படிக்கும் பழக்கம் பழக்குவோம்

படிக்கும் பழக்கம் பழக்குவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

வாழையிலை அழகாக இருப்ப தாலே
வான்மறைக்கக் குடிசைக்குக் கீற்றாய் ஆமோ
தாழைமரம் தென்னைப்போல் இருப்ப தாலே
தங்கிருக்க வீட்டிற்குத் தூணாய் ஆமோ
பேழைக்குள் அடுக்கிவைத்துப் பாது காத்தால்
பெருமறிவு தானாக வந்தா சேரும்
ஏழையவன் செல்வத்தைச் சேர்க்க எண்ணும்
ஏக்கம்போல் படித்தால்தான் அறிவு சேரும் !

கண்ணாடித் துகள்களினை வைரம் என்றே
கண்மயங்கி மதிமயங்கிப் போதல் போன்று
கண்மயக்கும் வனிதையரின் படங்கள் போட்டுக்
காட்சிகாட்டும் நூல்களினை வாங்கு கின்றார்
எண்ணத்தைச் சீராக்கும் கருத்தைக் கூறும்
ஏடுகளை நிதம்தேடி படிக்கும் போதே
உண்மையான உறுதிவந்து வாழ்வில் சேரும்
உயரியநல் அறிவுவந்து நம்மில் கூடும் !

நுனிப்புல்லை மேய்தல்போல் நூலை மேய்ந்தால்
நுண்ணறிவு வாராது ; மாட்டைப் போல
திணித்தவற்றை அசைபோட்டை அரைத்தல் போன்று
திருத்தமுறப் படித்தால்தான் நினைவில் நிற்கும்
கணினிக்குள் தொலைக்காட்சிப் பெட்டிக் குள்ளே
காலத்தை வீணாக்கும் இளைஞர் நெஞ்சுள்
நனிமுத்து நூல்களினை வாசிக் கின்ற
நற்பழக்கம் வளர்த்தால்தான் உயர்வர் நாளை !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (29-Sep-15, 4:50 am)
பார்வை : 707

மேலே