ஏழாவது மனிதன் 7

பிளக்க பிளக்க
வெறும் பாறை,
பூத்துக் குலுங்கும்
கண்ணீர் மழை...
காற்றில்லா வருடங்களை
அடுக்கி செய்த பருவங்கள்,
மிச்சதோடு எச்சமென
தினம் உடைக்கும் செவ்விரவு...
கலாசாரம் கால் ட்ரவுசர்
என அவுத்து வீசும்
அவளுக்கு எங்கும் பசி...
அங்கும் பசி...
முளைவிட்ட ராத்திரிகளை
முந்திரிகளின் தேவையென
கத்தரிப்பூ கவிதை செய்வது
நரிகளின் தொல்லிய ஊளை..
தலை பிடித்து சுற்றும்
பூமியின் முலை பிடித்து
கறந்த பின் சீரும் ரத்தச்
சகதிக்குள் வேட்டைக்காரனின்
வேதியியல்....
சாலைகளின் பிச்சைப்
பாத்திரம், குண்டும் குழியுமென
வயிறும் கன்னமும்
தலை விரிந்த பிஞ்சுகளின்
நெஞ்சாய்.....
கூரைக்குள் மிதக்கும்
பாரதப் பாதங்களில்
கொசுக்களின் மலம்
தின்னும் வயிறு பெருத்த
சாட்சியங்கள்
எதிர் வீட்டு பெரும் ஜன்னல்...
ஓட்டுப் போட்ட விரல்
அறுத்து சூப்பித் திரியும்
விளங்காத இதயக்காரன்
வீரிட்டு கத்தியும் எடுப்பான்.....
புத்தியும் எடுப்பான்,
என்றாவது...அது,
இன்று ஆவது....
கவிஜி