கோடுலு
கோடுலு
================================ருத்ரா
கோடுலு
"கோபுலு"வின் அச்சுப்பிழை அல்ல.
அச்சுத்தொழில் பிழைத்ததே
அவர் கோடுகளில் தான்.
கோபுலு எனும்
பென்சில் பிரம்மா
படைக்காத காகித கர்ப்பமா?
கோடுகள் போட்டு
வாழவேண்டும் என்று சொன்ன
வாழ்க்கையின் வேதங்களையே
புள்ளிகள் ஆக்கி கோடுகள் ஆக்கி
சுழித்து சுழித்து சுநாமி ஆக்கியவர்.
அம்பதுகளில்
குடும்பத்தின் இதயங்களை
நாவல்கள் ஆக்கிய
இலக்கிய மேதை
லெட்சுமியின் எழுத்துக்கள்
இருமினாலும் தும்மினாலும்
அவை துடிக்கும்
கோடுகளின் காடுகளின்
ஆரண்ய காண்டத்து அற்புத சிற்பி இவர்.
பத்திரிகைகளின்
கதை நிகழ்ச்சிகளின்
எழுத்துப்பிழியல்களில்
இவர் தூரிகையே
இரத்தமும் சதையும்
அப்பித்தந்தது.
கொத்த மங்கலம் சுப்பு
எழுத்தில் தந்ததை
இவர்
எழுந்து நிற்க செய்தார்.
அதில் அவர் காட்டிய
இசை நரம்பையே
புடைக்கச்செய்தது
"சண்முக சுந்தரத்தின்" நாயனம் மூலம்
நடிகர் திலகம்.
இது போல்
எத்தனை எத்தனை
பகீரதத் தவங்கள்
உருவங்கள் காட்டின.
நாவலின் இமயம்
தி.ஜானகிராமன்
கும்ப கோணத்தையும்
தியாக ஐயரையும்
உயிர்த்து உயிர்த்துக்காட்டியதெல்லாம்
இவர் தூரிகை விட்ட
மூச்சுகள் அல்லவா!
அரசியல் கார்ட்டூன்களில்
அவரது கூரிய எழில் மிக்க நோக்கு
அற்புதமானது.
மனிதரில் மாணிக்கமான
பண்டிட் நேருவின்
கூர்மையான மூக்கும்
கோட்டில் "புன்னகைக்கும்"
ரோஜாப்பூவும்
உலக சரித்திரத்தின்
சுடரேந்தி நிற்பதில்
இவர் கோடுகளே
அந்த "அரசியல் நடுநிலைமையின்"
பூமத்திய ரேகையை
பூமிக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
கடவுள் நினைத்தார்.
இது வரை நாம் படைத்ததை
பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடிந்த கதை என்று
சொல்லுகிறார்களே.
மனிதனை மனிதனாகவே
உரு பிடித்துக்காட்டும்
அந்த புதிய பிரம்மாவை
நம் பக்கத்தில் வைத்துக்கொள்ளுவோம்
என்று பேராசை கொண்டார்.
அதனால்
நாம் இழந்தோம்
இந்த
"மனித ஜியாமெட்ரி"யின் யூக்ளிட்டை"