உளறுவாயன்

அக்பருக்கும் பீர்பாலுக்கும்மடிக்கடி ஏற்படும் மனவேறுப்பாடுஅன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது. எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணணவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

"சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்!" என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்கு சென்றார்.

சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலைஉடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

"இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே?" என்று கேட்டார் அந்த அமைச்சர்.

"இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்!" என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பிந்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... "இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்??" என்று கேட்டார் அந்த அமைச்சர்.
"எல்லாம் காரணமாகத்தான்!" என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.

"என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடடய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா?" என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

"மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்!" என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

"எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?" என்றார் அக்பர் சினத்துடன்.

"தில்லியில் நான் தங்கி இருப்பது உண்மைதான். ஆனால் தங்களின் மண்ணில் நான் நடமாடவில்லை. அமைச்சரைக் கேட்டுப் பாருங்கள். அவரே என் வீட்டுக்கு வந்து பார்த்தாரே!" என்றார் பீர்பால்.

அக்பர் அமைச்சரை நோக்கினார்... உடனே அமைச்சர் பதில் அளித்தார்..
"மன்னர் அவர்களே! பீர்பால் தம் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியிலும் மண்ணைக் கொட்டி பரப்பி இருக்கிறார். பயணம் செய்த வண்டியிலும்கூட மண்ணைக் கொட்டி இருந்தார். எதற்காக இப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்டேன்.. காரணமாகத்தான் என்று சொல்கிறார்!"

அப்போது பீர்பால், "மன்னர் பிரான் அவர்களே,"என் வீட்டின் உள்ளும் வெளியிலும் நான் பயணம் செய்யும் வண்டியிலும் நான் உலவும் என் வீட்டுத் தோட்டங்களிலும் நான் கொட்டி பரவி இருப்பது சீன தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மண். அது தில்லியின் மண் அல்ல. தங்களுக்கு சொந்தமான மண்ணில் நடமாடக் கூடாது என்றீர்கள். அதனால்தான் சீன மண்ணில் நடமாடிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வாறு தங்கள் உத்தரவை மீறிய செயலாகும்?" என்று அப்பாவி போல் பதில் சொன்னார்.

பீர்பால் விளக்கம் கொடுத்ததும் அக்பர் உட்பட அவையினர் சிரித்தனர். மன்னருக்கு சினம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. வாய்விட்டுச் சிரித்தவாறே, "உம்மை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே தெரியவில்லை!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி தன் உத்தரவினை வாபஸ் வாங்கிக் கொண்டார் அக்பர்.


உளறுவாயன்

எழுதியவர் : முக நூல் (15-Oct-15, 7:36 pm)
பார்வை : 544

மேலே