முதுமை

ரத்த நாளங்கள் அடங்கி நரை கூடும் நேரம்.
வெயில் சுட்டாலும் உடல் நடுக்கத்தில் ஆடும்.

ஆடைகள் உறைவிடம் தங்காத போதும்
அன்றைய கட்டுடல் இன்று ஆபாசமற்றுப்போகும்.

ஒப்பனையின் தேவை தீரும் காலம்:
பெற்ற தாயின் முகமும் கூட
சற்று மங்கலாய்தான் மனதில் தோன்றும்.

கடந்து வந்த கனவுகளின் நிழலில்
இளைப்பாறும் நேரம்;
இளைப்பும், இருமலுமே நம் உறவாகிப் போகும்.

மருமகள் வைக்கும் சோற்றுத்தட்டின் சத்தமும்
நமை எள்ளி நகையாடும் நேரம்;
புதைக்கும் வரை புரியாத பெண்டின்
உபசரிப்பு என் முன் நிழலாடும்.

நம் விரல் பற்றி நடை பழகிய - மகளின்
விரல் பற்றி நடை மறக்கும் காலம்;
விழுதுகளை நம்பும் வெற்று மரமாகிப்போவோம்

கடவுளென நாம் தெரிந்த மகனுக்கும்
வெறும் கடமை ஆகிப்போகும் நேரம்
பாரம் பல சுமந்த கழுதைகள் நாமும்
நமக்கே பாரமாகிப் போவோம்.

வாழ்வின் உட்சமெனும் நேரம்
மகளுக்கும் நாம் துட்சமாய் போவோம்.

முன்னவனின் இறப்பு செய்தி
மறைமுகமாய்
அடுத்தது நீயென சொல்லும்.

இதுதான் வாழ்வெனும் போதும்
மகனின் மகளோடு குழந்தை போல
இன்னும் சிலநாள் வாழத் தோன்றும்.

மகனே
மகளே
மருமகளே
அறுவது கடக்கும் போது
குழந்தை போல்
அன்பிற்கு ஏங்கும் எங்கள் நெஞ்சம்.
அறுபதை தொடுகையில்தான்
புரியும் இக்கவியும் உங்களுக்கு கொஞ்சம்.

எழுதியவர் : மு.ஜெகன் (8-Oct-15, 5:25 pm)
Tanglish : muthumai
பார்வை : 915

மேலே