ஞாபகக் கிளறல்கள்
மழைவிட்டும் தூவானம்
தொடர்கின்ற கதையாய்
நீ சென்ற பின்னும்
என்மேல் பொழிகின்றன
உன் நினைவுகள்...
உனக்கென்ன
பார்வைகளை
பரிமாறிவிட்டு
பட்டென நகர்கிறாய்
பற்றிக்கொண்டு
சிக்கிச்சிதறுவது
நானல்லவா...
அது எப்படி
உன்னால் மட்டும்
உயிர்வரை
உள் நுழைந்து
மனப்பிம்பங்களாய்
மலரமுடிகிறது...
எதிர்பாரா சமயத்தில்
என்சன்னல் வழித்தழுவும்
காற்றின் ஸ்பரிசங்களாய்
என்னுள்ளே வியாபித்து
ஏகநர்த்தனமாடுகிறாய்...
உன் ஓர்பார்வையே
என்னுள் முன்ஜென்ம
ஞாபகக்கிளறல்களை
எழுப்பிக்கொண்டிருக்க
இன்னுமெத்தனை
ஜென்மங்கள்
தொடர்வாயோ
என் உயிர்குடிக்க...
ஓர்பனிச்சாரலின்
சில்லிப்புகளை
உன்பார்வைகள் பிரசவிக்க
மறுபார்வை வீசாதே
பகலவனின் சுடரொளிபடும்
பனிப்பாறைகளாய்
உருகிடக்கூடும்
நான்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்