வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்
~~~வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்~~~
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியட்னாமில் வோ-சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION) இது செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை) கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன. ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன. சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன. கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன. கல்வெட்டின் சில வரிகள்:-
. .. . . … ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . ..
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . .. .. . . . . ..
ஸ்ரீ மாற லோ. . . .. ன. . . .. .. .குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. ..ச . . . . . . . .. .. ..
இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும், அசையா சொத்து (ஸ்தாவர, ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான். எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான். இது வீரனுக்கு தெரியட்டும். . .. . . .. . . .. .. . .என்று பாதியில் முடுகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல” என்பதாகும். இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது. ஆனால் வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது.
திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY) சீனாவை ண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘சம்பா’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர். சம்பா (CHAMPA) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும். மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN) என்றும் எழுதிவைத்துள்ளனர். இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO) புதல்வன் என்றும் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர். கி.பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது. ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது.
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை. எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN) என்று முடிவதால் இதை ‘வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர். ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் ஸ்ரீமாறன், வர்மன் என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன.
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் மூலவர்மன் என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் 800க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன:-
(1) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன். அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம்.
(2) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது. அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி), ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி) ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம். பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.
(3) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க கால மன்னன் நிலந்தரு திருவில் பாண்டியன் என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது. பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
(4) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்து முறை ‘மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் முடித்திருமாறன். நற்றிணை 105, 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன்.
(5) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன. அகத்தியர் “கடலைக் குடித்த” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன. முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “கடலைக் குடித்தார்” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர். வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “குல குரு” என்றும் கூறுகிறது.
(6) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன், பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6 –61)
ஆசியாவில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
(7) புறநானூற்றுப் பாடல் (புறம் 182) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி. இவன் வெளிநாடு செல்லும்போதோ, வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.
(8) டாலமி, பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர்.
(9) தென் இந்தியாவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது.
(10) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன.
(11) ‘மிலிந்த பன்ன’ என்ற கி.மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம், குஜராத், சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(12) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது. தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன. அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன.
ரோம் (இத்தாலி) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே!
நன்றி : நான்காம் தமிழ்ச் சங்கம்