கொஞ்சமல்ல

"அம்மா..மோர்க்காரம்மா "..
என்ற பையனின் குரலில்
மகிழ்ச்சி ..
கிடைக்கப்போகும் அகப்பை தயிர்
கொஞ்சத்திற்க்காக..
மோர்க்காரம்மா வந்து போன
கொஞ்ச நேரத்தில்..
மணிகளோடும்..வண்ணத் துணிகளோடும்..
பூம் ..பூம்..மாடு ஒட்டி வந்த
காத்தவராயர் ..
பழைய புடவையும்..
கொண்டு வந்த குவளையில் நீரும்
மீந்த இரண்டு இட்டிலியும் பெற்று
போனார்..பின்னே மாடு.. மெளனமாக!
மதிய நேர வெயில்..
இரண்டு எடை விறகு வெட்டிப் போட்டு
வியர்வை துடைத்துக் கொண்ட வேலப்பன்..
அம்மா..என்று குரல் கொடுத்து..
பணம் வாங்கிப் போய் விட்டார்..
எல்லாவற்றையும் அமைதியாகப்
பார்த்தபடி வால் குறுக்கி படுத்திருந்த நாய்
வந்து விழும் சோற்றுக்கு
தவம் இருக்க..
பையனுக்கு போஸ்ட்மேன் தந்த
கடிதத்தில் எட்டாவது பாஸ்
என்ற செய்தி வந்திருந்தது..
..
ஹ்ம்ம்.
..
எல்லாமே ..அப்போது
அமைதியாய்தான் இருந்தது..
குடித்து கடனாளியாகி..
அந்த வீட்டை அப்பா
விற்கும் வரை ..
அவரைப் பொறுத்தவரை..
போனது வீடுதான்..
அவனுக்கு..
இன்னும் நிறையவே!