காந்தி பவன்

1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.

டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.

முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.

நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.

காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’

யார் அந்த அவன்?

அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?

மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.

மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.

மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’

‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.

ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.

மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக

ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’

காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’

‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’

‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’

‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’

‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’

‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’

காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.

இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’

அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’

அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.

ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.

‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’

‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’

காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’

‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’

கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.

மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.

பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.

முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.

அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!

காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.

இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.

இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.

யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.

நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.

‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.

‘அப்ப இந்த லைப்ரரி?’

‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’

பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.

சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.

இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.

ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.

ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.

முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.

அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.

காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.

பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சொக்கன் (4-Oct-15, 9:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

மேலே