எங்களையும் காதலியுங்கள்
மரித்துபோன மரணத்தின் சுகமாய்..சோகமாய்
அல்லது இரண்டும் தெரியாத கானலாய்
கைகளின் ஜாலத்தில் தந்திரங்களை கையகப்படுத்தி
மாயங்களைப் பயிர்செய்யும் மந்திரவாதியின்
மர்மராஜ்ஜியம் எங்கள் வாழ்க்கை !
பட்டினிப்பரிணாமங்கள் நெருக்கிகொண்டிருக்கும்
நொறுங்கிய இடைவெளிச் சுவடுகளில்
வறுமையின் வரப்பிரசாதங்கள்....
அதை மறைக்க எத்தனையோ கபட நாடகங்கள்..!..!.
தாழ்வு மனப்பான்மையை துரத்தியடித்திட
வறுமையைத்துரத்திட
மற்றவர் போல் உயரப்படித்திட ஆசையிருந்தது அன்று...
கடவுளின் சூழ்நிலைக்கிறுக்கலில்
குடும்பச் சோற்றுக்காய் சேற்று வாழ்க்கையில்
நான் படிக்கும் பாடங்களில்
மனதுக்குள் ஏதோ ஒரு திருப்தி
இருக்கத்தான் செய்கிறது...
ஒருவேளை படித்திருந்தால் தனியிடம்
எங்கும் எதிலும் கிடைத்திருக்கும்...
ஆனால் படித்துமுடித்து வேலைகிடைக்கும்வரை
இருந்திருக்குமா எங்கள் குடும்பம்.!
இல்லையில்லை வறுமையின் பிடியில்
இறந்தே போயிருக்கும்....
படிக்கும் வயதில் சுழன்றடிக்கும் புயலாய்
உருமாறி உழைத்தேன்
உணவு உண்ணும் நேரங்களையும்
மிச்சப்படுத்தி பணமாக்க !..
அந்த உழைப்பின் வரவுகளில்
தங்கைக்கு திருமணம் செய்தேன்
தந்தைக்கு வைத்தியம் பார்த்தேன்
வாழ்க்கையின் வறுமை அலைகடலில்
குடும்பப்படகை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தேன்...!
இப்போது வயல்வற்றிப்போக
தொலைதூரக்கல்விக்கு தூதுமுறைத்திட்டத்தில்
சேரப்போனால்
கொடுக்கும் அந்த ஆங்கிலப் பாரத்தை நிரப்பக்கூட
ஆயிரம் தடுமாற்றங்ளைத் தந்த கல்வித்திட்டம்...!
அப்படித் தேர்ந்து எழுந்தாலும்
வேலைவிவகார நேர்முகத் தேர்வுகளில்
அரசாங்கப் பள்ளி என்பதில்
அரை நாக அவுட்..!
தொலைதூரக்கல்வி என்றதும்
மொத்தமும் நாக் அவுட்...!
இதில் நரிகளின் தந்திரம்போல்
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள்...
பணந்தின்னிக்கழுகுகளாய் பாரபட்சமற்ற மனதுகள்...!
இவர்களைப் புறந்தள்ளிவிட்டு
எழும்போது என் வயதும் கடந்து
திருமணமாகமலேயே
கைம்பெண்ணாய்ப் போன உளைச்சல்
எனக்குள் என்றும் ஒவ்வொரு நாளும்..!
விவசாயம் செய்பவனுக்குப்
பெண்ணில்லை எனும்போது
உதிரங்களும் உறைந்து போகிறது துயரில் !
மனதுக்குள் எழும் வலிகளில்
சிலசமயங்களில் ஒட்டுமொத்த இதயமும்
வெறுமையில் வெடித்து சிதறித்தொலைகிறது..
இதென்ன இப்படி ஒரு நாகரீகச்சிந்தனை..?
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் என புத்தகத்து வரிகளுக்கு
வந்தனை சொல்லிவிட்டு
உழவன் மணமகன் என்றால்
ஒதுக்கித்தள்ளுவோம் என்று
நிந்தனை வார்த்தைகள்...!
எங்களையும் காதலியுங்கள்..!
கருப்பாய் இருந்தாலும்
எங்களின் வெள்ளை மனதை தெரியப்படுத்த
சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறில்லையே..!
எங்களின் அழுக்குக்கரை வேட்டியிலும்
இருக்கிறது ஓராயிரங்களின் உன்னதங்கள்..!.!
எங்களையும் திருமணம் செய்துகொள்ளுங்கள்..
பிறக்கப்போகும் பிள்ளைகளின் உடலணுக்களில்
எங்காவது ஒரு மூலையில் இருந்துவிட்டுப்போகட்டும்
நம் விவசாயம் எனும்
தேசியத்தொழிலின் உன்னதங்கள்
தொலைந்துபோகாத தொல்லியல் சின்னங்களாய்..!