மக்களை காத்து வரும் நீதித்துறை

நீதித் துறை வலுவானதாக உள்ளதால் மட்டுமே இந்தியா இன்னமும் ஜனநாயக மரபில் வாழ்கிறது. துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பலமுள்ளவனாக கருதப்படுவதில்லை. அராஜக வழியில் துப்பாக்கி தூக்கியவர்களை மரணக் கயிற்றில் ஏற்றும் நீதித்துறையே பலமுள்ளது என்பதை நிரூபித்தும் வருகிறது.

இந்த நாட்டில் சட்டத்தின் கைகள் வலுவாக இருப்பதால் தான் 'ஆயுதம் ஏந்தும் கைகள்' குறைவாகவும், அமைதியை வரவேற்கும் கைகள் அதிகமாகவும் உள்ளது. உறவுகளோ, தொழிலோ, அரசியலோ வேற்றுமை அதிகமுள்ள இந்த சமூக மக்களிடம், நீதிபதி சொல்லட்டும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லும் மனிதர்களும் உள்ளதால் தான் சட்டம் வலுவுள்ளதாக மக்களை காத்து வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் 1862-ல் தொடங்கப்பட்டு, 153 வருட பாரம்பரியமிக்க பெருமை கொண்டது. பல லட்சம் நேர்மையான வழக்கறிஞர்களை, நீதிபதிகளை கொடுத்து நீதியை வாழவைத்த வரலாறு கொண்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பதஞ்சலி சாஸ்திரி என்ற தமிழர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை தமிழகத்திற்கு கொடுத்தவர். முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில், இந்தியாவில் முதல் முறையாக மின்னணு திரை வாயிலாக விசாரணையை வெளிப்படையாக கொண்டு வந்த பெருமையும் சென்னை உயர் நீதிமன்றத்தையே சேரும்.

ஆட்சியாளர்கள் தடம் மாறும் போது சாட்டையை எடுக்கவும் நீதி மன்றம் தவறாது என்பதும், உயர் பதவியில் உள்ள அரசு, போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், சட்டத்தின் வலிமையை காண்பிக்கத் தவறியதுமில்லை என்ற பெருமை கொண்டது சென்னை உயர் நீதிமன்றம்.

புனிதமான வழக்கறிஞர் தொழிலின் மதிப்பை தரம் உயர்த்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் 'பார் கவுன்சில் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சட்டக் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர பரிந்துரை'யும் செய்துள்ளது சரிந்து வரும் சட்டக் கல்வியையும், சட்டத்தை நம்பியுள்ளவர்களது தொழில் நிலையையும் மாற்றி, சட்டத் தொழில் நேர்மையானவர்களுக்கு மட்டுமே என்று அடித்தளமிட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டத் தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, சட்டத்தை நம்பியுள்ள பொது மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியாகவே இருக்கிறது.

நீதித்துறை மேல் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும், சமீப காலமாக வழக்கறிஞர்களின் போக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்களின் சாலை மறியல், நீதிமன்றப் புறக்கணிப்பு, நீதிபதிகளை அவதூறாகப் பேசுவது, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக போராடுவது, ஜாதி ரீதியாக குழு அமைப்பது என பல வகையில் சட்டத்தை மீறிய செயல்கள் செய்யும் போது, நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறதா என்ற கேள்வியுடன் மக்கள் புலம்பிய நிலையில் நீதிபதி கிருபாகரன் எடுக்கும் முயற்சி தமிழக நீதித் துறைக்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நான் சட்டக் கல்லூரி மாணவன் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது எனவும், நான் வழக்கறிஞர் என்னை யாரும் நெருங்க முடியாது எனவும், வழக்கறிஞர் என்பதின் மூலம் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவதும், பேருந்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சண்டை என்ற செய்தியும் அன்றாட காட்சிகளாக மக்கள் பார்த்து பழகிய ஒன்று தான்.

சட்டக் கல்லூரியில் சேர குற்றப்பின்னணி இல்லாதவர்களை, சாதிப் பின்னணி இல்லாதவர்களை சேர்க்கவேண்டும் என்ற சமூக நோக்கர்களின் நீண்ட கால கோரிக்கையை நீதிமன்றம் கருத்தில் கொண்டது, சட்டக் கல்விக்கு கிடைத்த பரிசாக கருத வேண்டும்.

பொறியியல், மருத்துவம் போல சட்டக் கல்விக்கும் நுழைவுத் தேர்வை கடுமையாக்கியும், சாதி மத சலுகை இல்லாமல் நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் சட்டத்துறையில் சேர்ந்தால் மட்டுமே வருங்காலத்தில் சாதி பின்புலமில்லாமல் சட்ட வல்லுனர்களாகவும், நீதிபதிகளாகவும் இன்றைய மாணவர்கள் திகழ்வார்கள் என்பது உறுதி.

ஆண்டு தோறும் பெருகி வரும் வழக்கறிஞர்களின் எண்ணிக்கையால் தொழில் போட்டி, பண வெறியால் நீதியின் குரல் நசுக்கப்பட்டு வருகிறது. சட்டக் கல்வியின் தரத்தை அழித்து புகழ் பெற்ற உயர் நீதிமன்ற வளாகத்தை ஜாதி, அரசியல் ரீதியில் போராட்டம் செய்யுமிடமாகவும் மாற்றி விட்டார்கள்.

இன்றைக்கு நீதித்துறை வலுவில்லாமல் போகக் காரணமே வழக்கறிஞர்களின் வரம்பு மீறிய செயல்கள் தான் என்றால் மிகையாகது. நீதித் துறை வலுவாக இருந்த காலத்தில் எல்லாம் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருந்தது. லஞ்சமில்லாத அரசு அலுவலகம் நடக்க நீதித்துறையின் மீது இருந்த பயமும், மரியாதையும் ஓர் காரணம்.

சட்டக் கல்லூரியில் அடாவடி செய்பவர்களை அதிரடியாக நீக்கம் செய்ய வேண்டும். சட்டக் கல்லூரி, நீதிமன்ற வளாகத்தில் ஜாதி, அரசியல் படங்கள், பேச்சுக்களை தடை செய்ய வேண்டும். வழக்கறிஞர்களின் கல்விச் சான்றிதழை நீதி மன்றம் கேட்டுப் பெற வேண்டும். போலியான வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும். மூன்று வருடத்திற்கு ஒரு முறை வழக்கறிஞர்களின் தகுதி, தரம், ஒழுக்கம் போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும்.

நீதிக்கு துணை நிற்க வேண்டிய காவல் துறையையும் சீர்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சட்டத்தை காப்பதாகச் சொல்லிக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளும் காவல் துறையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காமல் அதிரடி பணி நீக்க உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

நீதித்துறையை நவீனப்படுத்த வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாமல் நேர இழப்பு செய்யாத வகையில், சாட்சிகள் வீடியோ பதிவு, கேமரா கண்காணிப்பு போன்ற நவீன வசதிகள் மூலம் வழக்குகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்.

- எஸ்.அசோக்

எழுதியவர் : Vikatan EMagazine-- எஸ்.அசோக். (8-Oct-15, 9:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 671

சிறந்த கட்டுரைகள்

மேலே