அந்த அரசனும் அரசியும்

பீர்பாலை அமைச்சர் பதவியில் இருந்து விரட்ட அவரது எதிரிகள் பல முயற்சிகள் செய்து தோற்றுப்போயிருந்தனர். அவர்கள் அனைவரும் அரசியாரின் தம்பியை அனுகி பீர்பாலை அரசவையிலிருந்து நீக்க ஏதாவது செய்தால் அந்த இடத்தில் உங்களை இருத்தலாம் என்றும் இதனால் நீங்கள் மன்னருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூபம் போட்டனர். பதவி ஆசை முற்றியதாலும் மன்னருக்கு மிக நெருக்கமான முறையில் பீர்பால் இருப்பதால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியாலும் அரசியாரின் தம்பி இதற்கு சம்மதித்தான்.

அவன் அரசியாரிடம் சென்று ஏதாவது நாடகமாடி பீர்பாலை தொலைத்துக் கட்டு. இல்லையேல் நான் தற்கொலை செய்து கொள்வதை தவிற எனக்கு வேறு வழியில்லை என்றும் மிரட்டலானான். அரசியும் தம்பியின் மேலிருந்த பாசத்தால் நாடகமாட சம்மதித்தாள். அவன் கூறிய திட்டப்படி அன்று அரசி நாடகமாடினாள்.

அன்று மன்னர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசியார் அழுது கொண்டிருந்தாள். மன்னர் அதிர்ந்தார். காரணம் வினவினார். அரசியோ பீர்பால் மிகவும் செருக்குற்று இருப்பதாகவும் அரசியாகிய தன்னை மதியாமல் நடந்து கொள்வதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனவும் கூறி விம்மலானாள். அரசர் மேலும் அதிர்ந்தார். "பீர்பாலை எந்த காரணமும் இல்லாமல் எப்படி பதவி நீக்கம் செய்வது?. அவர் போல அற்புத மனிதர் கிடைக்கமாட்டார். இதோ பார், அவர் உன்னை மதிக்குமாறு நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கூறு. அதைச் செய்வோம். அது நடக்கவில்லை என்றால் நீ கூறுவதைப் போல அவரை பதவி நீக்கம் நீக்கம் செய்யலாம். என்ன சரியா?" என்றார் மன்னர்.

அரசியும் சம்மதித்தார். அரசியின் யோசனைப்படி இதற்காக ஒரு நாடகமாட இருவரும் தீர்மானித்தனர். அரசி கூறியதாவது "நீங்கள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிச் சென்றது போல நடியுங்கள். பீர்பால் சமரசம் செய்ய வருவார். நீங்கள் அரண்மனைக்கு வர மறுத்துப் பிடிவாதம் பிடிக்க வேண்டும். உன்னால் முடிந்தால் மகாராணியாரை இங்கே வந்து பார்க்கச் சொல்" என்று சவால் விடுங்கள். இதில் தோற்றால் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கேளுங்கள். அதற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார். என்னைச் சமாதானம் செய்ய வருவார். என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டால் நான் மதித்து வருவேன். இல்லையேல் நான் மிகவும் பிடிவாதமாக வர மறுத்து விடுவேன். அவர் முயற்சியில் தோற்பார். தானாகவே பதவியை விட்டு விலகி விடுவார்." என்று யோசனை கூறினார்.

மன்னரும் இதற்கு சம்மதித்தார். மன்னருக்கு பீர்பால் தான் வெல்வார் என்று நன்றாகத் தெரியும். மறுநாள் மன்னர் அரசியிடம் கோபப்பட்டு அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டார் என்று செய்தி காட்டுத் தீ போல பரவியது. பதறிய பீர்பால் மன்னரைச் சென்று பார்த்தார். மன்னரோ திட்டமிட்டபடி "பீர்பால், நான் அரண்மனைக்குத் திரும்ப வேண்டுமானால் எனது ஒரு நிபந்தனையை நீர் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

"எந்த நிபந்தனை என்றாலும் சொல்லுங்கள். நான் நிறைவேற்றுகிறேன்"

"அது உம்மால் முடியாது"

"நிச்சயம் முடியும்"

"முடியாது, ஒரு வேளை நீர் தோற்றால்.."

"நான் அமைச்சர் பதவியை விட்டே விலகிவிடுகிறேன்"

எல்லாம் திட்டப்படி நடப்பதால் மன்னர் புன்னகைத்தார்.

"பீர்பால், கோபித்துக் கொண்ட நான் தானாகவே அரன்மனை திரும்பமாட்டேன். அரசியார் என்னை இங்கே வந்து அழைத்துச் சென்றால் தான் வருவேன். உன்னால் முடிந்தால் அவரை இங்கே அழைத்து வா" என்றார் அக்பர்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாகவே பீர்பால் மனதிற்கு தோன்றியது. அவர் அரசியை வரவழைக்கத் திட்டம் போட்டார்.

கண்களில் கண்ணீருடன் அரசியை சந்தித்தார் பீர்பால். "பீர்பால் என்ன நடந்தது? ஏன் இந்தக்
கண்ணீர்?"

"என்ன சொல்வது அரசியாரே, மன்னர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி பாதை மாறி போகிறாரே. மனம் வெறுத்துப் போனதால் நான் பதவி விலகிவிட்டேன்"

"என்ன? விலகிவிட்டீர்களா...? தெளிவாகச் சொல்லுங்கள்.. மன்னர் நீக்கினாரா? நீங்களே
விலகினீர்களா?"

"அரசியாரே.. நானே விலகிக்கொண்டேன்."

"காரணம்.?"

"என்னதான் உங்கள் மீது கோபம் இருந்தாலும் உங்களுக்கு துரோகம் செய்வதுபோல மன்னர் நடந்து கொள்வாரா? நான் எப்படிச் சொல்வேன்.. அரசியாரே..உங்களை நிரந்தரமாக ஒதுக்கி வைத்து விட்டு மன்னர் வேறு திருமணம் செய்ய பிடிவாதமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்"
என்றார் பீர்பால்.

அரசிக்குத் தூக்கிவாரிப்போட்டது. விளையாட்டுக்குத்தானே சண்டை போட்டேன். மன்னர் நிஜமென்று நம்பிவிட்டாரா என எண்ணிக் குழம்பினாள். அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே பீர்பாலை அழைத்துக் கொண்டு மன்னரிருக்கும் இடம் தேடி ஓடலானாள்.

பீர்பாலுடன் அரசியார் வருவதைக் கண்ட அக்பர் மகிழ்ந்தார். தான் நினைத்தது போலவே பீர்ப்பால் சவாலில் ஜெயித்ததை கண்டு பூரிப்படைந்தார். மிகுந்த பதைபதைப்புடன் வந்த அரசியை சமாதானப்படுத்தினார் அக்பர்.

பீர்பாலும் அரசியிடம் தான் நடத்திய நாடகத்தை தெரிவித்தார். அரசி பீர்பாலின் புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகவும் பாராட்டினார். இருவரும் மகிழ்ச்சியுடன் பீர்பாலுக்கு அன்பளிப்புக்கள் கொடுத்து மகிழ்வித்தனர்.

அந்த நாள்முதல் அரசி பீர்பாலை விரட்டும் எண்ணத்தை அடியோடு கைவிட்டார்.

அந்த அரசனும் அரசியும் இவங்கதானோ!

எழுதியவர் : முக நூல் (15-Oct-15, 7:34 pm)
பார்வை : 563

மேலே