேன்னு நீங்க கெளம்பறப்ப எல்லாம் இங்க சில விஷயங்கள் மாறிப்போயிடுது. இயற்கையோட சுழற்சி ரொம்ப மெதுவானது. இங்க உள்ள எதுவுமே ஒருநாள்ல உருவாகலை. ஒவ்வொன்னுக்கும் கணக்கில்லாத வருஷங்கள் ஆகியிருக்கு. ஏன் மனுஷங்களே இந்தவிதமா உருவாக எவ்ளோ காலமாயிருக்குன்னு தெரியுமா"?
எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. கடவுள் சொல்வதை ஒருபக்கம் ஒப்புக்கொண்டாலும், சிலவற்றை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒருவன் ஏழையாகவும் மற்றொருவன் பணக்காரணாகவும், ஒருவன் அஹிம்சையாளனாகவும் ஒருவன் வன்முறையானவனாகவும் என்று எத்தனைவிதமாக இருக்கிறார்கள். கடவுள் எழுந்துகொண்டார்.
"சரி நான் கிளம்புகிறேன். மிகச்சரியாக ஒரு லட்சம்பேர் என்னை திட்டிக்கொண்டிருக்கிறார்கள் இப்போதைய விநாடியில்" எனறு சிரித்தார்.
"கடைசியாக ஒரேயொரு உதவி" என்றேன்.
"என்னப்பா"?
" எல்லாவற்றையும் எடைபோட்டாயிற்று. உங்களை மட்டும் விட்டுவைப்பானேன். எப்படி நீங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த கடவுளாக இருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விருப்பம்"
'அட அப்புரானிப்பயலே' என்பதுபோல என்னை பாவமாக பார்த்தார்.
"சரி தராசை எடுத்து வா " என்றார்.
நான் பெட்ரூமிலிருந்து தராசை எடுத்துவந்தேன். பட்டனை அழுத்தியதும் கடவுள் சிறுத்து பொம்மையானார். அவரை எடுத்து தராசுத்தட்டில் வைத்து, தராசைத்தூக்கி ஷேக்கேஸில் வைத்துவிட்டு வேலைக்குக்கிளம்பிவிட்டேன்.
ங்கொய்யால யாருகிட்ட..