வடை மழை 141015 ஆனந்தவிகடன்

தோழர்களே, இந்த வார ஆனந்தவிகடனில் "வடைமழை" என்ற எனது மூன்றாவது கவிதை வெளியாகியுள்ளது. ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! எனக்கு ஊக்கமளித்து வரும் எழுத்துத் தள கவிதைத் தோழர்கள் அனைவருக்கும் நன்றி!


வடை மழை
வயற்காட்டிலிருந்து திரும்பும்போது
கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில்
தேன் மிட்டாயோ வரிக்கியோ
மறக்காமல் வாங்கி வருவார் அப்பா
வானம் இருட்டிக்கொண்டு
மழை வரும் அறிகுறி தெரிந்தால்
உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா.
மழை வரும் நாளில் கண்டிப்பாக
வடை சுடுவாள் என்று
தூறலோடு ஓடிவருவார் அப்பா,
அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு.
‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று
ஓடிவரும் பிரியாக்குட்டியிடம்
அம்மா சொல்வாள்
‘இன்னைக்கு உங்கப்பா
உனக்கு மழை வாங்கி வந்திருக்கார்’ என.
அதையும் நம்பிவிடுவாள்
மின்னல் கண்ணைப் பறிக்கும் என்ற பயமின்றி
ஜன்னல் வழியே கைநீட்டி
மழை வாங்கிக்கொள்ளும் பிரியாக்குட்டி.

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (8-Oct-15, 1:38 pm)
பார்வை : 82

மேலே