ராசுவின் டீ கடை
ராசுவின் டீ கடை
ராசா சூடா ஒரு டீ கொடுப்பா, டீ ஆற்றிக்கொண்டிருந்த ராசுபாண்டி திரும்பி பார்க்க ஒச்சாயி கிழவி நின்று கொண்டிருந்தாள்.
என்னா கிழவி இந்நேரத்துக்கு எந்திரிச்சு வந்திருக்க? ராசுபாண்டி டீயை விளாவிக்கொண்டே கேட்டான்.
க்கும்..தூங்கனாத்தானே ராசா முழிக்கறதுக்கு..! கிழவியின் குரலில் ஏக்கம் தொனித்தது.
இந்தா கிழவி உனக்கு என்ன கவலை, ஒரே பையனை பக்கத்துலதான இருக்கான், அவன் கூட போயி இருக்கறதுக்கென்ன?
அந்த வயித்தெரிச்சலை கேட்டு என் வாயை புடுங்காதா! முதல்ல ‘டீ’ ய போடு.
என்ன கிழவி இப்பவே காட்டுக்கு கிளம்பிட்டியா? கரணகடூரமான குரல்
கிழவி வெல்வெலத்து திரும்பியவள், ‘பாரஸ்ட் கார்டை’ பார்த்ததும் அப்படியே பம்மினாள், இல்லீங்க துரை, ஒரு மாதிரி இருந்துச்சு, அதான்.. சட்டென்று ஒதுங்கி போய் தரையில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டாள்.
எலே பாண்டி சூடா டீயும் இரண்டு வடையும் கொடுடா..!
இவனின் அதிகாரம் ராசுபாண்டிக்கு எரிச்சலை வரவழைத்தது, என்றாலும் ஒன்றும் சொல்ல முடியாது, கடை அவர்கள் எல்லைக்குள் இருக்கிறது. நாளையே காலி செய்ய சொல்லி விட்டால் அவ்வளவுதான் புழைப்பு நாறிடும்.
கிழவிக்கு போட்டு வைத்த ‘டீ’ இவன் கேட்ட பின்னால் கிழவியிடம் கொண்டு போய் கொடுக்க முடியாது, கொடுத்தால் அவ்வளவுதான், இவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான். அதுமட்டுமில்லாமல் கிழவி நாளை பின்னே காட்டுக்குள் போய் விறகெடுத்து வரவிடாமல் செய்து விடுவான்.
வேண்டாவெறுப்பாய் கையில் டீயையும், வடை இரண்டையும் கொண்டு போய் கொடுத்தான். அப்படியே “நாலு வடை பார்சல்” பண்ணிடு, இன்னைக்கு பாரஸ்டர் வந்தாலும் வருவாரு.
இதுக்கே காசு கொடுக்கமாட்டான், இதுல பார்சல் வேறயா? காசு..வாயிலிருந்து அவனையும் மீறி மெல்ல வெளியே வந்து விட்டது குரல், என்னடா கேட்டே? அவன் கேட்கவும், பயத்தில் ஒண்ணுமில்லை கட்டி கொடுத்துடறேன், இருந்த நாலு வடையையும் பேப்பரில் சுருட்டி அவனிடம் கொண்டு போய் கொடுத்தான்.
ஏவ்..ஏப்பமிட்டபடி அந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து பறந்தான்.
அதுவரை கடையில் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்த மூன்று நபர்களும் பெருமூச்சு விட்டபடி எழுந்தனர். பாவம்தான் ராசு, சொல்லியபடி எவ்வளவி ஆச்சு?
கிழிந்து தொங்கிய வேட்டியை தூக்கி, உள் போட்டிருந்த டவுசரில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்து வைத்தனர்.
மூணு பேருக்கு “ஆறு வடை மூணு டீ” அம்பது சரியா போச்சு, ராசு சொன்னான், சரியோ தப்போ எங்க கிட்ட வேற காசு கிடையாது, இன்னைக்கு வேலைக்கு போனாத்தான் சோத்துக்கு, உன்ர வடையும், டீயும்தான் சாயங்கால வரைக்கும், சொல்லிக்கொண்டே நகர்ந்தனர்.
அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாதவன் பணம் கொடுத்து சாப்பிட்டு போகிறான், அரசு சம்பளம் வாங்கியவன் கூசாமல் என் வயித்துல அடிச்சுட்டு போறான், மனதுக்குள் கறுவிக்கொண்டவனுக்கு அப்பொழுதுதான் கிழவியின் ஞாபகம் வந்தது.
ஐயோ கிழவி ‘டீ’ கேட்டாளே, அவசரமாய் டீயை போட்டு கிழவியிடம் சென்றான். கிழவி அப்படியே சுருண்டு படுத்திருந்தாள். கிழவி, கிழவி, பதட்டமாய் அவளை எழுப்பினான். கண்ணை திறந்தவள் எழ முடியாமல் விழித்து விழித்து பார்த்தாள். அவளை மெல்ல பிடித்து எழுப்பி உட்காரவைத்தவன் டீயை அவள் வாயருகே கொண்டு போய் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினான்.
நல்ல பசியில் வந்திருக்கிறாள், இது தெரியாத மடையன் நான், அவனையே திட்டிக்கொண்டவன், இரு கிழவி ஓடினான். மிச்சம் மீதி இருந்த வடை துண்டுகள், பிஸ்கட் துண்டுகள் எல்லாவற்றையும் எடுத்து வந்தவன் ஒவ்வொன்றாய் அவள் வாயில் வைத்து ஊட்டினான். மீண்டும் ஒரு “டீ”யை போட்டு கொண்டு வந்து கையில் கொடுக்க, அவள் கொஞ்சம் தெம்பாகியிருந்ததால் கையில் வாங்கி கொண்டாள்.
கிழவி நீ போறதா இருந்தா உன்ர வூட்டுலயே பொய்க்கோ, என் கடையில போய் என் புழப்பை கெடுத்துடாதே, கொஞ்சம் சிரித்தபடித்தான் சொன்னான்.
போடா மசிரு, இந்த கிழவி அம்புட்டு சீக்கிரமா போகமாட்டா? சீறியவளை பார்த்தவன் பாருய்யா கிழவிக்கு வர்ற கோபத்தை.
அதற்குள் இரண்டு பேர் விறகு கட்டுடன் வந்து இறக்கி வைத்துவிட்டு, தலை சும்மாட்டை கழட்டி விட்டு ராசு இரண்டு டீ கொடுப்பா..
இதா வந்துட்டேன், டீ போட்டு அவர்கள் கையில் கொண்டு போய் கொடுத்தான்.
ஸ்..அப்பா தலையெல்லாம் வேர்வையப்பா.. துடைத்துக்கொண்டே டீயை வாங்கி உறிஞ்சினர்.
என்னடா..விறகுகட்டைக்குள்ள சந்தன மரத்தை கடத்தறீங்களா?
குரல் கேட்டதும் டீயை குடித்து கொண்டிருந்தவர்கள் ஐயா, தூக்கி கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டு டம்ளரை தரையில் வைத்து விட்டு, மோட்டார் சைக்கிளுடன் தள்ளி நின்று கொண்டிருந்த பாரஸ்டரை நோக்கி ஓடினர்.
ஐயா சுள்ளி கட்டைதாங்க, பொருக்கியாந்தோம், நீங்க வேணா வந்து பாருங்கய்யா
ஏன் துரைங்க இங்க தூக்கிட்டு வந்து காட்டமாட்டெங்களோ?
இதா கொண்டு வாரோமுங்க, இருவரும் ஓடி வந்து அந்த கட்டை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு நின்று கொண்டிருந்தவர்கள் அருகே கொண்டு போனார்கள்.
கட்டை பிரிங்கடா, இருவரும் கட்டை பிரிக்க, பாரஸ்ட்ர கால்களால் அதை தட்டி ஏண்டா இதெல்லாம் நல்ல கட்டைங்கடா, மரத்துல இருந்து உடைச்சிருக்கீங்க?
ஐயா இல்லீங்க ஐயா, அவர்கள் பதற்றத்துடன் கையை கட்டி பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.
ம்..ம்.. ஏண்டா இப்படி காட்டுக்குள்ள இருக்கற மரத்தை எல்லாம் வெட்டிட்டே இருந்தா.. என்னடா பண்ணறது? எங்களை எதுக்கு இங்க கவர்ண்மெண்டு உக்காரவச்சிருக்கு? சிரைக்கவா
ஐயா..தயவு பண்ணுங்க, அவர்கள் கெஞ்சியபடி இருக்க, ராசு பாண்டி டீ கடையில் இருந்தபடியே நடப்பதை கோபத்துடன் பார்த்து கொண்டிருந்தான்.
போடா போய் டீ வாங்கியா, ஒருவனை அனுப்பினார் பாரஸ்ட்காரர். வேகமாக வந்தவன் ராசு டீ ஒண்ணு போட்டு கொடு, அப்படியே சிகரெட்டு பாக்கெட்டு இருந்தா ஒண்ணு வாங்கிட்டு வா, அங்கிருந்தபடியே கத்தினார்.
சிகரெட்டு பாக்கெட்டுகளை ஒளித்து வைத்தபடியே ,’சிகரெட்டு’ கடையில் விக்க கூடாதுன்னு அவருதான் சொல்லிட்டு போயிருக்காருன்னு சொல்லிடு, டீயை அவன் கையில் கொடுத்து விட்டு சொன்னான் ராசு பாண்டி. வைத்தபடியே, இல்லாவிட்டால் மறு நாள் வந்து இதற்கும் வந்து ஏதாவது கேட்பான்.
‘டீ’யை கொண்டு போய் கொடுத்து விட்டு அய்யா நீங்கதான் அதையெல்லாம் வெச்சு விக்க கூடாதுன்னு சொன்னீங்களாம்.
சே..தனக்குள் முணுமுணுத்தவன் சட்டையில என்னடா? வலுக்கட்டாயமாக இவன் சட்டைப்பைக்குள் கையை விட்டவர், கையில் எடுத்து பார்த்து ‘ பீடி’ கட்டை பார்த்தவுடன் ஏண்டா பீடி வச்சிருக்க, இதைய எடுத்துட்டு போயி குடிக்கறேன்னு பத்த வச்சிடறீங்க?
ஐயா அப்படி எல்லாம் இல்லீங்க, நாங்க வூட்டு போயிதாங்க குடிப்போம். சரி ஆளுக்கு அம்பது கொடுத்துட்டு போய் சேருங்க.
ஐயா, கட்டை கடையில போட்டா அமப்து ரூபாதாங்க கிடைக்கும், எங்களை விட்டுடுங்கய்யா,
ஏய், இப்ப நான் சொன்னதை செய்யறீங்களா இல்லை உங்களை..
ராசு பாண்டி திடீரென கத்தினான், ஓடியாங்க, கிழவி மண்டைய போட்டுட்டான்னு நினைக்கறேன், ஓடியாங்க, ஐயா பாரஸ்டுகாரரையும் கூட்டிட்டு வாங்க, அங்கிருந்தே கத்தினான்.
திடீரென அவன் அங்கிருந்து பெரும் குரலில் கத்தவும், பாரஸ்ட் திடுக்கிட்டு தான் அங்கு போகலாமா? யோசித்தார். போலாம், ஆனால் தன்னையே எல்லா செலவுகளுக்கும் “ஜவாப்தாரி” ஆக்கி விட்டால்..! யாரால் செய்ய முடியும்? அதுவும் இவனுங்களுக்கு. எப்படியும் நூறு இருனூறு வாங்காமல் விடமாட்டான்கள்.
சரி..சரி.. அவன் கூப்பிடறான், போய் என்னாசுன்னு பார்த்து ஏற்பாடு பண்ணிக்குங்க, அவசரமாய் சொல்லியவர் வண்டியை வேகமாக எடுத்து அங்கிருந்து விரைந்தார்.
இருவரும் வேகமாக கடைக்குள் வர, கிழவி கடை மூலையில் மூச்சு நன்றாக இழுத்து விட்டு, தூங்கி கொண்டிருந்ததை பார்த்தார்கள். ராசு பாண்டியை அவர்கள் பார்க்க, சீக்கிரம் விறகு கட்டையை தூக்கிட்டு போய் சேருங்க, மறுபடி திரும்பி வருவாங்க.
அப்ப உன்னைய கேப்பானுங்களே?
ம்.. கிழவிக்கு மறுபடி உசிறு வந்திடுச்சுன்னு சொல்லிடறேன், பக பகவென சிரித்தான்.
இந்தாப்பா டீ காசு இரண்டு வாய்தான் குடித்திருப்பார்கள், அதற்குள் அது தரையில் விழுந்து முழுவதும் சிந்தி போயிருந்தது.
வேணாம், நீங்கதான் குடிக்கவே இல்லையே..!
இது நல்லாயில்லை, ‘டீ’ போட்டு எங்க கையில கொடுத்துட்டியின்னா நாங்க குடிச்சாலும், குடிக்காட்டியும் காசு கொடுக்கணுமில்லை, வேகமாய் காசை கொடுத்து விட்டு விறகு கட்டை இறுக்கி கட்டி தூக்கி கட்டி தலையில் வைத்து நடந்து சென்றனர்.
ராசுவுக்கு இவர்களையும் அவர்களையும் சேர்த்து வைத்து பார்த்தான். ஒன்றுமில்லாதவனிடம் இருக்கும் நியாய உணர்வு..!