கருப்பு பேன்ட், கருப்பு பெல்ட், கருப்பு நாள்

ஷியாம், நெய் மற்றும் கற்பூரம், சந்தனப் பொடி, தூபக் குச்சிகள் போன்ற பூஜை பொருட்களை சில்லறை விற்பனை செய்து வந்தான். அவன் மனைவி ஷாலினி. ஷியாம் தனது சொந்த சகோதரியின் மகளை மணந்தான். ஷாலினியின் வசீகரமான தோற்றத்திற்காக ஷியாம் விரும்பினாலும், தலைகீழ் உண்மை இல்லை. ஆனால், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தபோது, ஷாலினி கொஞ்சம் ஆலோசனை செய்தாளே தவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்நேரம், அவளுடைய தந்தை காலமாகி ஒரு வருடத்திற்கு மேலாகியிருந்தது. அவளுடைய குடும்பம் பொருளாதார விஷயத்தில் மிகவும் நலிந்து இருந்தது. இதனால் அவளுடைய மனம் ஷியாமை மணக்கவேண்டாம் என்று நினைத்தும், சந்தர்பம் சூழ்நிலை காரணமாக அவள் அந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தாள்.
ஷியாம், தனது சிறுவயதிலேயே தாயை இழந்தான். தன் தந்தையுடன் வசித்து வந்தான். அவன் ஷாலினியை விட அழகு குறைந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மை அவனுக்குள் இருந்துவந்தது.
சந்தைக்கு வாராந்திர விடுமுறையான திங்கட்கிழமை தவிர, ஷியாம் தனது நெய் கடைக்கு காலை 10 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2 மணிக்குள் மதிய உணவுக்காக வீடு திரும்புவான். சாப்பிட்டபின்பு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் மதியம் 3 மணிக்கு தனது கடைக்குச் சென்று இரவு 10 மணியளவில் வீடு திரும்புவான். தந்தை, தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் கழித்தார். அவர், காலையிலும் கோவிலுக்குச் செல்ல விரும்பினாலும், ஷியாம், அவரை வீட்டிலேயே இருந்து ஷாலினியின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி தெரிவித்ததால், காலை வேளைகளில் வீட்டிலேயே இருந்தார்.
ஒருமுறை, நெய் மற்றும் பூஜை பொருட்களை ஆர்டர் செய்து கொண்டு வருவதற்காக, ஷியாம் தனது வழக்கமான வணிக பயணமாக வெளியூர் சென்றிருந்தான். எதிர்பாராத காரணங்களால் வெளியூரில் தங்குவதை ஒரு நாள் நீட்டிக்க வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில், அவன் ஷாப்பிங் சென்று, ஷாலினிக்கு சில புடவைகள் மற்றும் ஆடைகளை வாங்கினான்.
ஷியாம் வீட்டிற்குத் திரும்பியதும், அவன் வாங்கி வந்த புடவைகள் மற்றும் பிற பொருட்களைப் பார்த்து ஷாலினி அவனை அரவணைத்தாள். அன்று இரவு படுக்கையறையில், ஷியாம் வித்தியாசமான ஒரு விஷயத்தை கவனித்தான். அவனது பேண்ட் மற்றும் சட்டைகளை தொங்கவிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஹேங்கரில், கருப்பு பெல்ட் இணைக்கப்பட்ட ஒரு கருப்பு பாண்ட் மாட்டப்பட்டிருப்பதை கவனித்தான். பெரிய ஒரு அதிர்ச்சியை உணர்ந்தான்.
ஷியாம் பெல்ட்டைப் பயன்படுத்தியதில்லை, கருப்பு பேண்டும் அணிவதில்லை. உறவினர்கள் சிலர் வந்து திரும்புகையில், பேண்ட்டை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் என்று நினைத்தான். அவன் இதை ஷாலினியிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்பினான். இன்னொரு முறை சிந்தித்தான். இதை ஷாலினியிடம் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.
யாராவது உறவினர்கள், தங்கள் வீட்டிற்கு வந்து சென்றிருந்தால், ஷாலினியோ அல்லது அவனது தந்தையோ தனக்குத் தெரிவிப்பார்கள் என்று நினைத்தான். மறுநாள் மாலை வரை, யாரும் அதைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.
அடுத்த நாள், ஷாலினி இல்லாதபோது, அவன் அந்த கருப்பு பேண்டை துழாவினான். பாக்கெட்டில் ஏதோ ஒன்றை உணர்ந்தான். ஒரு சிறிய பொட்டலம் இருந்தது. அதை பிரித்துப் பார்த்தான். அதற்குள் பிரவுன் கலர் பவுடர் கொஞ்சம் இருந்தது. ஏதாவது மருந்தாகவோ அல்லது பாக்கு பொடியாகவோ இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
மறுநாள் மாலை, ஷியாம் தனது கடையிலிருந்து அப்பாவை அழைத்து, அவர் இல்லாத நேரத்தில் யாராவது அவர்கள் வீட்டிற்கு வந்தார்களா என்று விசாரித்தான். அவரது தந்தை எதிர்மறையாக பதிலளித்தார். அப்போது ஷியாம் ஒரு அருவருப்பான உணர்வு கொண்டான். மனைவியின் நடத்தையை சந்தேகித்தான்.
ஷியாம், தனது வீட்டிற்குள் ஊடுருவியவர் யார் என்பதைத் தானே கண்டுபிடிக்க முடிவு செய்தான். ஷாலினி கவர்ச்சிகரமான உடல் அம்சங்களுடன் இருப்பதால், அந்த கருப்பு பேண்டுக்கு உரிய ஆளு, மீண்டும் தன் வீட்டிற்கு வரக்கூடும் என்று நினைத்தான். தானும் தன் தந்தையும் வீட்டில் இல்லாத மாலை நேரங்களில், அந்த நபர் மீண்டும் வருவான் என்று அவன் நம்பினான்.
ஒரு நாள், மாலை 6.30 மணியளவில் தனது கடையை மூடிவிட்டு, 7 மணியளவில் தனது வீட்டின் தெரு முனையை அடைந்த ஷியாம், தனது இரு சக்கர வாகனத்தை கொஞ்சம் தொலைவிலேயே நிறுத்திவிட்டு, மெதுவாக தனது வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் வாயிலுக்கு அருகே மறைவாக காத்திருந்தான். இரவு 8.30 மணி வரை, யாரும் அவன் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. ஷியாம் மீண்டும் தனது கடைக்கு புறப்பட்டான். மறுநாள், அவன் மீண்டும், மாலை அதே நேரத்தில் சந்தேக நபரைத் தேடினான். அவனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தனது கடையை அடைத்துவிட்டு, மாலை 6 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தை அடைந்தான். தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய திறந்த நிலத்தில் அமைந்துள்ள, ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். மாலை தந்தை கோவிலுக்குச் செல்வதை கவனித்தான். நேரம் மாலை 6.10 ஐ எட்டியபோது ஷியாமின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில், சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன், ஒரு சின்ன பெட்டியுடன் பக்கத்து வீட்டுக்குள் நுழைவதை கவனித்தான். அவன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான்.
ஷியாம், தன் வீட்டிற்குள் யாராவது நுழைவார்களா என்று ஆவலுடன் பார்த்தபோது, ஷாலினி வெளியே வந்து, கதவைப் பூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டிற்குள் சென்றதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். ஷியாமின் சந்தேகம் அதிகரித்தது. மெதுவாக தனது வீட்டிற்குள் சென்றான். சத்தம் போடாமல், தன் வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தான். பக்கத்து வீட்டின் திறந்த ஜன்னல்களுக்கு அருகில் இருந்த இடத்தில் நின்றுகொண்டான். இரண்டு மூன்று பேர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை அவன் கேட்டான்.
சுமார் ஐந்து நிமிடத்திற்கு பிறகு, ஒரு ஆண் பாடும் சத்தம் கேட்டது, அந்த ஆண் பாடியதை, யாரோ திரும்ப பாடுவதையும் அவனால் கேட்கமுடிந்தது. வீட்டிற்குள் நுழைந்தவர் ஒரு இசை ஆசிரியர், பாடும் மற்றவர்கள் இசை கற்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை ஷியாம் எளிதில் யூகித்தான். அவனுக்கு இசையில் பெரிய நாட்டம் எதுவும் இல்லை என்றாலும், அவன் கேட்கும் இசை திரைப்படப்பாடல் அல்லாத செமி கிளாசிக்கல் என்பதை அவனால் உணர முடிந்தது. அந்த மனிதர் பாடுவதும், அதையே ஒருவர் அல்லது இருவர் திரும்பத் சொல்வதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது.
இரவு 8.30 மணியளவில் காலிங் பெல் சத்தம் கேட்டு ஷியாம் கதவைத் திறந்தான். இவ்வளவு சீக்கிரம் வீட்டில் அவனைப் பார்த்து ஷாலினி ஆச்சரியப்பட்டாள். அவள் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, தான் பக்கத்து வீட்டிலிருந்து வருவதாகச் சொன்னாள்.
ஷியாம் அவளிடம் “எதற்காக அங்கு சென்றாய்? என்று கொஞ்சம் கடுமை நிறைந்த குரலில் கேட்டான். ஷாலினி பதிலளித்தாள் "எனது தோழி சீதா, அவள் வீட்டில் செமி கிளாசிக்கல் இசையை கற்றுவருகிறாள். எனக்கும் இந்த இசையை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால், அவள் வீட்டிற்குச் சென்று இசை ஆசிரியர் எப்படி கற்றுத்தருகிறார் என்று பார்க்க சென்றிருந்தேன். நீங்கள் அனுமதித்தால் நான் அவளுடன் சேர்ந்து செமி கிளாசிக்கல் பாடலைக் கற்றுக்கொள்வேன்".
அதை காதில் வாங்காதது போல ஷியாம் அவளிடம் “போன வாரம் நம் பெட் ரூமில், கருப்பு பெல்ட்டுடன் ஒரு கருப்பு பேண்ட் ஹாங்கரில் இருந்ததே? அது எவனுடைய பாண்ட்?
ஷாலினி சொன்னாள், “ஓ, அதுவா, நம் பக்கத்து வீட்டு சவிதா ஜி கொடுத்தது. மறுநாள் திரும்ப எடுத்துச்சென்றுவிட்டாள்.”
ஷியாம் கேட்டான் “நீ சொல்றது உண்மையா?
ஷாலினி உடனே வெளியே வராண்டாவிற்கு சென்று, தன் அண்டை வீட்டாரை “சவிதா ஜி, சவிதா ஜி” என்று அழைத்தாள். அடுத்த ஒரு நிமிடத்தில் சவிதா ஜி அவர்கள் வீட்டிற்கு வந்தாள். ஷாலினி அவளிடம் “சவிதா ஜி, என் கணவருக்கு நீங்கள் என்னிடத்தில் பாதுகாப்பாக வைத்திரு என்று சொல்லி கொடுத்துவிட்டு, மறுநாள் எடுத்துச் சென்ற கருப்பு பாண்ட் பற்றி என் கணவர் சந்தேகப்படுகிறார். நீங்கள் அவருக்கு புரியவையுங்கள்” என்றாள்.
சவிதா ஜி, “ஷியாம் ஜி, என் மகன் சமீப காலமாக போதை மருந்து உட்கொள்கிறான் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன். அவனுடைய நண்பனின் தாயாரிடமிருந்து நான் இதைப் பற்றி அறிந்தேன். எனது மகன் சுனில் மற்றும் அவரது மகன் சன்னி இருவரும் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் உட்கொள்வதாக அவர் என்னிடம் கூறினார். சன்னி வீட்டில் இல்லாத போது, அவள் அவனது பைகள், டிராயர்கள் அனைத்தையும் சோதித்து பார்த்ததாகவும் எதுவும் கிடைக்கவில்லை என்றாள். அப்போது எனக்கு திடீரென்று ஏதோ உறுத்தியது. நான் என் மகன் சுனிலின் உடைகளை கொஞ்சம் துழாவிப்பார்த்தேன். அவனது பேண்ட் ஒன்றில், ஒரு சிறிய பொட்டலத்தில் பழுப்பு நிறப் பொடியைக் கண்டேன். இது போதைப்பொருளாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டு, பதட்டத்தில் அந்த பேண்டை எடுத்து ஷாலினியிடம் பத்திரமாக வைத்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, மறுநாள் அதை திரும்ப வாங்கிக்கொண்டேன். உண்மையிலேயே அது போதை பொருள்தான் என்பது தெரியவந்தது"
சவிதா ஜி சென்ற பிறகு, ஷாலினியிடம் தன் செயலை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றான் ஷியாம்.
இதற்கிடையில் பக்கத்து வீட்டுத் தோழி சீதா அவர்கள் வீட்டிற்கு வந்து ஷியாமிடம் “சார், நான் ஒரு இசை ஆசிரியரிடம் செமி கிளாசிக்கல் மியூசிக் கற்றுக்கொண்டு வருகிறேன். ஷாலினிக்கு செமி கிளாசிக்கல் இசையைக் கற்றுக்கொள்வதிலும் பாடுவதிலும் மிகவும் விருப்பம். நேற்றுகூட, நான் இசை ஆசிரியரிடம் கற்றுக் கொண்டிருக்கையில் வீட்டிற்கு வந்து ஆர்வமாக கேட்டாள். அவளையும் என்னுடன் சேர்ந்து இசை கற்றுக்கொள்ள, நீங்கள் ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று சிபாரிசு செய்தாள்.
ஷியாம் “மாதாந்திர கட்டணம் என்ன? என்றான்.
சீதா, ‘ரூ.500 மட்டும்’ என்றாள்.
ஷியாம் “ஓ, இவ்வளவு பணமா? என்று கொஞ்சம் அதிர்ந்தவன் போல கேட்டான்.
சீதா “வாரம் ஐந்து வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பும் ஒரு மணி நேரம்".
ஷாலினி குறுக்கிட்டு, “தற்போது வேலைக்காரப் பெண்ணுக்கு துடைப்பது, மற்றும் பாத்திரங்களைக் கழுவுவதற்கு ரூ.2000/- PM செலுத்துகிறோம். அடுத்த மாதம் முதல் நானே பாத்திரங்களைக் கழுவி, ரூ. 1500 /- சேமிப்பேன், என் இசை வகுப்புகளுக்கு நீங்கள் எனக்கு ரூ.500/- செலுத்துங்கள்.
ஷியாம் “இது நல்ல ஏற்பாடு” என்றான்.
அடுத்த நான்கு ஆண்டுகளில், ஷாலினி, தனது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான பயிற்சியால், செமி கிளாசிக்கல் இசையை நன்கு கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் கற்பிக்க தொடங்கினாள். அவ்வப்போது, ஷாலினியை ஷியாம் தொடர்ந்து சென்று அவளது நடவடிக்கைகளை கவனித்த வண்ணம் இருந்தான். அவ்வப்போது தந்தையிடம் அவளது நடவடிக்கைகள் குறித்து, ஷாலினிக்கு தெரியாமல் விவாதிப்பான்
கருப்பு பேன்ட் மற்றும் இசை ஆசிரியர் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் அண்டை வீட்டாரின் பார்வையில் மட்டுமல்ல, ஷாலினியின் பார்வையிலும் ஷியாமின் மதிப்பை வெகுவாக குறைத்தன. ஷாலினி, தானே பாத்திரங்களைக் கழுவுவதைப் பற்றி அவன் மகிழ்ச்சி அடைந்தபோது, பணத்தின் மீதான அவனது பேராசையும் அம்பலமானது. இந்த இரண்டு விரும்பத்தகாத சம்பவங்களுக்குப் பிறகு தம்பதியினரிடையே கண்ணுக்குத் தெரியாத முக்காடு வளர்ந்தது.
ஒரு நாள் ஷாலினி “நாளையிலிருந்து நாம் பிரிந்து விடுவோம். என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன். நான் உங்களிடத்தில் ஒரு பைசா கூட உதவி கேட்க மாட்டேன். கடவுளுக்கு நன்றி, நமக்கு இதுவரை குழந்தைகள் இல்லை"
ஷியாம் வயிறு தலைகீழாக மாறுவதை போல உணர்ந்தான். இது கனவா என்று ஒரு கணம் யோசித்தான். உடனேயே “ஷாலினி என்னை மன்னித்து விடு. இனிமேல் நான் என் நடத்தையை மாற்றிக்கொள்கிறேன்” என்று ஷாலினியை கெஞ்சினான்.
ஷாலினி உறுதியான குரலில் கூறினாள் “உங்களுடைய அப்பா காலை வேளையிலும் கோவிலுக்குச்செல்ல விரும்பியபோது, என்னை வேவுபார்ப்பதற்காக அவரை வீட்டிலேயே இருக்கச் சொன்னீர்கள். என் விசுவாசத்தை நீங்கள் சந்தேகித்த அந்த நாட்களிலிருந்தே, நான் மனதளவில் இந்த வீட்டை விட்டு வெளியேறினேன். நான் இசை கற்க விரும்பியபோது, என்னை கேவலமாக நடத்தினீர்கள். என் இசையை முடிக்கத்தான், இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். இப்போது நான் ஒரு திறமையான பாடகியாகி, இசை கற்பித்தல் மூலம், கண்ணியமான தொகையை சம்பாதிக்கிறேன். இந்த சுவையற்ற நெய்-வாழ்க்கைப் போதும். நான் உங்கள் சகோதரியின் மகளாக இருப்பதால், நாம் எப்போதாவது என் அம்மாவின் வீட்டில் சந்திப்போம், குட் பை."
அந்த இரவு, அந்த ஜோடியின் கடைசி இரவாகவும், கருப்பு பெல்ட் போல ஷியாமின் வாழ்வில் ஒரு கருப்பு நாளாகவும் அமைந்தது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Sep-24, 7:05 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 45

மேலே