வெற்றியாளர்கள் செய்ய மறுக்கும் 20 செயல்கள்

வெற்றியாளர்கள்

எப்போதுமே வெற்றியாளர்கள் எதைச் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்றுதான் பார்ப்போம். ஆனால் பல செயல்களை அவர்கள் செய்யாமலே விட்டுவிடுவார்கள். அவை எவை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1. பணத்திற்காக வெற்றி பெற வேண்டும் என எண்ணமாட்டார்கள்

பெரும்பாலான வெற்றியாளர்கள் பணத்தினை வெற்றியாகக் கருதியதே இல்லை. மன அமைதி அல்லது மற்றவர்களுக்கு உதவுவதைத்தான் அவர்கள் வெற்றியாகக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் பணத்தினை வாய்ப்புகளைத் தரும் கதவாகவும், சில வேளைகளில் சுகம் தரும் பொருளாகவும் மட்டுமே கருதுகின்றனர். பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என அவர்கள் நம்புகின்றனர்.

2. திட்டமிடாமல் ஒரு நாளை தொடங்குவதில்லை

ஒவ்வொரு நாளையும் எப்படி பயன்படுத்த வேண்டும், அதற்கான திட்டமிடல்களாக எவற்றை செய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அன்றைய நாளில் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தையும் ஒரு பட்டியலாக வைத்திருப்பார்கள். அதனை எந்த வரிசைப்படி செய்ய வேண்டுமெனவும் முன்கூட்டியே தீர்மானித்திருப்பார்கள்.

3. ‘முழுநிறைவு’ என எதையும் இலக்காக கொண்டிருக்கமாட்டார்கள்

‘அய்யய்யோ நான் இதை முடித்தே ஆக வேண்டும்’ என்று அவர்களின் மனம் அவர்களை வருத்தாது. முழுநிறைவினை பெறுவதற்கான பசியினைக் காட்டிலும், இதுவரை செய்த செயல்களில் தவறுதல்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்துவதில் அவர்களின் கவனம் சற்று அதிகமாக இருக்கும். வெற்றிக்கான செயல்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும், தங்களது வளர்ச்சிக்கான செயல்முறை குறித்து ஆய்வு செய்வார்கள்.

4. ‘நெகடிவ்’ பேச்சாளர்களின் கூட்டத்தில் இருக்கமாட்டார்கள்

எந்த செயல் எடுத்தாலும் இது நடக்காது, இது உருப்படாது என்று கூறுவதற்கென்றே ஒரு குழு எப்போதும் நம்மைச் சுற்றி இருந்தால் நாம் செய்யும் செயலின் மீதான நம்பிக்கை மிகவும் குறைவாக மாறிவிடும். இதனால்தான் அத்தகைய ஆட்கள் இருக்கும் கூட்டத்தில் வெற்றியாளர்கள் இருப்பதே இல்லை. அவர்களை இலக்கினை நோக்கி உற்சாகப்படுத்துபவர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்குதான் இவர்களும் இருப்பார்கள்.

5. கஷ்டங்களை பிரச்சினைகளாக எண்ணமாட்டார்கள்

வெற்றியை நோக்கிச் செல்லும்போது கண்டிப்பாக பல தடைகள் வரும் அவற்றையெல்லாம் பிரச்சினைகளாகக் கருதினால் இலக்கினை அடைய முடியாது. அதனால்தான் எல்லாத் தடைகளையும் தங்களை வலுப்படுத்த வந்த வரப்பிரசாதமாக எண்ணுவார்கள்.

6. தோல்வியால் துவண்டுவிடமாட்டார்கள்

ஒவ்வொரு தோல்விலும் துவண்டுவிடாமல், அந்த தோல்வியில் இருந்த தங்களைப் பற்றிய குறைகளைக் கண்டறிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். தோல்வியும் வெற்றிக்கான பாதையில் உள்ள கற்கள், அவற்றைக் கண்டு பயந்தால் இலக்கினை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

7. பிரச்சனைகளால் கீழே விழுந்தாலும் வருத்தப்படமாட்டார்கள்

ஒரு பிரச்சினையின்போது அதிலே தொடர்ந்து சிந்திப்பதால்தான் ஒரு பிரச்சினை பல பிரச்சினைகளாக மாறத் தொடங்குகிறது. உங்கள் எண்ணங்களையும், கவனத்தையும் ஒன்று சேர்த்து உங்கள் செயலில் இறங்குங்கள். உங்கள் கவனம் பிரச்சினையிலிருந்து மாறும்போது, அதில் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படமாட்டீர்கள். இதைத்தான் வெற்றியாளர்களும் செய்கின்றனர்.

8. தங்களின் சுயமரியாதையினை மற்றவர்கள் தீர்மானிக்கும்படி விட்டுக்கொடுக்கமாட்டார்கள்

மற்றவர்களின் வார்த்தைகளினாலோ அல்லது செயல்களினாலோ தங்களுக்கு சுயமரியாதை கிடைக்க வேண்டுமென அவர்கள் எண்ணமாட்டார்கள். தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம், தங்களின் மதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். மற்றவர்களிடம் தங்களது திறமையினை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் இருக்காது, அத்துடன் தனக்கென தானே வகுத்துக்கொண்ட வழிமுறைகள் இவர்களை எப்போதும் திருப்தியடையச் செய்யும்.

9. சாக்கு-போக்கு சொல்லமாட்டார்கள்

தங்களின் தவறுதல்களுக்கு தாங்கள்தான் காரணம் என்பதை எந்தவித ஒளிவு மறைவுமின்றி ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் நினைத்தது கைகூடாத நேரங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்களே பொறுப்பேற்றுக்கொள்வார்கள். அத்துடன், இலக்கு பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டுமென எண்ணுவார்கள். அப்படி நிறைவேறாத காலங்களில் எந்த சாக்கு-போக்கினையும் அவர்கள் முன்வைப்பதில்லை.

10. அடுத்தவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படமாட்டார்கள்

நாம் அடைய முடியாத இலக்கினை மற்றவர்கள் அடையும்போது பொறாமை வருவது மனித இயல்புதான். என்றாலும், மற்றவர்களுக்கு நம்மைப் போல் பிற திறமைகள் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இதை மனதில் வைத்துதான், மற்றவர்கள் வெற்றி பெற்றால் அதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு முன்னேற நினைப்பார்கள் வெற்றியாளர்கள். அவர்களைக் கண்டு பொறாமைப்படமாட்டார்கள்.

11. தங்களுக்கு அன்பு கொடுப்பவர்களை புறக்கணிக்கமாட்டார்கள்

வேலை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் நம்மை விரும்புபவர்களான குடும்பம், மனைவி மற்றும் நண்பர்கள் வேலையினை விட முக்கியமானவர்கள். இந்த அன்பு நம்மை இலக்கினை நோக்கிக் கொண்டு செல்வதிலும் முக்கியப்பங்கு வகிக்கும்.

12. வேடிக்கையினை வேலைகளை தவறவிடுவதில்லை

வேடிக்கையில்லாத வேலை எரிச்சலை ஏற்படுத்திவிடும். ஆண்டில் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் கடவுள் படைத்த இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்!. நாம் செய்யும் வேலை நமக்கு பிடித்தாற்போல் இருந்தால்தான் நம்மால் தொடர்ந்து வேலை செய்ய முடியும். இப்படி வேலைகளை பிடித்தாற்போல் மாற்றுவதற்கு வேலை மற்றும் பொழுதுபோக்குகளை சம அளவில் வைத்திருக்கவேண்டும். அதனால் பொழுதுபோக்குகளை வெற்றியாளர்கள் எப்போதும் ஒதுக்கியதே இல்லை.

13. உடலை அதிகம் துன்பப்படுத்தமாட்டார்கள்

உடல் உழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்றாலும், நமது உடலை கவனிக்காமல் வெறும் வேலையினைப் பார்த்து இலக்கினை அடைவதால் ஒரு பயனும் இல்லை. இதனால்தான், இலக்கினைப் பற்றிய வேலைகள் ஒருபுறம் நடந்தாலும், தங்களது உடலையும் அவர்கள் பேணிக்காத்துக்கொள்கின்றனர்.

14. வீண் இலக்குகளை வைக்க மாட்டார்கள்

ஏதாவது இலக்கு வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைக்கு சம்பந்த்ம் இல்லாத இலக்குகளை வைக்க மாட்டார்கள். தங்கள் கனவு இலக்கிற்கு தகுந்தாற்போல் சிறு இலக்குகள வகுத்து பெரிய இலக்குகளை அடைவார்கள். தான் வாழ்க்கையில் இருக்கும் தற்போதைய நிலை குறித்து அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

15. வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள்

வெற்றியாளர்கள் வெறும் பேச்சினை மட்டும் பேசிக்கொண்டிருப்பவர்கள் அல்ல, பேசியபடி செய்தும் காட்டக்கூடியவர்கள். அவர்கள் சொன்னால் கண்டிப்பாக செய்துகாட்டுவார்கள், அவர்களை நம்பலாம் என்று மற்றவர்கள் கூறும் அளவிற்கு தங்களது வார்த்தைகளின் மீது பற்று கொண்டிருப்பார்கள்.

16. மற்றவர்களால் தாங்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள்

தங்களின் எண்ணங்களுக்கு அல்லது இலக்கிற்கு ஒவ்வாமல் இருப்பவர்களிடம் இருந்து வெற்றியாளர்கள் விலகியே இருப்பார்கள். தங்களின் பாதையில் முன்னேறிச் செல்வது மட்டுமே தனக்கு மகிழ்ச்சியைத் தரும் என எண்ணுவார்கள். மற்றவர்கள் செய்யும் செயல்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நடந்துகொள்வார்கள்.

17. கடந்தகாலத்திலேயே நிலைத்திருக்கமாட்டார்கள்

கடந்தகால பிரச்சினைகளை சுமப்பதால் தங்களது வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும் என்று வெற்றியாளர்கள் கருதுவார்கள். அதனால்தான் பழைய வலிதரும் காலத்தினை மறந்துவிட்டு தற்கால மகிழ்ச்சிக்குத் தேவையான வேலையினை செய்வார்கள்.

18. மாற்றங்களை தடுப்பதில்லை

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதைப் போல் தங்களின் திட்டங்கள், வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் மாறாக்கூடும், அதனால் அத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்களே தவிர, அவற்றினை தடுக்கமாட்டார்கள்.

19. ஒருபோதும் கற்றுக்கொள்வதை விட மாட்டார்கள்

எத்தனை வயதானாலும் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது என எண்ணுவார்கள். எவருக்குமே அனைத்தும் தெரிந்திருக்காது, ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து எதையாவது கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கற்றுக்கொள்வதற்கான தனது மனநிலையினை எப்போதும் ஆயத்தமாக வைத்திருப்பார்கள்.

20. நன்றியில்லாமல் நாட்களை முடிக்கமாட்டார்கள்

தனக்கு கிடைத்த ஒவ்வொன்றிற்கும் நன்றி கூறுவார்கள். இதை தங்களுக்குள்ளே கூறிக்கொள்வார்கள். இந்த நன்றி தனக்கு உதவியவர்கள், தன் மீது அன்பு செலுத்தியவர்கள் மற்றும் அன்றைய நாளினை சிறப்பான நாளாக மாற்ற உதவியவர்கள் என யாராகவும் இருக்கலாம். இந்த நாளின் இறுதியில் மனதால் கூறப்படும் நன்றி, மன அமைதியையும், உறுதியான எண்ணங்களையும் கொடுக்கவல்லது.

இவையனைத்தும் உங்களுக்கும் பயன்படும் செயல்முறைகள்தான். இதில் உங்களுக்குப் பொருந்திய செயல்முறைகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வும் பிரகாசம் பெறும்.

_______
tamilenfo

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 7:29 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே