எரியும் ஏடுகளில் யார் நீ - தேன்மொழியன் - தவமணிக்கு
எரியும் ஏடுகளில் யார் நீ - தேன்மொழியன் - தவமணிக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிரவு கனவுகளை அள்ளி குவித்த நொடிகளில், உன் புருவத்தில் ஊறி நிறையும் ஒவ்வொரு துளிகளும்... துயரத்தின் தூண்களை உடைக்கவே விழுந்தன ..உடலின் உணர்வுகளை மோதி உடைத்த கோபங்கள் சீரிய செயலின் தாகங்கள் ..அடர் வனத்தில் ஓர் தவமென சுடர் விடும் உன் குணத்தை மெல்ல தீண்டி நின்றாலும் உண்மை தாண்டி செல்லாது ...உடல் மாறி செல்லும் உயிரின் நுண்ணிய துகளும் உனை பிரிய மறுக்கும், பிறவி நீ ..
தையல் நூலில் விரல் குத்திய பின்னும்..வெள்ளை சட்டையின் பட்டனை தரை முழுக்க தேடி மீண்டும் கோர்த்த உன் விழிகளோடு... எனது சிறு வயது பயணங்களை எந்நிலத்தில் எழுதினாலும் ஒரே நிறத்தில் ஒளிரும் ..உம் வீட்டின் முன் இன்றும் வேர் சாயாமல் நிற்கும் அம்மரத்தின் அடியில் இரவு முழுக்க ஆடிய எனது கால்கள் என்றும் மறவாது ...எனது தாய் மாமனின் தனிமை பொழுதுகளை ...அவரின் உடல் உள்வாங்கிய மதுவின் ஒவ்வொரு துளியும் ...தனை பிரிந்த மனைவியின் ஆன்மாவோடு பேசும் தவத்தின் மந்திர மொழிகள் ....அவரோடு நின்ற மஞ்சள் நிற மாலை பொழுதுகள் இரவின் நிலவை இடைவிடாது ரசிக்கும் ஓர் குழந்தையின் விரல்கள் மீட்டிய இசையின் ராகங்கள் .. அத்தை மீதான அத்தனை காதலையும் அவரின் உடல்மொழி உளி போல் செதுக்கி சென்றது என் நெற்றிப் பொட்டில் ...ஓர் பிரிவின் வலி உயிரை உரித்து செல்லும் என்பதை அவரின் மரணம் அழுத்தமாய் சொன்னது என்னுள் ..அன்றைய எனது வயதை கூட நான் அறியாதவன் ..
பனி விழும் அதிகாலை நேரத்தில் ..வாய்க்கால் நிறைந்து செல்லும் நீரோடு நடந்து செல்லும் எனது கால்களை எட்டி உதைக்கும் உனது பாதங்கள் ..விழுந்து எழுந்து நான் அழுந்து வந்தாலும் ...கல் தடுக்கி விழுந்ததாய் சொல்லும் உனது குரல் மீதே நம்பிக்கை கொள்ளும் என் அம்மா ...உன் மீதான நம்பிக்கையில் எனது விழி நீர் வெள்ளமென பெருகினாலும் அவை யாவும் எனது பிழையென நீளும் ..உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் சண்டை தாண்டிய சமாதான வேகங்கள் ..நம் வயலில் அசையும் அத்தனை தென்னை மரங்களும் அறியும் ஏறி செல்லும் என்னையும் எனை இழுத்து தள்ளும் உன்னையும் ..இன்று வரை உன் மீதான நம்பிக்கையில் மாறாமல் நிற்கும் என் அன்னை முன் ..இன்றும் எனது பல தவறுகள் நானே கல் தடுக்கி விழுந்தது போலவே நீள்கிறது ..
வெள்ளை சட்டையை சலவை செய்ய ஒரு கரிப்பெட்டி இல்லாமல் போனாலும் சுடும் கஞ்சியை டிபன் பாக்ஸ்சில் ஊற்றி சலவை செய்த நேரங்கள் சட்டை காரலை சுடுவதுபோல் காலத்தையும் சுட்டு நிற்கிறது ..அந்த வாசற்படி அப்படி இருந்திருக்க கூடாது ..உன் உயரம் நீ அறியாத போது ..உள்நுழையும் வேளையில் உன் உச்சியை உடைத்து ஒரு வடுவாய் நீள்கிறது இன்றும் ...கதவை பூட்டிய காலங்களில் ஜன்னல் ஏறிய கால்கள் ..சில சமயம் கதவு திறந்திருக்கும் போதும் அப்படியே செய்தது ...சன்னலில் உடல் நுழைய வயதுகளில் கதவு பொருத்திய சுவரில் ஏறி குதிப்பது குறையவில்லை ...வெள்ளி இரவுகளை வெண்ணிற இரவாக்கும் ஒரே ஒரு டிவியில் இருபது கண்களாவது இமைக்காமலிருக்கும்..அந்த பாட்டி உள்பட ..சனிக்கிழமையை சாகச இரவாக்கும் அனுமானும் ..ஞாயிறுகளில் சக்திமானும் நம் வாரங்களை வண்ணத்தில் வரைய வரைய வருடம் வளர்ந்தது ..இடையில் நீயில்லா காலங்களில் என் நடையில் வேகமும் கோபமும் குறைந்ததை இப்போது உணர முடிகிறது ..
தலையில் கொட்டி கொல்ல துடித்த உனது நொடிகளை வயலில் வம்பிழுக்கும் மட்டை பந்துகளில் மறந்து போனோம் ...அங்கும் உனது தோல்வியே எனது இலக்கு ..எதிர் அணியில் இருக்கும் வரை ..நினைக்க நினைக்க வரப்பில் வழுக்கி விழுந்த தழும்புகள் சிரிக்கிறது ...ஊர் வியக்கும் முரண்களை அரணின்றி தகர்த்தோம் .. வேக வேக மோதலில் தாக எல்லைகளை நீட்டி வைத்தோம் ...நீட்டிய எல்லை உடைக்க ஈட்டி செதுக்கிய மூளையின் கூர்மை வளர்த்தோம் ..நம்மிடம் வழிகாட்டுதல் தவறாகி போக சாத்தியமில்லை ..சத்தியமாய் அப்படி ஒரு வழிகாட்டுதல் வந்ததேயில்லை ..
விரக்தி குடித்த நரம்புகளில் துரத்தி நின்ற நம் கனவுகளை நீயே முதலில் துவங்கினாய் ..அத்தனையும் முதல் படி ..தடையென விழுந்தவை பண வழி ..கவிழ்ந்து கிடந்த காடுகளில் நிமிர்ந்து நடக்க உழைத்தோம் ..அந்த ஏழு மணி வானொலி செய்தி நேரங்களில் உனது பள்ளிக்கான பாளையம் நோக்கிய ஓட்டங்கள் உறுதியின் உயிர் துளியென மறதியிலும் மறவாமல் சுரக்கும் ..எத்தனை கோபம் என்றாலும் அத்தனையும் ஏடுகளில் எழுத்தாக்கும் உன் விரல் உணரப்படாத வலிகளை தாளுடன் மட்டுமே தழுவி நின்றது ...அடத்தின் மேல் ஒட்டடை படிந்த அத்தையின் புகைப்படத்தில் அழுகை மட்டும் பிறந்ததில்லை ...அது கண்ணீர் சுரக்கா கனவுகளை தாங்கியே புதையலாகிறது பூட்டி வைக்கும் போட்டி முழுக்க ...சந்தன சட்டை சாயம் போகும் முன்னே பல நட்பின் காயம் படிந்தது ..அடுத்த ஆண்டிலிருந்து அதிக இடைவேளை தருவாயென அறியுமுன்னே அழுகை அடைத்து ...உயிர் உரித்த உடல்களின் மரணவிறைப்பை பாதை முழுக்க தெளித்து ஒரு மங்கலான வெளிச்சத்தில் மறைந்தாய் ..
பின் சந்திந்த நேரம் முழுக்க ஏதோ ஒரு பணி நிமித்தமாகவே நொடிகளை பகிர்ந்து கொண்டோம் ...பெரும் இடைவேளை கடந்து என் கல்லூரி தொடங்கியே பின்னே பழையப்படி ஒரு வழி பாதையில் நடந்தோம் ..மேகம் திட்டிய மண்ணிற்கு தாகம் தீர்ப்பது நீர் தான் ..இரவு முழுக்க பேசிய ஒரு மொட்டை மாடி நினைவை காற்றலை கவிதையென காலம் முழுக்க சுமக்கிறேன் ..வழி தேடுபவை வலிகளே..நீ பேசி முடிக்கும் வார்த்தையின் ஆழம் அனுபவ கோர்வையின் நீளம் ...பக்குவங்களும் உன்னிடம் பகிர்ந்த வண்ணமே பிறந்து உயர்ந்தது ...ஜன்னல் தழுவா மழைத்துளியின் எண்ணம் மின்னல் தாக்கிய கன்னமென சிவக்கும் ..உன் கோபங்களில் குரல் தாழ்த்திய தருணங்கள் அன்பின் அடையாளங்கள் .. நழுவி செல்லும் கழிவுகளை மறக்கும் மனதைப் போல ..உதறி சென்ற உள்ளங்களின் உச்சரிப்பில் உறைந்துப் போன என் நெஞ்சத்தை ஒரு சித்திரம் போலவே உணர்கிறேன் ..மண் வாசம் ஒவ்வொரு நாசிக்குள்ளும் ஒரு மணம் தான் ...அதையும் உணராது பணம் நுகரும் பிணமென நகர்வது பிழையான வாழ்வில் நுழைதலே...
ஈரம் ஈர்க்கும் மர வேர்களில் தேவைகள் குவிந்து கொண்டே செல்கிறது ..நாம் வளர்ந்தே தீர வேண்டும் என்பது மட்டுமல்ல ..நாம் வளர்க்கவும் வேண்டுமென்ற முதல் தலைமுறையின் முகங்கள் நாம் ..கலை ஆவதும் சிலை ஆவதும் மட்டுமே நம் வினை ...விலை போவது பெரும் குறை ..சுய மரியாதை சுவடுகளில் உயிர் தீவை உடைக்கும் உளிகள் ஏராளம் ...சிலையை செதுக்கும் உளியை விட .. உளிகளை உடைத்த சிலைகள் தனி ரகம்..அவ்விடத்தில் நிற்கும் நமது சுய அலசல் பல முறை பயனற்று போனதுண்டு ...நீரில் மூழ்க தெரிந்தாலும் தாகம் என்பது மனிதனின் அவசியம் ...சிதறும் உன் செல்களை சேர்க்க என் சிந்தனை குவிக்கும் செயல்கள் நீளும் என் வாழ்நாள் முழுக்க ..
நீ தொட்டு நிற்குமிடம் நேசத்தின் நிழலென சுழன்றால் சுகமே ..அப்படி அமைய வைப்பதும் நம்மிடமே ..ஆயிரம் கனவுகளில் ஓரே எதிர்பார்ப்பை எதிர்கொள்வதை விட ...ஒரே கனவில் ஆயிரம் எதிர்பார்ப்பை எதிர்கொள்வது மூழ்காத மூளையின் முழு வடிவம் ...அதே சமயம் ஈராயிரம் எதிர்பார்வை நிறைவு செய்தலே வாழ்வில் நிம்மதி தரும் ..ஆழத்தில் அமைதியென கிடக்கும் சுழலாத நீர் துளிக்கே அடர்த்தி அதிகம் ..கற்று கொடுத்தவன் நீ ..கற்க சொல்பவனும் நீ ..
ஆடம்பர இறுக்கத்தில் இதயம் தொலைக்காமல் ..நிமிர்ந்து செல்லும் உன்னை நான் வியந்தே பார்க்க வேண்டும் என்றும் ...பிளந்து கிடக்கும் கிணறையும் ...உழவே முடியா வயலையும் மீட்க மட்டும் என்னோடு உடனிரு ...
..........................................................தவம் தாங்கிய வரங்கள் யாவும் நீ ஒருவனே .................................................
- தேன்மொழியன்