காவியத்தலைவனுக்கு ஓர் கவிதாஞ்சலி
முகவையில் பிறந்து நாட்டிற்கு
முகவரி தந்த முன்னோடியே!
அகவையின் அழைப்பிதழ் ஏற்று
ஆழ்ந்த துயில் கொண்டீரோ!
மண்ணுலகில் பணி முடிந்ததாய் நினைத்து
விண்ணுலகம் பயணித்தீரோ!
பூமிதனில் பூத்த புனித
புன்னகை மனிதரே!
எண்ணிய எண்ணமெல்லாம்
செயலாக்கும் செயல் வீரரே!
சவால்களின் சங்கமமே!
சாதனைகளின் சரித்திரமே!
அண்டை நாட்டு மக்களையும்
அன்பால் நேசிக்க வைத்தவரே!
அறிவியல் அறிவால்
அகிலத்தை வென்றவரே!
சாதிமத மொழி இன வேறுபாடின்றி
சங்கமித்த சான்றோனே!
சங்கத்தமிழில் கவிப்பாடிய
சத்தியசிலனே!
காலத்தால் அழியாத காவியமே!
கடைக்கோடி தமிழனின்
கருத்தில் வாழும்
காப்பிய நாயகனே!
உயரிய நோக்கத்தால்
உயர்ந்த உத்தமரே!
உழைப்பின் மேன்மையை
உணர்த்திய உன்னதமே!
எளிமையின் இலக்கணமே!
எல்லைகள் கடந்த இலக்கியமே!
தன்மையின் தனித்துவமே!
தலைமையில் மகத்துவமே!
மாணவர்களின் மாணிக்கமே!
மங்கையர் மனதின் ஆதிக்கமே!
காளையர்களின் கனவு நாயகனே!
களங்கரை விளக்கமே!
கன்னத்தில் கைவைத்து நீ
கண்ட கனவுகள் எல்லாம்
உலக ஜீவராசிகளின்
உன்னத வாழ்வைப்பற்றியே!
இரண்டாயிரத்து இருபதில்
இளைய சமுதாயத்தில்
இன்னொரு முறை உயிர்த்திட
இந்த ஜென்மம் விடுத்தீரோ!
காற்று தென்றலாகி வீசும் வரை
கடல் அலை கவிப்பேசும் வரை
காலம் உம்மை மறவாது!
கடமையில் தவறாது!
இதுவரை புண்ணிய தலம்!
இராமேஸ்வரம் - உங்களால்
இனி ஆகும் புனித தலம்!