அறுபதாம் திருமண வாழ்த்து மடல்---பகுதி 02

கவிதை பதிவு எண் 262882-ன் தொடர்ச்சி...


விவேகமான பெண் என்று
வேலூரில் இருந்து அழைத்து வந்தாய்
ஆஷா லதா என்கிற
அழகு சரோஜா தேவியை
எங்களின்
அண்ணியாய்.. அன்னையாய்...!!

சாதுவாகத்தான் இருப்பாய்
ஏனோ
கோபம் வந்தால் மட்டும்
காடு கொள்ளாதுதான்..!!

கோபம் கொள்வதில்
கலியுக இலட்சுமணன் நீ..

உன்னால்தான்
எத்தனை மூக்கு
அறுபட்டு போயிருக்கிறது..!!
கணக்கிட்டுப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில் அடங்கவில்லை...

இலட்சுமணனையும்
மிஞ்சிவிட்டாய்..!!

**************************************************

பிரியாணி
உனக்கு
பிடித்தமான உணவு...
வாசத்தைக் கூட
சுவாசித்து ரசிப்பாய்...

"ஆஹா... என்ன வாசனை...
வாசம் மூக்கைத் துளைக்கிறதே"

பிரியாணியின் பாதி வேக்காட்டில்
வாசத்தை மொத்தமாய்
உறிஞ்சி கொள்வாய்...!!

என்ன சாபக் கேடோ
தெரியவில்லை
பிரியாணி வாசனை பிடித்தவுடன்
உனக்கும் ஏதோ பிடித்துவிடும்...

அடுத்த நிமிடம்
ரணகள ரகளைதான்...
யார் மீதோ. .. எதன் மீதோவான
கோபமெல்லாம் விஸ்வரூபமெடுக்கும்...

உன் ருத்ர தாண்டவத்தில்
நாங்கள் எல்லாம்
ஓரம் ஒதுங்க....
பிரியாணியை நீ ஓரங்கட்டுவாய்...

உனக்கும் பிரியாணிக்கும்
யார் சாபமிட்டது...
பிரிந்தே இருங்கள் என்று...??
எப்போது பிரியாணி செய்தாலும்
பிரச்சினைகள் சாமியாடுகிறது...!!

உன் நாசியை தூண்டிய வாசம்
நாவிற்கு நாமம் சார்த்திவிடும்....
உண்ணாமல் ஏமாந்தே போவாய்...

கோபமில்லை என்று கூறு
முழுக் கோழியுடன்
தலப்பாக்கட்டி பிரியாணி
திகட்ட திகட்ட
உண்ணத் தருகிறோம்
இந்த இனிய திருமண நாளில்....

-------------------------------->.......தொடரும்....

எழுதியவர் : சொ. சாந்தி (28-Sep-15, 10:43 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 8166

மேலே