பொங்கலும் பெண்களும் நினைவுகளும்

ஒரு பொங்கல் நன்னாளை, தாய் பிறந்த ஊரில், உறவுகளோடு கொண்டாட எண்ணி சென்னையில் இருந்து அந்த சிற்றூருக்கு போய் சேர்ந்தேன். மழலைகளுக்கு, சிறார்களுக்கு, விடலைப் பருவங்களுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என அனைத்து வகையினருக்கும் வித விதமான விளையாட்டு போட்டிகளை இரண்டு நாட்களும் நடத்தும் ஊர் அது.

விடுதலை பெற்றது முதல், அந்த அந்த காலத்து இளைஞர்கள் விழாவினை எடுத்து நடத்தி வந்திருக்கிறார்கள். எனது அம்மாவின் சின்னையா (எனக்கு தாத்தா முறை), கபடி போட்டிக்கு நடுவராக செயல்படுவதை பார்க்கும் பொழுது, அவர் இளைஞராக இருக்கும் பொழுது கண்டிப்பாக விழாவினை எடுத்து நடத்தி இருப்பார் என்பதும், அவர்களுக்கு பொங்கல் என்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கடந்து போகிற மற்றொரு நாள் இல்லை என்பதும் எனக்கு புரியும்.

பள்ளி நாட்களில், விளையாட்டு வகுப்புகளை தவிர்க்க நினைக்கும் வெகு சிலரில் நானும் ஒருவன். ஆனால் விளையாட்டு போட்டிகளை காணப் பிடிக்கும். இருந்தாலும், இரண்டு நாட்களையும் பார்வையாளனாக மட்டுமே கடந்து செல்ல நான் விரும்ப வில்லை.

எனக்குப் பிடித்த கணிதத்தின் மூலம், நான் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர் கொண்டதைப் போல, எனது உறவுகளும் எதிர் கொள்ள வேண்டும் என கணக்குப் புதிர் போட்டி ஒன்றை வடிவமைத்து நடத்தினேன். பொழுது போக்கொடு சேர்த்து கொஞ்சம் மூளைக்கும் வேலை.

மாட்டுப் பொங்கல் அன்று மாலை நடைபெறும் - திருமணம் ஆன ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வடம் இழுக்கும் போட்டிக்கு, முழு ஊரும் வந்து சேர்ந்து விடும். நான்கு அணிகளாக பிரித்து,
இரண்டிரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், இறுதிப் போட்டியில் மோதும். ஒவ்வொரு போட்டியின் பொழுதும் கரவொலிகளும், சப்தங்களும், விண்ணை முட்டும்.

அந்த வருடம் போட்டி முடிந்தவுடன், நாங்கள் வடத்தை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுது, எனது சித்தி எங்களுக்குலாம் வடம் இழுக்குற போட்டி வைக்க மாட்டீங்களா'ன்னு கேட்கவும், வச்சுட்டா போச்சு ன்னு சொல்லி, அவங்களுக்கும் போட்டி வச்சோம். அந்தப் போட்டியின் பொழுதும் கரவொலிகளும், சப்தங்களும், விண்ணை முட்டின. ஆனால் போட்டியில் கலந்து கொண்ட பெண்களின் கைகள் மருதாணி போடாமலே சிவந்தது வேறு கதை.

இந்த மாதிரியான விளையாட்டு போட்டிகள் முடிந்ததும், கடைசியாக நடக்கும் கலை நிகழ்ச்சிகள், அருமையான உணர்வை தரும்.


அடுத்த நாள் மாலை மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல, மிதவைப் பேருந்தில் இடம் தீர்ந்து விட்டதால், குளிர் சாதன வசதியுடன் கூடிய மிதவை பேருந்தில் முன் பதிவு செய்து வைத்து இருந்தேன். கிராமத்தில் இருந்து சிறு நகரத்துக்கு செல்லும் பேருந்து ஒன்று வராததாலும், முன்னமே கிளம்பி யிராத என்னாலும், மதுரை பேருந்து நிலையத்துக்கு தாமதமாகவே வந்து சேர்ந்தேன். அத்தனை நாள் தாமதமாக கிளம்பும் பேருந்து அன்றைக்கு மட்டும் சரியான நேரத்திற்கு கிளம்பி சென்று இருந்தது.

வேறு வழி என்ன என்று ஆராய்ந்த பொழுது, ஒரு பெரிய வரிசை என் கண்ணில் பட்டது. பொங்கல் முடிந்து, சென்னை செல்ல முன் பதிவு செய்யாமல் சாதாரண பேருந்துகளில் பயணிக்க, பயணச்சீட்டு பெற நின்ற வரிசை அது. அந்த வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்த என்னால், பத்து நிமிடத்திற்கு மேல், நிற்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் முன்னே சென்ற பொழுது, இரண்டு பெண்கள் அந்த வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை பார்த்ததும், பெண்களுக்கு என தனியாக வரிசை இருந்தது நியாபகம் வர, அவர்களிடம் சென்று, உங்களுக்கு தனியாக வரிசை இருக்கிறது என்று சொல்லவும், அவர்கள் சந்தோசமாக சென்று அந்த சிறிய வரிசையில் நின்று கொண்டார்கள். அவர்களிடம் போய், எனக்கு ஒரு பயணச்சீட்டு வாங்கி தர முடியுமா என்று கேட்கலாம் என நினைத்து அவர்கள் நின்று இருந்த இடம் நோக்கி நகர்ந்தேன். எனக்கு முன்னமே, இன்னொரு இளைஞர் அவர்களை அணுகி இருந்தார். அதெல்லாம் முடியாது என அந்த பெண்கள் சொன்னது தூரமாய் இருந்த எனக்கு அவர்களின் உடல் மொழியின் மூலம் புரிந்தது.

நாம் போய் கேட்டாலும் அதே நிலை தான் என மூளை சொன்னாலும், ஒரு முறை கேட்டு தான் பாரேன் என்றது மனது. கடைசியாக ஒரு பயணச்சீட்டு வாங்கி தர முடியுமா என அவர்களிடம், கேட்டே விட்டேன். அவர்களோ, சிறிது நேரம் யோசிக்க, நான் தான் உங்களுக்கு இந்த வரிசையை பத்தி சொன்னேன். கொஞ்சம் உதவி செய்யுங்களேன் என்று சொன்னேன். உதவி கிடைத்ததா, இல்லையா? உதவியுடன் முடிந்ததா என்பதை எல்லாம் நீங்களே யூகித்து கொள்ளுங்கள் மக்களே...!!!


இப்படி எல்லாம் சொல்லி அடுத்த பாகத்துக்கு உங்களை காக்க வைக்க ஆசை தான். ஆனால், பெரியதாய் எதுவும் நடக்காததால், இங்கே இப்படி முடிக்கிறேன். அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். நான் நன்றி சொல்லி விட்டு, பயணத்தை தொடங்கினேன். ஒரே பேருந்தில் நாங்கள் பயணித்தாலும், நாங்கள் பேசி கொள்ளவே இல்லை. அவர்களின் முகம் மறந்தாலும், அந்த நிகழ்வு மறக்காமல் இருக்கிறது...!!!

எழுதியவர் : மதன்குமார் (22-Sep-24, 12:34 pm)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 74

மேலே